முரசொலி கடிதங்கள் · 3476
நஞ்சை எண்ணாதே; நம்பிக் கெடாதே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3476. நஞ்சை எண்ணாதே; நம்பிக் கெடாதே!
உடன்பிறப்பே,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி பாடிய தமிழுக்கு -
“தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்று பாவேந்தர் பாடிய தமிழுக்கு -
வலிவும் பொலிவும் சேர்த்து -
வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட -
குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் விழா எடுக்கிறோம்.
ஆம்; தமிழுக்கு விழா!
தமிழ் இனம் விழாமல் இருக்க விழா!
அந்த விழாதான் உடன்பிறப்பே! உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
ஐம்பதுக்கு மேற்பட்ட அயல் நாட்டு அறிஞர் பெருமக்கள் - இந்தியத் திருநாட்டின் எல்லா மாநிலங்களிலும் வாழ்கிற மொழி வல்லுநர்கள் - அனைவருமே தேன் குடத்தை மொய்க்கும் ஈக்கள் போல - தென்னகம் நோக்கி வருகின்றனர்.
திராவிடத்தை -
திராவிடர் நாகரீகத்தை -
அவர்தம் கலையை -
கலாச்சாரத்தை -
பண்பாட்டை -
பழக்க வழக்கங்களை -
தென்னகப் பலாக்கனியாம் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச்சுளைகளை; கலை நயமிக்க கவிதைச் சுளைகளைப் பருகிடவும் - அவற்றின் இனிமை கண்டு உருகிடவும் - ஆயிரமாயிரம் பேர் தமிழ்ச் சான்றோர் வருவது மட்டுமல்ல; அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார் - மொழிப்புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும் - அன்னையின் முலை முகட்டில் அருந்தியத் தமிழ்ப் பால் அளித்த வலிமை கொண்டு - மலை முகடேறி மாற்றாரை வீழ்த்தும் வேலாக - மதி மயக்கம் பெற்று விதி வழி நடக்கும் வீணர்க்கும் கூன் நிமிர்த்தி - வெற்றி பல காண்பதற்கு - இமயத்தின் நெற்றியிலே; எங்கள் தமிழ் வென்ற வரலாறு எழுதுதற்கு- இங்கு வந்த தமிழரெலாம்; எஃகு நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றார் என்பதனை அனைத்து நாடும் அறிவதற்கு - ஆதி அந்தமிலா என் தமிழன்னைக்கு வலிவு சேர்த்து - வையத்து மொழிகளிலே அன்றும் இன்றும் - இனி என்றும் - இதுவே முதல் மொழி எனும் புகழ்ப் பதாகையைத் தூக்கிப் பிடிக்க வாரீர்! வாரீர்! என்று வண்ணத் தமிழகத்துச் சோலைக் குயில்களை நான் அழைக்கின்றேன், கோவை மாநகருக்கு! துள்ளி வரும் வேலாக; ஆவேசத்தை அள்ளி வரும் வாளாக; கிள்ளி எறிவோம் பகையை என்று கிளர்ந்தெழும் சிங்கமன்றோ நீ? அத்தகைய களத்திற்கு நான் உன்னை அழைக்கவில்லை; புலவர் பெருமக்களும் - அறிஞர் பெருமக்களும் - கவிஞர் பெருமக்களும் -
அமர்ந்து அவதானிக்க இருக்கின்ற அழகுமிகு அறிவு நிறை அரங்குகளுக்கு அன்பே! உன்னை நான் அழைக்கின்றேன்! என் அழைப்பில் தோய்ந்திருக்கும் தூய்மை உனக்குத் தெரியும்! அதில் நிறைந்திருக்கும் அன்பின் வெளிப்பாட்டை நீ அறிவாய்! ஓர் உடன்பிறப்புக்கு மற்றோர் உடன்பிறப்பு எழுதும் மடல் - உயிரைப் பிழிந்து தீட்டும் உயிரோவியமல்லவா? அதனாலதான் நானே நேரில் வர முடியாமல் இந்த உயிரோவியத்தை - உனக்கு அனுப்பிவைக்கின்றேன்! ஓவியத்தின் வனப்பிலே உள்ளத்தைப் பறிகொடுத்துக் கொண்டிருக்காமல் - பயணம் புறப்படு, பாசமிகு உடன்பிறப்பே! எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறதா? ஏதோ ஒரு விலங்கின் “காம்போதி” என்பார்களே! அந்தக் “காம்போதி” தான் கேட்கிறது! “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவாம்! நீ அதை நம்ப மாட்டாய்! எனக்குத் தெரியும்! ஆனால் தஞ்சையில் அன்றொரு நாள் உலகத் தமிழ் மாநாடு நடத்தி தன் பெயரை வைத்தே - தமிழ்த் தாய் வாழ்த்து தயாரித்து பாடிய தையலார் யார் என்று உனக்கு மறந்து விட்டதா? மறந்திருந்தால் இதோ நினைவுபடுத்திக் கொள்!
“அவ்வை ஆண்டாள் அம்மையுமே அழகுறப் பாடி தமிழ் வளர்த்தார் அன்னை முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து வளர்க்கின்றார்! பாரதத் தாயும் தமிழ்த் தாயும் பாங்குடன் சேர்ந்து மிளிர்வது போல் வாராது வந்த மாமணியாம் வாழ்க அன்னை ஜெயலலிதா!”
தன்னையே “தமிழ்த் தாய்” என்றும் “வாராது வந்த மாமணி” என்றும் பாட்டு போட்டு - பாடிக் கேட்டு - பரவசப்பட்டவர்களுக்கு; தம்பி ஏ.ஆர். ரகுமான் இசையில் “பிறப்பொக்கும்” என்று தொடங்கி - சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும்
இணைத்து - இறவாப் புகழ் கொண்ட நம் முன்னோர்க்கு நான் செலுத்திய காணிக்கை பாடல் எங்கே?
தஞ்சை மாநாட்டில் இவர்கள் தயாரித்துக் கொண்ட தற்புகழ்ச்சி பாடல் எங்கே?
“நல்ல விருந்தில் கெட்ட பொருளை நினைக்கிறாயே அண்ணா;” என்கிறாயா? மன்னித்து விடு! பழைய கதையை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அப்பாவி சீட கோடிகளுக்கு அது மறந்து விடக் கூடாதல்லவா? அதனால் தான்
தஞ்சையை நினைவூட்டினேன்!
நஞ்சை எண்ணாதே தமிழ்நாடே! அதை
நம்பிக் கெடாதே தமிழ்நாடே!
என்றுரைத்திட
உன் உடன்பிறப்புக்கு
உரிமை உண்டல்லவா?
அன்புள்ள, மு.க. 17-6-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 354–357. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.