முரசொலி கடிதங்கள் · 3480
வெல்லத் தமிழ் இனி வளரும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3480. வெல்லத் தமிழ் இனி வளரும்! உடன்பிறப்பே,
கோலமிகு கோவை மாநகரில் ஜூன் திங்கள் 23 முதல் 27வரை ஐந்து நாட்கள் குவலயமே திரண்டு வந்து கூடியதோ என்று அனைவரும் வியந்து போற்றும்வண்ணம், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. “இலட்சோபலட்சம் மக்கள் திரண்டனர்! எத்திசை நோக்கினும் எண்ணிலடங்கா மனிதத் தலைகள்” எனப் பத்திரிகைகள் அனைத்தும் பாரபட்சமின்றி பாராட்டும் அளவிற்கு மாபெரும் மக்கள் சங்கமம் என அம்மாநாடு நிகழ்ந்தது. முன்னர் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் விட - ஒரு சீர் கூடுதலாக “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில்; ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், ஆய்வாளர்கள் வந்து, ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு, தமிழ்மொழியின் மேன்மையைப் பற்றியும், மென்மையைப் பற்றியும்; தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பற்றியும், தனித்தன்மையைப் பற்றியும்; இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கித் தமிழ்மொழியை எடுத்துச் செல்வதற்கான தேவைகளைப் பற்றியும்; அந்தத் தேவைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும்; பல்வேறு வகையான கருத்துகளை எடுத்து இயம்பியிருக்கிறார்கள்.
மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள் வழங்கிய கருத்துரைகளின் அடிப்படையில் - மாநாட்டின் நிறைவு நாளன்று தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயனுள்ள 15 அறிவிப்புகளையும், தீர்மானங்களையும் நான் வெளியிட்டேன். அவைகளில் ஒன்று; “தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்”
என்னும் அறிவிப்பாகும். அந்த அறிவிப்பு மாநாட்டில் கூடியிருந்த மாபெரும் மக்கள் வெள்ளத்தின் மனமார்ந்த வரவேற்பினைப் பெற்றது. மாநாடு நிறைவு பெற்று, சென்னைக்குத் திரும்பி வழக்கம்போல் தொடர்ந்து, மக்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் எனக்கு, நாள் தோறும் கிடைத்திடும் செய்திகள், “இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று பாரதி பாடிய கவிதை வரிக்கொப்ப; செவிக்கும், நெஞ்சத்திற்கும் இனிமை ஊட்டுபவையாக உள்ளன. தமிழ்வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் என்னும் தன்னிகரில்லாத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரிகளில், “சிவில்”, “மெக்கானிகல்” பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை-கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி - அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திண்டிவனம், அரியலூர், இராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என மொத்தம் 11 கல்லூரிகளில் “சிவில்” படிப்பில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், இராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என மொத்தம் 12 கல்லூரிகளில், “மெக்கானிக்கல்” படிப்பில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஐந்தாம் தேதி முதல் நடந்துவருகிறது. இந்தக் கலந்தாய்வில் 190க்கு மேல் “கட்-ஆப்” மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட, தமிழ்வழிப் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும்; பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி, முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ்வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர் என்பதும்; உண்மையிலேயே நமக்கெல்லாம் இனிப்பான செய்தியாகும். கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில்
பொறியியல் படிப்பில் தலா 2 பேர், 10ஆம் தேதியன்று 7 பேர், தொழிற்கல்வி படிப்பில் 9 பேர் என மொத்தம் 22 பேர் இதுவரை தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்னும் ஒருமாதத்திற்குமேல் நடைபெற உள்ளது. எனவே, தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் மேலும் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, மாணவர் மற்றும் பெற்றோர்களிடையே; தற்போது அண்ணா பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள தமிழ்வழிப் பொறியியல் படிப்பு; அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது என்ற செய்தி, “எங்கும் தமிழ் - எதிலும் தமிழ்” என்ற எழுச்சி முழக்கத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருக் கிறது.
உடன்பிறப்பே, கழக அரசு 2006ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், 31.5.2006 அன்று, தமிழ் மொழிக் கல்வி, முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் எனச் சட்டம் நிறைவேற்றப் பட்டதையும்; அந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டதன் காரணமாக, இந்தக் கல்வி ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகப் படித்துப் பயன்பெறும் நல்ல சூழல் உருவாகியிருக்கிறது என்பதையும் நீ மறந்திருக்கமாட்டாய்!
எனக்குத் தரப்பட்டுள்ள இன்னொரு இனிய செய்தியினையும் உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பலகலைக்கழகம் ஆசியாவிலேயே முதல் பல்கலைக்கழகம் என்பதையும்; அது முதன் முதலாகத் தமிழகத்தில், கழக ஆட்சியிலேதான் தொடங்கப்பட்டது என்பதையும் நீ அறிவாய். அந்தப் பல்கலைக் கழகத்தின் பி.வி.எஸ்சி., பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு 9.7.2010 அன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 9.7.2010 அன்று மட்டும், 166 இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவேறியிருக்கிறது. 166
இடங்களில், 51 இடங்கள் பொதுத் தொகுப்பிற்கும், 44 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், 6 இடங்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கும், 33 இடங்கள் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், 25 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும், 5 இடங்கள் அருந்ததியினர்க்கும், 2 இடங்கள் பழங்குடியினர்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. முஸ்லீம்கள் 6 இடங்களைப் பெற்றிருப்பதும், அருந்ததியினர் 5 இடங்களைப் பெற்றிருப்பதும் கழக அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி உள்ஒதுக்கீட்டின் காரணமாக அல்லவா? முஸ்லீம்களுக்குக் கழக அரசால் வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டின் காரணமாக, அந்த சமுதாயத்தினர் தொடர்ந்து பயன்பெற்று வருவதை அனைவரும் அறிவர். பொறியியல் பட்டப்படிப்பில், 2008-2009 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட முஸ்லீம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,288; பொறியியல் பட்டப்படிப்பில், 2009-2010 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட முஸ்லீம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,655. ஆனால், தனி உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பு, 2007-2008ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்ட, முஸ்லீம் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2,134தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப்போலவே, 2008-2009ஆம் ஆண்டில், பொறியியல் பட்டப்படிப்பில் அருந்ததியர்களுக்கு கிடைத்த இடங்கள் 1,093. உள் ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு 2009-2010ஆம் ஆண்டில், அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 1,165. மருத்துவப் பட்டப்படிப்பிலும், உள்ஒதுக்கீடு வழங்கியதற்குப் பிறகு முஸ்லீம் சமுதாயத்தினரும், அருந்ததியினரும் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று பலனடைந்து வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். உடன்பிறப்பே, “தமிழ் மரபு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழ் மொழி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்; தரணியெங்கும் பரவிட வேண்டும்; மங்காமல் மறையாமல் போற்றிப் புகழப்படவேண்டும்; அந்த மறுமலர்ச்சி தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்படத்தான் திராவிட முன்னேற்றக் கழகம்
ஆட்சிபீடம் ஏறிட விரும்புகிறது” என்று 1967 விருகம்பாக்கம் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்கள். அந்த முழக்கத்தை என்றென்றைக்கும் கருத்திலும், கவனத்திலும் கொண்டுதான், நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கும்; பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, அருந்ததியின சமுதாயத்திற்கும் கழகம் என்றென்றைக்கும் காவல் அரணாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குமான சில சான்றுகளைத்தான் இன்றைய கடிதத்தில் வழங்கியிருக்கிறேன். அன்புள்ள, மு.க. 12-7-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 375–379. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.