அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3465

முரசொலி கடிதங்கள் · 3465

நெஞ்சில் மோதும் நினைவலைகள்!

நாள் 10.3.2010சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3465. நெஞ்சில் மோதும் நினைவலைகள்!

உடன்பிறப்பே,

இந்தியத் திருநாட்டின் விடுதலையே எனதினிய உயிர்மூச்சு - சுதந்திரமே எனது தூய பிறப்புரிமை என வீரக்கனல் முழக்கமிட்டு, உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஊற்றி வேள்வி வளர்த்து வெற்றி கண்ட தியாகச் செம்மல்களுக்கும்; இருந்தமிழே, உன்னால் இருந்தேன்! என்று வாழ்க்கை நெறிவகுத்து, இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என எந்நாளும் எண்ணியெண்ணி அன்னைத் தமிழுக்கு ஆனவழியெல்லாம் அணிசெய்த ஆன்றோர்களுக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும்; துறைதோறும் துறைதோறும் தொண்டாற்றி மக்கள் உள்ளங்களிலும், வரலாற்றிலும் மறையாத இடம் பெற்றுவிட்ட மாசற்ற மாணிக்கங்களுக்கும்; கழக ஆட்சியில் நாம் திருவுருவச் சிலைகளென்றும், நினைவகங்களென்றும், மணிமண்டபங்களென்றும், சிங்காரச் சென்னை முதல், தென்கோடிக் குமரிவரை உருவாக்கி, ஊரும் உலகும் ஏற்றிப் போற்றிடப் பராமரித்து வருகிறோம்!

எண்ணற்ற சின்னங்கள்; எழுந்து உயர்ந்து நிற்கும் கட்டடங்கள்! அவை அனைத்தும் சரித்திரத்தின் சாகாக் குறியீடுகள்! அவற்றைக் காணுந்தோறும், காணுந்தோறும்; காட்சியில் இல்லாத வேளைகளில் அவைபற்றிச் சிந்திக்கும் தோறும் சிந்திக்கும்தோறும்; உணர்வுகளில் உயர்மின்சக்தி பாய்ந்ததைப் போல் இனந்தெரியாததொரு கிளர்ச்சி - நம்முள்ளே ஏற்படுத்திடும் தாக்கம் - நாமே அந்தந்தக் காலகட்ட வரலாற்றிலேயே வாழ்வதைப் போன்றதொரு பிரமை!

அனைத்துச் சின்னங்களுமே அரியவை, பெருமையும் பீடும் நிறைந்தவை, புகழ் மிக்கவை, வாழ்த்தி வணங்கத்தக்கவை; எனினும், அவற்றுள் ஒருசில மட்டும் -

அற்புதத்தின் உச்சங்கள் அனுதினமும் அணுப்பொழுதும்

நெஞ்சத்தினின்றும் நீங்காது நிலைத்திருப்பவை; அயர்ந்து உறங்கும்போதும், விழித்திருக்கும் வேளையிலும், எண்ணத் திரையில் வண்ணநிலவாய் தண்ணொளி வீசித் தனிஇன்பம் தருபவை! தமிழர்தம் உள்ளமெல்லாம் எழுச்சியையும் ஏற்றத்தையும் எந்நாளும் பாய்ச்சுபவை! அவை -

● “அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் ‘சிலப்பதிகாரம்’ என்னும் பெயரால்” - திங்களைப் போற்றி; ஞாயிறு போற்றி; மாமழை போற்றி - பின்னர் பூம்புகார் போற்றும்; பாட்டுடைச் செய்யுளாம் நெஞ்சையள்ளும் சிலம்பின் செழிப்பினை உணர்த்தும் பூம்புகார்க் கலைக்கூடம்!

● இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணிலிருந்து விடுதலைக் குரல் எழுப்பிய மாவீரன் - ‘வானம் பொழியுது; பூமி விளையுது; மன்னவன் காணிக்கு ஏதுவரி?’ என்று முதல் முழக்கமிட்ட மாவீரன் - வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவாக, நெல்லைச் சீமையிலே, நெஞ்சுரம் விளைந்த பாஞ்சாலங்குறிச்சிப் பூமியிலே எழுப்பப்பட்ட கோட்டை!

● பாரதியின் பாட்டாக, பாரதிதாசனின் கவிதையாக, பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரையாக, மொழிபெயர்ப்புக்களாக வடிவு கொண்டிருந்த வள்ளுவருக்கு; நெடுநாள் ஆசை நிறைவேறிடவும் நெஞ்சில் இன்பக் கொடியேறிடவும்; வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டுக்கு வரலாற்றுப் புகழ்

கொண்ட வள்ளுவர் கோட்டம் - சிங்காரச் சென்னையிலே!

● ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனச் சினம்காட்டி; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனச் சமத்துவம் உணர்த்தி; மானுடத்திற்கே புதுமையானதும் பொதுமையானதுமான நெறிகளை வகுத்தளித்த வள்ளுவருக்கு - குறளின் அதிகாரங்களைக் குறிக்கும்வண்ணம் 133 அடி உயரம் உள்ள மாபெரும் சிலை - சூழும் தென்கடல் ஆடும் குமரியிலே!

● அறிவியல் வளர்ச்சியில் புதியதோர் அலையெனப் பொங்கி எழுந்துவந்த தகவல் தொழில்நுட்பத்தின் செழுமைகளை முழுதுமாக முன்னெடுத்துச் சென்று, தமிழகத்திற்கு வளமும் வாய்ப்பும் குவித்திட, “டைடல் பூங்கா” எனும் தகவல் தொழில் நுட்பப் பூங்கா சென்னையில் தரமணியிலே!

உடன்பிறப்பே,

எனது நெஞ்சத்தின் நினைவேடுகளில் நிரந்தரமாகப் பதிந்து; நித்தம் எனது இரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் காலக் கருவூலங் களாம் இந்த நினைவுச் சின்னங்களைப் பற்றி எனது சிந்தனைகள் விரிகின்றன.

சென்னையிலே, புதிய சட்டப்பேரவை-தலைமைச் செயலக வளாகம் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இனிதே நிறைவேறிவரும் இந்த நல்ல வேளையில் - சிந்தனைகள் சிறகெடுத்துப் பறக்கின்றன!

பத்தாண்டுகளுக்கு முன்பு - முப்பத்து ஆண்டுகளுக்கு முன்பு - கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்! எனது நினைவுகளில் பளிச்சிடும் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் உவகை கொள்கிறேன். பழைய செய்திகள் எனினும் நமது பண்பாட்டுச் செய்திகள்! நம் அனைவரையும் உணர்ச்சி நதிக் கரையில் உலா வரச்செய்திடும் உன்னதமான செய்திகள்! திரும்பிப் பார்ப்பதால் சிந்தையில் தேனூறும் செய்திகள்!

சங்ககாலச் சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுகப் பட்டினமாகவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியது பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம். பொதுவாக, கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திற்கு புகார் என்பது பெயர். அதன்படி, காவிரியாறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பட்டது. பின்னர், இந்தப் புகார் பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப்பெற்றது.

காவிரிப்பூம்பட்டினம் மூன்று பிரிவுகளாக விளங்கியது. கடற்கரை ஓரமாக அமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம்; நகராக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம்; இரண்டிற்கும் இடையே அமைந்த பகுதி நாளங்காடி.

கரிகால்சோழன் காலத்தில் தான், காவிரிப்பூம்பட்டினம் சிறப்போடு விளங்கியது. அவன் வடபுலத்துப் படையெடுப்பு முடித்துத் திரும்பியதும், தான் திறையாகவும், பரிசாகவும் பெற்றுவந்த முத்துப்பந்தரையும், தோரண வாயிலையும் கொண்டு அமைத்த கொலுமண்டபம், புலவர்கள் பாடும் பட்டிமண்டபம் ஆயிற்று.

பட்டினப்பாக்கத்தில் வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதச் சதுக்கம், பாவைமன்றம் எனும் ஐவகை மன்றங்கள் இருந்தன.

இவைகளெல்லாம் அமையப்பெற்ற பூம்புகார், காலத்தின் கோலத்தால் கடற்கோளுக்கு இரையாகி, மறைந்த நகரங்களில் ஒன்றாகி விட்டது. அப்படி மறைந்த நகரை மீண்டும் அதே வனப்புடன் காணவேண்டும் - கண்ணகி வாழ்ந்த ஊரில் அவளுக்கு நிலையான நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்று நான் பெரிதும் விரும்பினேன்.

சிலப்பதிகாரக் காட்சிகளை சிற்பங்களாக வடித்து, அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரக் கதையை அனைவரும் அறிந்து கொள்ளும்வகையில் எடுத்துரைக்க வேண்டுமென்றும், அதற்காக சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றினை நிறுவவேண்டுமென்றும் திட்டமிட்டேன்.

அதன்படி பூம்புகாரில் உருவாக்கப்பட்ட அந்தக் கலைக்கூடம் எழுநிலை மாடங்கள் கொண்ட அழகான கட்டடம். முதல்மாடம் 12

அடி உயரம் கொண்டதாகவும், ஒவ்வொரு மாடமும் 5 அடி உயரம் கொண்டதாகவும், ஏழாவது மாடத்தில் உள்ள கலசம் 8 அடி உயரம் கொண்டதாகவும், ஆக, 50 அடி உயரம் கொண்டதாக கலைக் கூடம் அமைக்கப்பட்டது.

கலைக்கூடத்தின் மேல் தளத்தின் உட்புறத்தில் 20 தாமரை வட்டங்கள் உருவாக்கப்பட்டன. கலைக்கூடத்தின் திறந்த வெளி யில் சிலம்பு வடிவில் குளம் அமைக்கப்பட்டது. அதன் கரையில் 2.75 மீட்டர் உயரம் கொண்ட கலையரசி மாதவி சிலையும், 3 மீட்டர் உயரம் கொண்ட தமிழர் பண்பாட்டுச் சின்னமாம் கண்ணகி சிலையும் அமைக்கப்பட்டன.

கண்ணகி வழக்காடும் நிகழ்ச்சியையும் சேர்த்து, சிலப்பதிகாரக் கதையில் உள்ள 49 நிகழ்ச்சிகள் கல்லில் வடிக்கப்பட்டன. கலைக் கூடத்தின் வலது பக்கத்தில் 9 அடி உயரத்தில் கரிகால்சோழனின் சிலையும், இடதுபக்கத்தில் 8 அடி உயரத்தில் இளங்கோவடிகள் சிலையும் அமைக்கப்பட்டன. கலைக் கூடத்தின் உட்புறத்தில் பூங்கா அமைக்கப்பட்டது.

சிலப்பதிகாரத்தில் உள்ள பாவைமன்றம் நடுவில் மணிமண்டபத்தில் 8 தூண்கள் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஒவ்வொரு தூணிலும் திருக்குறளில் காமத்துப்பால் அதிகாரத்தைக் குறிக்கும்வகையில் 8 கன்னியர்களின் சிலைகள் மணிமண்ட பத்தின் வட்டவடிவில் உருவாக்கப்பட்டன.

நெடுங்கல்மன்றம், 10 அடி உயரம் உள்ள மேடையில், 52 அடி உயரத்தில் வட்டவடிவில் கருங்கல் தூண் அமைக்கப்பட்டது. 8 தூண்களை 8 வீரமறவர்கள் தாங்கி நிற்பதைப்போல் அமைக்கப்பட்டது.

இலஞ்சிமன்றம் கடற்கரைக்கு அருகில் முன்பும், பின்பும் இரண்டு பொய்கைகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. மேல்நிலை மாடத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய 6 கன்னியர்களின் சிலை அமைக்கப்பட்டது.

கொற்றப்பந்தலும், சிலம்பு வடிவில் பார்வையாளர் காத்திருப்பு மன்றமும் அமைக்கப்பட்டு; 1973ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாளன்று எனது முன்னிலையில், அன்றைய மாண்புமிகு கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களால் பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து; 1973 மே 12ஆம் நாளன்று நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூவருக்கு கழக அரசு விழா எடுத்தது. எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்து வளர்ந்த பூர்வீக இல்லத்தினை நினைவுச் சின்னமாக்கிட அரசு ஏற்பாடு செய்த விழா - அன்றைக்கே, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ஒட்டப்பிடாரத்தில் சிலையெடுத்த விழா - பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான விழா.

அந்த நிகழ்ச்சியில் நான் அளித்த வாக்குறுதிக்கேற்ப; 1974ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை எழுப்புவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1974, ஆகஸ்டு 18ஆம் நாளன்று அந்த எழுச்சிமிகு கோட்டையின் திறப்பு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா மேடையிலேயே கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள் 200 பேருக்கு நிலப்பட்டா, மனைப்பட்டா வழங்கப்பட்டன.

வரலாறுகளில் காணப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, முன்பு கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்திலேதான் இந்தக் கோட்டையும் எழுப்பப்பட்டது. கோட்டையின் வடிவமைப்பு 15 மீட்டருக்கு 15 மீட்டர் சதுர அளவு உள்ளதாகவும், பாதுகாப்பு அரண்களைக் கொண்ட மாதிரி அமைப்புடன் கட்டப்பட்டது. கோட்டையின் மையத்தில் 10 மீட்டர் உயரமுள்ள தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் மேல்புறக் கடைசியில் 3 மீட்டருக்கு 3 மீட்டர் அளவுக்கு மேடை உருவாக்கப்பட்டது. மேல்புறக் கடைசியில் உள்ள மேடையில் உடைவாளின் மீது கையினை வைத்தவாறு தர்பார் மண்டபக் கொலு வீற்றிருக்கும் அமைப்பில் ஒரே கல்லிலான 6 அடி உயரமுள்ள 6 டன் எடை கொண்ட வீரன் கட்டபொம்மனின் அழகுச் சிலை வைக்கப்பட்டது.

அதற்கு இருபுறத்திலும் ஊமைத்துரை, வெள்ளையத்தேவன், தானாபதிப் பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோரின் உருவங்கள் சிற்ப வடிவங்களாக வடித்தெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. ஒட்டப்பிடாரம் கிராமத்திலிருந்து கோட்டைக்குச் செல்லும் சாலையில் 5 அழகு வளைவுகள் வீரபாண்டிய கட்டபொம்மனோடு உடன் வாழ்ந்து மறைந்த வீரப்பெருமக்களின் நினைவு வளைவுகளாக அமைக்கப்பட்டன.

விழாவில் கலந்துகொண்டு; “இந்தச் சாதனை தமிழன் என்ற உணர்வு படைத்த ஒவ்வொருவரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நன்றி உணர்ச்சியோடு போற்றத்தக்கதாகும்” என்று சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள் ஆற்றிய உரையும்;

“பாரதத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பெருமை கலைஞர் அவர்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட ஆட்சிக்கு - அற்புத சாதனைகளைச் செய்துவரும் ஆட்சிக்கு - கலைஞருக்கு அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும்” என்று பெரியவர் மணலி கந்தசாமி அவர்கள் ஆற்றிய உரையும்;

“மக்களுக்கு நன்மை செய்யும் கலைஞரை வீழ்த்துவது என்பது எட்டப்பன் வேலை என்பதால், அவருக்குத் துணையாக இருக்க வேண்டுமென்ற வகையில் நானும் இங்கே வந்திருக்கிறேன்” என்று நண்பர் சுப்பு ஆற்றிய உரையும்; எனது நினைவிலே இன்றைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

கட்டபொம்மன் என்பதால், இந்த நேரத்தில் இன்னொன்றையும் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். 16.10.1999 அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில், “கட்டபொம்மன் படை நடத்திப் பரங்கியரை எதிர்த்த அந்த காலக் கட்டத்தில் அவருக்கு இரண்டு தளபதிகள் - வெள்ளையத்தேவன், கட்டபொம்மனோடு இருந்து பரங்கியரை எதிர்த்து உயிர்நீத்தவன். அதைப்போலவே தற்கொலைப் படையின் குண்டுகளையும் அழித்து, தன்னுடைய வீரர்களையெல்லாம் காப்பாற்றி, தன்னையே தியாகம் செய்து கொண்டவன் சுந்தரலிங்கம். அந்த இருவரும் கட்டபொம்மனுடைய வலக்கரம் இடக்கரமாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு வெள்ளையத்தேவனும் சுந்தரலிங்கமும் நாட்டு மக்களுக்கு, நாட்டிற்கு, சமுதாயத்திற்கு வலக்கரம் இடக்கரமாக இருக்கிறார்களா என்றால், இல்லை என்பதைத்தான் வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

ஒரு காலத்தில், சரித்திரக் காலத்தில், புராணக் காலத்தில், புலியும் மானும் ஒரே துறையிலே தண்ணீர் குடித்தன என்று பெருமையோடு சொல்லுவார்கள். இன்றைக்குப் புலியும் மானும்கூட ஒரே துறையிலே தண்ணீர் குடிக்க வேண்டாம்; மானும் மானுமாவது ஒரே துறையிலே தண்ணீர் குடிக்க வேண்டாமா?

என்று நாம் கேட்க வேண்டிய நிலைமை நாட்டிலே இருக்கின்றது என்பதை மிகுந்த வேதனையோடு நான் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று எனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டேன்.

கட்டபொம்மனைப் பற்றி எழுதும்போது, மாவீரன் பூலித்தேவனைப் பற்றிய எண்ணம் என் மனதில் மின்னலெனப் பளிச்சிடுகிறது.

இந்தியாவிலே வெள்ளையரை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் பல பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், முதன்முதலாக நடைபெற்ற போராட்டம் என்று எடுத்துக் கொண்டால், 1806ஆம் ஆண்டு - அதாவது, வடபுலத்திலே நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே; வேலூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம்தான் என்று உண்மையிலேயே சரித்திரம் எழுதுகிறவர்கள் குறிப்பிடுவார்கள். 1857ஆம் ஆண்டிலேதான் வடபுலத்திலே சிப்பாய்ப் புரட்சி நடைபெற்றது. இந்த இரண்டு சிப்பாய்ப் புரட்சி களுக்கும் முன்பே; வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே; பாளையக்காரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர்களை எதிர்த்த விவேகி பூலித்தேவன். 1750ஆம் ஆண்டு முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகள் பலமுறை வெள்ளைக்காரர்களோடு அவர் யுத்தம் செய்திருக்கிறார்.

நெல்லைச் சீமையிலே நெற்கட்டும் செவல் என்ற புகழ்பெற்ற மண்தான் பூலித்தேவன் வாழ்ந்த பூமி. 53 ஆண்டுகளே உயிர்வாழ்ந்த பூலித்தேவன் வீரம், நேர்மை, தன்மான உணர்வுகள் ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தார். அது மாத்திரமல்ல; கொடையுள்ளம் கொண்டவர் என்பதற்கு அடையாளமாக ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி அன்னதானமும், புத்தாடைகளும் வழங்கும் பழக்கம் உடையவராகவும் இருந்தார்.

ஆர்க்காட்டு நவாப்பின் முதல் ஆங்கிலத் தளபதியான அலெக்சாண்டர் நெல்லைச் சீமைக்கு வரிவசூல் செய்ய வந்தபோது, “கப்பம் என்ற பெயரால் ஒரு சல்லிக்காசும் கட்டமுடி யாது” என்று ஓங்கி அடித்துச் சொன்னவர்தான் பூலித்தேவன். அது மாத்திரமல்ல; “நெல்லாவது கொடு, வரிக்குப் பதிலாக” என்று கேட்டபோது, “வரி என்று நீ கேட்டால், ஒரு மணி நெல்லைக் கூட நான் உனக்குத் தரமுடியாது” என்று பூலித்தேவன் மறுத்துக்

கூறினான். ஒரு மணி நெல்கூடத் தரமுடியாது, கட்ட முடியாது என்று சொன்ன காரணத்தால்தான் “நெல் கட்டான் செவல்” என்று அந்த ஊருக்கே பெயர் வந்தது. “நெல் கட்டான்” - வரியாக நெல்லைக் கட்டமாட்டான் என்று சொன்ன அந்த சொல்தான், இப்போது திரிந்து “நெல் கட்டும் செவல்” என்று ஆகிவிட்டது. அந்த நெல் கட்டும் செவலில் பூலித்தேவன் வாழ்ந்த மாளிகை கழக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு, பொலிவூட்டப்பட்டு, அந்த மாளிகையையும், மாவீரன் பூலித்தேவன் சிலையினையும் 28.12.1998 அன்று நான் திறந்து வைத்தேன்.

இப்படி கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைப் பற்றிய எண்ணங்கள் அலைமோதும்போது, ஒருபுறம் எழுச்சியும் மறுபுறம் ஏக்கமும், ஒருபக்கம் உணர்ச்சியும் மறுபக்கம் உளைச்சலும் ஏற்படுவதைச் சில நேரங்களில் தவிர்த்திட முடியவில்லை!

உடன்பிறப்பே, இந்த முத்தாய்ப்பையெல்லாம் எதற்காக நான் எழுதுகிறேன் என்பதை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆம், வருகின்ற 13ஆம் தேதி சென்னையில் மாபெரும் திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக நீ இதற்குள் புறப்பட்டுக் கொண்டிருப்பாய் என்பதை நான் அறிவேன். அதைப்பற்றி நாளை விவரமாக எழுதுகிறேன்.

அன்புள்ள, மு.க. 10-3-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 285–293. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்