அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3479

முரசொலி கடிதங்கள் · 3479

“பந்த்”தால் விளையப் போகும் பயன் என்ன?

நாள் 7.7.2010சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3479. “பந்த்”தால் விளையப் போகும் பயன் என்ன? உடன்பிறப்பே,

பாரதீய ஜனதா கட்சி - அ.தி.மு.க. - இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஓர் அணியில் நின்று ஜூலை 5 ஆம் தேதி இந்தியா முழுமையையும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஒரு “பந்த்” நடத்தப் போகிறோமென்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்கு ஊடகங்கள் கூரேற்றி ஓரிடத்தில்கூட சோடை போகாமல் அந்தப் “பந்த்” நடைபெற வேண்டு மென்று - மதவாத சக்திகளான பா.ஜ.க. வினரும் - இடதுசாரி அணியினரும் - அ.தி.மு.க. வினரும் - அறிக்கை விடுத்ததோடு - அந்த “பந்த்” மகத்தான வெற்றி பெற வேண்டுமென்பதற்காக - “பந்த்” பற்றிய பரபரப்பான செய்திகளையெல்லாம் வெளியிட்டு - அவற்றைப் பரப்பியும் வந்தார்கள். அந்த அணியினுடைய முக்கிய தலைவர்கள் - இந்த “பந்த்” அமைதியான முறையில் நடைபெற வேண்டுமென்று செய்தியாளர்கள் மூலமாக கருத்து வெளியிட்டார்கள். “பந்த்”தின் காரணமாக பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டுக்கு இழப்பு என்று ஒரு செய்தியும் - நாட்டின் தேசிய உற்பத்தியில் பதிமூன்றாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கைகளின் மூலமாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன. பொதுவாக “பந்த்” - வேலை நிறுத்தம் போன்றவை தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்த வேண்டிய நிலை இருக்குமானால் அதனை நான் என்றைக்கும் எதிர்த்து எந்தவிதமான கருத்தும் தெரிவித்ததில்லை. கூறப்படும் குறிக்கோள், கொள்கை, கோரிக்கை இவற்றை அடைவதற்கான முயற் சிகளில் ஈடுபடுவோர் யாராயினும் அவர்களை நாம் சந்தேகித்ததில்லை.

“சபாஷ்” என்று தட்டிக் கொடுக்கவும் தவறியதில்லை!

ஆனால் கூறப்படும் குறிக்கோள், கொள்கை இவற்றில் எவ்வளவு நியாயமிருந்தபோதிலும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளில் வாய்மை தவறினாலோ அல்லது வன்முறை தலை காட்டினாலோ - அப்போது குறிக்கோள் வெற்றிக்கு இரண்டாவது இடத்தையும், வழிமுறை தவறாத வாய்மையான நிலைக்கு முதல் இடத்தையும் தருபவர்கள் நாம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை - விலை வாசி உயர்வு கண்டனம் போன்ற எத்தனையோ பிரச்சினைகளில் மக்கள் நலன் - மக்கள் உரிமை இவற்றை முன் வைத்து நாம் போராட்டங்களை கழகத்தின் சார்பாக தனித்து நின்றும் நடத்தியிருக்கிறோம்; பிற கட்சிகளின் துணை கொண்டும் நடத்தியிருக்கிறோம்.

அத்தகைய போராட்டங்களில் ரயில் நிறுத்தக் கிளர்ச்சிகளைக்கூட - பேருந்து மறித்தல் கிளர்ச்சிகளைக்கூட திடுதிப்பென்று அறிவிக்கப்படாத நிகழ்ச்சியாக அவற்றை நாம் நடத்தியதில்லை. குறிப்பிட்ட ஒரு தேதியில் - குறிப்பிட்ட ஓர் இடத்தில் - காலையோ, மாலையோ - பெயர் குறிப்பிட்ட இந்தத் தோழர்கள் - இந்த நேரத்தில் ரயில் நிறுத்தப் போராட்டத்திலோ - பேருந்து மறித்தல் போராட்டத்திலோ ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டு - அவர்கள் எந்த இடத்திலிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டு - அந்த இடத்திற்கு வருவார்கள் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டு -

காவல் துறையினரும் அந்த இடத்திற்குச் சென்று அவர்களை கைது செய்து - சிறையில் அடைப்பார்கள். இது இன்று நேற்றல்ல; 1938 ஆம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்க்க சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் தந்தை பெரியாரின் ஆணைப்படி; தமிழர் படையினர் நடத்திய திராவிட இயக்கத்தினருடைய மொழிப் போராட்டத்திலிருந்து இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.

ஒன்றிரண்டு போராட்டங்களில் பிற கட்சியினர் புகுந்து வம்பு, தும்பு செய்த காரணத்தினாலோ - அல்லது காவல் துறையினரின் அத்து மீறலாலோ -விதி விலக்காக ஒழுங்கு முறையான அமைதி வழி கிளர்ச்சிகள் கூட அமளி வழிக்கு திரும்பியிருக்கக் கூடும்.

ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அப்படி ஒரு போராட்ட முறையைக் கடைப்பிடிக்கும் இயக்கமாக திராவிடர் இயக்கம் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே இருந்ததில்லை.

ஆனால் இடது சாரிகளும், பாஜ.க.வினரும், அ.தி.மு.க. வினரும் அணி சேருகிறார்கள். அந்த அணியில் அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்தக் கிளர்ச்சியில் அமைதி கெடக் கூடாது என்பதை வலியுறுத்தினாலுங் கூட - அதையும் மீறியோ அல்லது அத்வானியின் அறிவுரைக்கு இதுதான் பொருள் என்று கருதிக் கொண்டோ:

இதோ பாட்னாவில் பாவையர் பட்டாளம் படையெடுத்து பாதையை மறைக்கும் காட்சியையும் - அவர்கள் கரங்களில் பளபளக்கும் பட்டாக் கத்திகளையும் பார்க்கும்போது “பாரத் பந்த்” நடத்தியவர்களே - இவற்றை விரும்பினார்களா என்று ஐயுறத்தான் வேண்டியிருக்கிறது.

எப்படியோ - தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவில்லை என்பதையும் - அங்கொன்றும் இங்கொன்றுமாக - பேருந்துகள் மீது கல்வீச்சுகள் நடைபெற்று சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை யென்றும் பா.ஜ.க., இடதுசாரிகள் ஆளுகின்ற மாநிலங்களில்தான் இயல்பு வாழ்க்கை முடங்கியதாகவும் இந்த அணியின் ஆதரவு ஏடுகள் செய்தி வெளியிட்டிருப்பதில் இருந்தே தமிழகத்தில் என்னதான் அ.தி.மு.க., பா.ஜ.க., போன்ற பெரிய கட்சிகள் அணி வகுத்து நின்றாலும், விலைவாசி உயர்வு என்ற கோஷம் - அதனால் ஏற்படும் பாதிப்பு - இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழ் மாநில மக்களைப் பாதிக்க வில்லை என்பதும் - அப்படிப் பாதிக்காத அளவிற்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை இங்குள்ள நமது அரசு நிறைவேற்றி வருகிறது என்பதும் - அதனால்தான் பூதாகாரமாக எதிர் பார்த்த பா.ஜ.க. - அ.தி.மு.க. - இடதுசாரிகள் கொண்ட கூட்டணியின் “பந்த்” வெற்றி பெறவில்லை என்பதும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம்; மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல்

தமிழ் மாநிலத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதும் - மானிய விலையில் மளிகைச் சாமான்களைப் பெற முடியும் என்பதும் - பஸ் கட்டண உயர்வில்லை என்பதும் - விலைவாசி உயர்வின் பாதிப்பை சாதாரண - சாமான்ய மக்களிடமிருந்து அகற்றியிருப்பதை எண்ணிப் பார்த்தால் முழு உண்மையும் புலப்படும். எண்ணிப் பார்க்க முன்வராமல்; எப்போது தங்கள் ஆட்சி வரும் என்பதற்காக மாத்திரம் நாள்களை எண்ணிக் கொண்டிருப்போருக்கு; “பாரத் பந்த்” - பாதை மறியல் - பட்டாக் கத்தி வீச்சு - இவற்றால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை! அன்புள்ள, மு.க. 7-7-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 371–374. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்