முரசொலி கடிதங்கள் · 3468
எத்தனை நாள்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3468. எத்தனை நாள்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
உடன்பிறப்பே,
முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை,
ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு 1-7-1991 முதல் 30-4-1996 வரை ஆட்சி செய்த காலத்தில் சுமார் 66 கோடியே 65 இலட்சம் ரூபாய் அளவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்களைக் குவித்ததாக 5-7- 1997இல் வழக்கு ஒன்று தாக்கல் செய்தது.
வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன.
இன்னும் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு ஏற்படவில்லை.
இதற்குள் தமிழகத்தில் மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
இந்த வழக்கு வரலாறு காணாத வகையில் 13 ஆண்டுகளாக; சட்ட நிபுணர்களேகூட எதிர்பார்க்காத அளவிற்கு இழுத்தடிக்கப் படுவது பற்றிய சில விவரங்களை இங்கே தொகுத்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.
1997 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் சிறிதும் ஒத்துழைக்காமல் எந்த அளவிற்குத் தாமதம் ஏற்படுத்திட முடியுமோ - அந்த அளவிற்கு தாமதம் ஏற்படுத்தப்பட்டது.
வழக்கு விசாரணை தாமதப்பட்டு வந்த நிலையில் 2001ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு -
ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் வழக்கின் போக்கில் அதிர்ச்சி தரத்தக்க மாற்றமும், பின்னடைவும் ஏற்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டார்.
அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.
ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 76 சாட்சிகள் மீண்டும் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில்தான் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சட்டத்தின்படி நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
28-2-2003 அன்று உச்ச நீதிமன்றம் - சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
18-11-2003 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் அளித்த தீர்ப்பில் -
பேராசிரியரின் கோரிக்கையை ஏற்று - சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அளித்த அந்த தீர்ப்பில் சில வாசகங்கள் இன்றும் நினைவிலே கொள்ள வேண்டியதாகும்.
“ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் மனுதாரரான (பேராசிரியர்) அரசியல் எதிரி என்ற முறையில் இந்த வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருப்ப தாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த வாதம் ஏற்புடையதல்ல. போடப்பட்டிருக்கின்ற மனு, அரசியல் காரணத் திற்காக போடப்பட்ட ஒன்று என்று கூறி அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல.
இந்த வழக்கில் மனுதாரர் (பேராசிரியர்) பல நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான காரணங்களையும் கூறியுள்ளார். அதாவது இதிலே நீதி மறுக்கத் தக்க வகையிலும், ஒருதலைப் பட்சமாக
வழங்கக் கூடிய நிலையும் ஏற்படலாம் என்று வலுவான ஐயங்களை எழுப்பியிருப்பதை எங்கள் கருத்தின் அடிப்படையில் ஏற்கிறோம்.
2000 ஆம் ஆண்டில் அரசு தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்துள்ள ஒரு அரசு அதிகாரி, 2003இல் குற்றஞ்சாட்டப்பட்டவரின் தூண்டுதலின்பேரில், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, 2000ஆம் ஆண்டு அவர் அளித்த முதல் சாட்சியம் கட்டாயத்தின் பேரில் கூறப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சாட்சி அடித்த பல்டி குறித்து அரசு வழக்கறிஞர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோலவே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஆடிட்டர் 2000ஆம் ஆண்டில் அளித்த சாட்சியத்திற்கும் மீண்டும் திரும்ப அழைத்த போது அளித்த சாட்சியத்திற்கும் இருந்த மாறுபாடுகள் குறித்து அரசு வழக்கறிஞர் கண்டு கொள்ளவே இல்லை.
இவர்களைப் போல மேலும் பல சாட்சிகள் (அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது) மீண்டும் சாட்சியம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட போது, அவர்கள் எல்லாம் தாங்கள் முதலில் அளித்த சாட்சியம் கட்டாயத்தின் பேரில் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், அவர்களை யெல்லாம் பிறழ் சாட்சிகள் என்று அரசு வழக்கறிஞர்கள் கூறவில்லை.
எந்தெந்த சாட்சிகள் இவ்வாறு மாறினார்கள் என்பதற்கு சில உதாரணங்களைத் தந்துள்ளோம். இதிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் எந்த அளவிற்கு அரசு தரப்பினர் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
76 சாட்சியங்கள் இவ்வாறு திரும்ப அழைக்கப்பட்டவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர், முன்னரே குறுக்கு விசாரணை செய்யப்பட்டவர்களாவர். ஏன் இத்தனை பேர் மீண்டும் அழைக்கப்பட்டார்கள் என்று நீதி மன்றம் கேட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மூத்த வழக்கறிஞருக்கு முன்பு நேரம் இல்லாத நிலையிருந்ததால் தற்போது அவர்கள் எல்லாம் மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டது. இதற்கு அரசு வழக்கறிஞர் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. அரசு வழக்கறிஞரின் இத்தகைய போக்கு ஒன்றே விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தீர்ப்பின் பாதை திருப்பி விடுவதைப் போலத் தோன்றுகின்றது.
மேலே விளக்கியிருக்கின்ற நிகழ்வுகளை யெல்லாம் பார்க்கும்போது நீதியின்பால் மக்களுக்குள்ள நம்பிக்கை குறைகின்ற அளவிலே (ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது) செயல்பட்டுள்ளார்கள் என்பது புலனாகும். ஏற்கனவே விசாரிக்கப்பட்டு, குறுக்கு விசாரணையும் முடிவுற்ற சாட்சிகளை சாதாரண ஒரு காரணத்தைக் கூறி மீண்டும் திருப்பி அழைத்து விசாரணை நடத்தியிருக்கக் கூடாது. இந்தச் செயல்கள் இரண்டாவது குற்றவாளி, (ஜெயலலிதா) மீண்டும் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பதவியேற்ற பிறகு நடந்தது என்பதும், அவரது அரசால் புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட பிறகு அவர் இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கிறார் என்பதும் நீதி எந்த அளவிற்கு வளைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குமான தெளிவினைத் தருகின்றது. அத்தகைய சாட்சிகள் மீது புதிய அரசு வழக்கறிஞர் எந்தக் குறுக்கீடும் நடத்தாமல் இருந்ததிலிருந்து, அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு ஒன்றிப் போய் விட்டார் என்பதை எடுத்துக்காட்டி, ஒட்டு மொத்தமாக மக்கள் மனதில் நேர்மையான நீதி கிடைக்காதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதியின் பாதை திசை திரும்பி விட்டது என்பதற்கான வலுவான அடையாளம் தெரிகிறது.
இந்த நிலையில் மனுதாரரின் மனதிலே இந்த வழக்கு பற்றிய சந்தேகம் ஏற்பட்டதில் தவறில்லை. அவருக்கு மட்டுமல்ல, மக்கள் மனதிலும் நீதி வழங்கப்படாமல் போய்விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டதில் வியப்பில்லை.
மனுதாரரின் (பேராசிரியர்) வழக்கறிஞர் திரு. அந்த்யார்ஜுனா எங்கள் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வந்தார். இரண்டாவது குற்றவாளியிடம் விதி 313இன் படி நடத்தப்பட்ட விசாரணை குறித்து தெரிவித்து, சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட முறையிலே அது நடந்ததாகக் கூறியிருக்கிறார். இரண்டாவது குற்றவாளி 24-2-2003 அன்று தாக்கல் செய்த மனுவில் அவர்; தான் நேரில் ஆஜராகாமலிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவருடைய வழக்கறிஞர் மூலமாக கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவின் பாரா 5இல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையாக ஒரு வாரம் தேர்தல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு
அப்போது தான் திரும்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுரம் காரணமாக படுக்கையில் இருப்பதால் மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி பணித்திருக்கிறார்கள். எனவே 313வது விதியின்படி நேரில் நீதி மன்றத்தில் ஆஜராக முடியாத நிலை உள்ளது. மனுவின் 6வது பாராவில், அவர் இந்த வேண்டுகோளை தான் வகிக்கும் பதவி காரணமாக கொடுக்கவில்லை என்றும், உடல் நிலை காரணமாகவே தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அரசு வழக்கறிஞர் இந்த மனு மீது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்த ஆங்கில வாசகங்களை அப்படியே இங்கே தருகிறேன்.
The Supreme Court Judges said that “it is undisputed that 76 witnesses have been recalled. Many of them had earlier been cross examined. We were informed that witnesses were recalled as senior counsel for Ms. Jayalalithaa had been busy attending to some other case filed against her when they were first examined.”
(இந்த வழக்கில் 76 சாட்சிகள் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டவர்கள். ஏன் அவர்களை மீண்டும் அழைத்தீர்கள் என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞருக்கு அவர் மீதுள்ள வேறு பல வழக்குகளில் ஆஜராக வேண்டிய பணிகள் இருந்த காரணத்தினால் தற்போது மீண்டும் அந்தச் சாட்சிகள் திரும்ப அழைக்கப்படு கிறார்கள் என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள்.)
இப்படி சாட்சிகளை அழைத்தது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள்?
The Bench said that the fact that witnesses were recalled for cross examination on flimsy grounds after Ms. Jayalalithaa assumed power as Chief Minister and the Public Prosecutor appointed by her Government did not oppose and/ or gave consent to application for recall of witnesses was indicative of how “judicial process is being subverted”
(ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சாதாரணமான ஏதோவொரு காரணத்தைக் கூறி இந்தச் சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதாவின் அரசினால் நியமிக்கப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும்
தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கிறார். இது ஒன்றே எந்த அளவிற்கு நீதி இந்த வழக்கிலே திசை திருப்பப்பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது.)
It does appear that the new public prosecutor is hand in glove with the accused thereby creating a reasonable apprehension of likelihood of failure of justice in the minds of the public at large. There is strong indication that the process of justice is being subverted. The conduct of the Public Prosecutor in not opposing such a frivolous application has to be deprecated.
(புதிய அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு (ஜெயலலிதா குழுவினரோடு) இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாக பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத் தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாக தெரிகின்றது. 313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது.)
The Judges took serious exception to the trial court dispensing with the personal appearance of Ms. Jayalalithaa and said “be you ever so high, the law is above you. The grounds cited by her in the application were not all mitigating circumstances to have granted dispensation of personal appearance. To say the least, that was a ploy adopted to circumvent the due process of law.
(ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை அந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, “நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், உங்களை விட சட்டம் உயர்ந்தது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக் கூடிய அளவிற்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சட்டத்தின் பாதையை திசை திருப்புவதற்கான செயல்தான் நடைபெற்றுள்ளது”.)
நீதிபதிகள் முடிக்கும்போது கூறுகிறார்கள்;
“In our view, the petitioner has raised many justifiable and reasonable apprehensions of miscarriage of justice and likelihood of bias, which would require ourinterference”
அதாவது “எங்களின் கருத்தின்படி, மனுதாரர் (பேராசிரியர்) நியாயப்பூர்வமான, கருத்தில் கொள்ளத்தக்க சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திருப்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றிட வேண்டுமென்று நமது பேராசிரியர் வைத்த வேண்டுகோள் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ள கருத்துக்கள் யாவை?
1. செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு; 1997ன் சி.சி. எண். 7 வழக்கில் தீய நோக்கத்தோடு, வேண்டுமென்றே அரசு வழக்கறிஞரின் உதவியோடு நேர்மையான சுதந்திரமான விசாரணையை குலைப்பதற்காக தலையிட்டுள்ளது.
2. தங்கள் முந்திய வாக்குமூலங்களை மாற்றிக் கூறிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, மறு விசாரணை செய்யவோ முயற்சிக்காமல் அரசு வழக்கறிஞர் கடமையிலிருந்து தவறியிருப்பது, அரசு வழக்கறிஞர் துறை, ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுக்க ரகசியமாக முடிவு செய்து செயல்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
3. முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா சென்னையிலேயே இருக்கும் பொழுது இந்திய குற்றவியல் சட்டம் 313வது பிரிவின்கீழ் அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அரசு வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருப்பது, அரசு வழக்கறிஞர் சுதந்திரமாக செயல்படவில்லை; முதல் குற்றவாளியான செல்வி ஜெயலலிதாவின் விருப்பப்படியே செயல்படுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது.
4. 1997ன் சி.சி. எண். 7 வழக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட விரோதத் தலையீடும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசு வழக்கறிஞர் சட்ட விரோத உதவியளித்ததும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவையும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 313வது பிரிவையும் மீறிய செயலாகும். எல்லாவற்றையும் விட, இது குற்றவியல் நீதி முறையைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியாகும்.
இவ்வாறெல்லாம் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் -
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் -
ஆறு வாரத்தில் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும் -
அதன் பிறகு அன்றாடம் விசாரணை நடைபெற வேண்டும் -
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விசாரணையின்போது சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் -
-------------------------------
முதல்வராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நீதி மன்றத்தின் முன் அனைவரும் சமமே.
இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. அதை அப்படியே உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இவ்வாறு 2003ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்ட பிறகு
ஏழு ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இன்னமும் வழக்கு முடிந்தபாடில்லை.
ஒரு சிறிய குற்றத்தைச் செய்பவர் தொடர்பான வழக்கிலே கூட - உடனடியாக விசாரித்து - அப்போதே தண்டனை வழங்கப்படுவதை பார்க்கிறோம்.
ஆனால் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
-----------------------------------------------
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் -
ஆறு வாரத்தில் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும் - என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறிய பிறகும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை வழக்கு ஆவணங்கள் கர்நாடக சிறப்பு நீதி மன்றத்திற்கு அப்போதிருந்த அ.தி.மு.க. அரசினால் ஒப்படைக்கப்படவே இல்லை.
அதற்குப் பிறகு ஜெயலலிதா உட்பட ஐந்து பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய போதிலும் நான்கு முறை ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டார்கள். அதற்கு நீதிபதி பச்சாபுரே அவகாசம் தராமல், 18-4-2005க்கு வழக்கை ஒத்தி வைத்தார். 18ஆம் தேதியன்றும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராக வில்லை. ஜெ.யின் வழக்கறிஞரும் ஆஜராக வில்லை. மூத்த வழக்கறிஞரின் உதவியாளர், மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையிலே இருப்பதாகக் கூறினார். “அவர் வராமல் போகட்டும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே தீர்ப்பு வழங்கி விடுவேன்” என்றார் நீதிபதி.
இறுதியாக விசாரணையை 2005ஆம் ஆண்டு மே 9ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 9-5-2005 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீண்ட நாள் அவகாசம் கேட்டார். அப்போது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட ஐந்து பேரும் நீதி மன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி பச்சாபுரே கடும் கோபமடைந்தார்.
“வருகிற 16ந்தேதி இறுதி அவகாசம் தருகிறேன், அதற்கு மேல் அவகாசம் தர மாட்டேன். அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட ஐந்து பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். நீண்ட
அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்தவுள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது, (ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தனக்கு வேறு நீதிமன்றங்களில் பணியிருப்பதாகக் கூறினார்)
உங்களுக்கு பல கோர்ட்டுகளில் வேலை இருக்கும். உங்கள் ஒருவருக்காக இந்த வழக்கை தள்ளி வைக்க முடியுமா? இது நியாயமற்றது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இப்படி அடிக்கடி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இரண்டரை ஆண்டுகளாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்து விட்டு தற்போது மீண்டும் வாய்தா கேட்பது சரிதானா? சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்று எனக்கு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆறு மாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாக கடந்த ஆறு மாதமாக உட்கார்ந்து வருகிறேன். தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது போல உள்ளேன்” என்றார்.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே வழக்கைத் தாமதப்படுத்துவது கண்டு நீதிபதி கடுங்கோபமடைந்து தனது கோபத்தை, சாதாரணமானவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தியும் கூட, 16ம் தேதி யன்றும் யாரும் ஆஜராகவில்லை. மீண்டும் 3 வாரம் வாய்தாவிற்கு நேரம் கொடுக்க மறுத்து நீதிபதி விசாரணையை வருகிற அந்த ஆண்டு மே 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போதும் ஜெயலலிதா வரவில்லை. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கை மீண்டும் தள்ளி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறு வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த ஜெயலலிதா குழுவினர் பின்பற்றிய அனைத்து வகை உத்திகளுக்குப் பின்னர் தற்போது 25-2-2010 அன்று முதல் கர்நாடக சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் விசாரணை தொடங்கியிருக் கின்றது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கிலே பல முயற்சிகளின் வாயிலாக வாய்தா வாங்க முயன்ற ஜெயலலிதா - தற்போதும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த விசாரணை தொடராமல் இருக்க - ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக் கண்டுபிடித்துக் காட்டி அதன் அடிப்படையில்,
பல்வேறு மனுக்களை சிறப்பு நீதி மன்றத்திலும், கர்நாடக உயர் நீதி மன்றத்திலும், டெல்லி உச்ச நீதி மன்றத்திலும் தாக்கல் செய்து வருவதை கடந்த இரண்டு மாத கால செய்திகளின் மூலமாக நாட்டு மக்களே நன்கறிவார்கள்.
உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் இப்போது தாக்கல் செய்த மனு கூட இன்று தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு 66 கோடி ரூபாய் குவித்ததற்கான வழக்கு - அப்போது 66 கோடி ரூபாய் என்றால் தற்போது எத்தனை கோடி ரூபாய் சொத்து என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். கட்சிக்கார்களை நினைத்தபடி ஏமாற்றலாம் - மக்களை ஓரளவு ஏமாற்றலாம் - கட்சிக்காரர்களும் ஏமாந்து போய்; மக்களை ஏமாற்ற முனையலாம் - சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு நீதியை தாமதப்படுத்தலாமே தவிர நிரந்தரமாகத் தவிர்த்திடவோ, ஏமாற்றிடவோ முடியாது என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும். இந்த விவரங்களையெல்லாம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு உனக்குத்தான் உள்ளது.
அன்புள்ள, மு.க. 12-05-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 304–314. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.