முரசொலி கடிதங்கள் · 3475
வாய்மை வெல்லும் என்பதை உணர்த்த வரிப்புலியே வருக!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3475. வாய்மை வெல்லும் என்பதை உணர்த்த வரிப்புலியே வருக!
உடன்பிறப்பே,
இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் இருக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டவட்டமான கொள்கை. இதற்காக பல முறை கழகப் பொதுக் குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதுபோலவே நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கு மொழியாகவும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று தொடர்ந்து வாதாடி வந்திருக்கிறோம். அதற்காக கழக அரசு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளைப் பற்றியெல்லாம் நேற்றையதினம் சட்டத்துறை அமைச்சர் தம்பி துரைமுருகன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
நம்முடைய தமிழ்ப் பற்றை - தமிழின் வளர்ச்சியை - தமிழின் தாக்கத்தை - தமிழுக்கு உரிய மாண்பினை - தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென்ற நமது ஆர்வத்தினை தமிழகத்திற்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் கிடையாது.
ஆனால், ஜூன் திங்கள் 23 ஆம் நாள் தொடங்கி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டிய செய்திகள் அன்றாடம் ஏடுகளில் வெளிவருவதையும், அதற்கான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதையும் கண்டு மனம் பொறாத ஒரு சிலர் எதையாவது காரணமாகக் காட்டி அதனைச் செய்தியாக்கிட படாதபாடுபடுகிறார்கள். உதாரணமாக மதுரை மாநகரில் வழக் கறிஞர்கள் சிலர் உயர் நீதி மன்றத்தில் தமிழில் வாதாட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்களாம். அந்த வழக்கறிஞர்களை அ.தி.மு.க.வினரும், ம.தி.மு.க. வினரும் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்களாம். அரசுக்கு எதிராக
எங்கே, யார் குரல் கொடுத்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த இரண்டு கட்சியினரும் புறப்பட்டு விடுகிறார்கள். உண்மையில் அந்த வழக்கறிஞர்கள் எழுப்பியுள்ள கோரிக்கை குறித்து தமிழக கழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லையா என்பதை நான் தெளிவாக்கிட விரும்புகிறேன்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அவர்களின் தமிழ் மன்றம் சார்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த ரிட் மனுவினை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ், அதிலே நீதி மன்றம் தலையிட முடியாது என்றும் கருத்துரைத்தது. ஆனால் அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த ஜெயலலிதா இந்தப் பிரச்சினையிலே அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. மாறாக இப்போது இந்தப் பிரச்சினைக்காக மதுரையிலே வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றதும், உடனே அதனைத் தூண்டி விட்டு குளிர்காயும் நிலையை மேற்கொண்டு அந்த அம்மையார் அறிக்கை விட்டுள்ளார்.
ஆனால் இந்த உண்மையை மனதிலே கொண்டு - தமிழக வழக்கறிஞர்களின், மக்களின் கனவை நிறைவேற்றிடும் வகையில் - சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்துவதற்குரிய தீர்மானம் ஒன்றினை 6-12-2006 அன்று கழக ஆட்சியிலே, தமிழ்நாடு சட்டப் பேரவையிலே என்னால் கொண்டு வரப்பட்டு - அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத் திற்கு தமிழக ஆளுநர் அவர்களின் பரிந்துரையையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று - மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்துவது சட்டப்படி சரியான நடவடிக்கையே என்று மேதகு ஆளுநர் கருதினார். அவ்வாறே மாண்பமை சென்னை உயர் நீதி மன்றமும் கருதியது. இதற்கு மேதகு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரவேண்டுமென்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
இதற்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் - தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்ச நீதி மன்றத்துடன் கலந்தாலோசிக்கப் பட்டதாகவும் - உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொள்கிறேன், வாருங்கள் என்று அழைத்து விட்டு - வந்து குவிந்த கட்சிக்காரர்களின் மனுக் களை முழுவதும் பெற்றுக் கொள்ளாமல் ஒரு மணி நேரம் மட்டுமே பேருக்கு இருந்து விட்டு - அவசர அவசரமாக கொடநாட்டிற்குப் புறப்பட்டு போய் விட்ட ஜெயலலிதா - உலகத் தமிழ் மாநாடு பற்றியும் புலம்பியிருக்கிறார். தனக்குத் தானே தம்பட்டத் தன்னல மாநாடு என்றெல்லாம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.
இது தன்னல மாநாடாம்! ஆனால் தஞ்சையிலே ஜெயலலிதா 1995 ஆம் ஆண்டு நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயரால் “ஜெயலலிதா வாழ்த்துப் பா” பாடினார்களே, அதற்கு என்ன பெயராம்? அப்படி பாடி மாநாடு நடத்தியவர்களுக்கு கோவை மாநாடு தன்னல மாநாடாகத்தான் தெரியும்! இதுவரை நடைபெற்ற மாநாடுகளையெல்லாம் வெற்றி கொள்ளும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் வருகிறார்கள் என்ற செய்தியைப் படித்து விட்டு உள்ளம் வெம்பி, மாநாட்டினை ஜெயலலிதா குறை கூறுகிறார். கொட நாடு சென்ற போதிலும் அன்றாடம் விடுக்கும் அறிக்கைகளிலே என்னைப் பற்றியே எழுதிக் குவிக்கிறார். அங்கிருந்து முன்னணியினர் பலர் கழகத்திலே வந்து இணைவதையும், அதிலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அறிவாலயமே கொள்ளாத அளவிற்கு வருவதையும் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு. கழகத்திலிருந்து அ.தி.மு.க.விற்கு வரப் போகிறார்கள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, எஞ்சிய அ.தி.மு.க.வினர் இங்கே வந்து விடாமல் பார்த்துக் கொள்ள முயலுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையைச் செயல்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு
வசதிகளுக்கு 32 கோடி ரூபாயை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதி மன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க. அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் பெறப்படவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்பமை எ.பி. ஷா அவர்கள் 29-11- 2006 தேதியிட்ட கடிதத்தில் இந்தப் பிரச்சினை குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதிய போது - ஐந்தே நாட்களில் 4-12-2006 அன்று எழுதிய பதிலை இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.
Dear Chief Justice,
I am indeed grateful to you and other Hon’ble Judges of the Madras High Court for having accepted in principle, the Policy of the Government to introduce Tamil in the Proceedings of the High Court. I do understand that it is necessary for us to put in place the necessary infrastructure in the form of additional translators, stenographers,
increasing the availability of Tamil Books in Law and enhancing their availability in the Library and formation of a separate section in the Library for the Tamil Law Books. The Government is fully committed in ensuring that the above facilities are put in place as speedily as possible.
மீண்டும் 21.2.2007 தேதியிட்ட கடிதத்தில் உயர் நீதி மன்றத்தின் தலைமைப் பதிவாளர் ரூ. 22 கோடி செலவில் (ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருப்பது போல 32 கோடி ரூபாய் அல்ல) கட்டமைப்புகளை உருவாக்க கருத்துரு அனுப்பி, கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடுகளை உயர் நீதி மன்றம் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டு பதில் கடிதம் தமிழக அரசினால் எழுதப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா தனது அறிக்கையில் எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை என்று கூறியிருப்பது எப்போதும் போலவே உண்மைக்கு மாறானது.
நான் எழுதிய இந்தக் கடிதத்திலிருந்து தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே எவ்வளவு அக்கறையோடு இருந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவைப் பற்றி ஜெயலலிதா சான்று கூறத் தேவையில்லை. தமிழுக்காக 1965இல் திருச்சி மாவட்டத்தில் கீழப்பழுவூர் சிங்கத் தமிழன் சின்னச்சாமி, சென்னையில் விருகம்பாக்கம் சிவலிங்கம், அரங்கநாதன், திருச்சி அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங் கலம் முத்து, மயிலாடுதுறை மாணவன் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், கோவை பீளமேடு தண்டபாணி என்று தங்கள் உயிரைத் தியாகம் செய்த மறவர்களின் கூடாரம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 1965- க்கு முன்பே 1963இல் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழுக்காகப் போராட்டம் நடத்தி, அரசியல் சட்டத்தைக் கொளுத்த முற்பட்டு சிறைக்குச் சென்றவர். 1965 ஆம் ஆண்டு போராட்டத்தில், என்னை கைது செய்து சென்னையிலிருந்து நெல்லை வரையிலே போலீஸ் லாரியிலே இழுத்துச் சென்று பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே அடைத்தார்கள். மொழிப் பிரச்சினையிலே திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக் காலத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுத்தது அல்ல. மொழிக்காக தியாகம் செய்தவர்களில் தி.மு. கழகத்தினரை மிஞ்சக் கூடியவர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை.
மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், நான் உடனடியாக மதுரையிலே இருந்த மத்திய அமைச்சர் தம்பி மு.க. அழகிரியைத் தொடர்பு கொண்டு விவரம் கூறி அதைப்பற்றி உடனடியாகக் கவனிக்க வேண்டுமென்று கூறினேன். தம்பி அழகிரியை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.கே. ராமசாமி, வெள்ளைச்சாமி ஆகியோர் சந்தித்து நிலைமைகளை விளக்கியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தம்பி அழகிரி உடனடியாக மத்திய அரசின் சட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு வீரப்ப மொய்லி அவர்களை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சரும் விரைவில் இது பற்றி கவனித்து ஆவன செய்வதாக உறுதியளித்திருக்கிறார். அந்த விவரங்களை எல்லாம் தம்பி அழகிரி மதுரை வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் விளக்கிய போது, அவர்களும் அதனையேற்று சென்றிருக்கிறார்கள். இதிலிருந்து தமிழக அரசுக்கு உயர் நீதி
மன்றத்திலே தமிழும் இடம் பெற வேண்டும் என்பதிலே உள்ள ஆர்வத்தையும், பொறுப்பையும், அக்கறையையும் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும், ஜெயலலிதாவும், அவருக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருப்போரும் உண்மைகளை மறைத்து, கலவரத்தைத் தூண்டி விட எண்ணுகிறார்கள்.
இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு - ஒரு சிலரை தூண்டி விட்டு, அதனைப் பெரிதுபடுத்தி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஊறுவிளைவிக்க எண்ணுவோரின் கனவு நிறைவேறாது என்பது மட்டும் திண்ணம்.
உடன்பிறப்பே, கோவை மாநாட்டு ஏற்பாடுகளைக் கண்டு, குழவிக் கல்லை எடுத்துக் குத்திக் கொள்வோரைப் பற்றிக் கவலைப் படாமல்; வந்திடுக மாநாட்டுக்கு; தந்திடுகத் தமிழுக்கு, தமிழர் ஆட்சிக்கு என்றும் குறையாத வலிமை! வாய்மைதான் வெல்லும் என்பதை வஞ்சகர்க்கு உணர்த்திட வரிப் புலியே வருக!
அன்புள்ள, மு.க. 16-6-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 348–353. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.