அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3464

முரசொலி கடிதங்கள் · 3464

பொதுக்கருத்து பற்றி பேரறிஞன் ரூசோவின் கருத்து என்ன?

நாள் 7.3.2010சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3464. பொதுக்கருத்து பற்றி பேரறிஞன் ரூசோவின் கருத்து என்ன?

உடன்பிறப்பே,

“வரப்போகிறது” - “வரப்போகிறது” என்று கடந்த பதிமூன்று ஆண்டுக்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்ற மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இந்த முறை எப்படியும் நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்போடு நாளை (8-3-2010) மாநிலங்களவையில் முன்மொழியப்படவுள்ளது. ஆளுங் கட்சியான காங்கிரஸ் தனது உறுப்பினர்களுக்கு “கொறடா” உத்தரவு பிறப்பித்துள்ளது இயற்கை என்றபோதிலும், முக்கிய எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் தனது உறுப்பினர்களுக்கு தீர்மானத்தை ஆதரிக்க “கொறடா” உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கடந்த பதிமூன்று ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற பிரச்சினையாகும். ஏதோவொரு காரணத்தால் தள்ளிப் போய் வந்த இந்தக் கோரிக்கை இந்த முறை எப்படியும் நிறைவேறி விடும் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் எழுந்துள்ளது.

இளம் தலைவர் ராஜீவ்காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோதுதான் மகளிர்க்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டது. அதற்கு முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த “பஞ்சாயத்து ராஜ்” சட்டம் நடைமுறைக்கு வந்த போது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது. 1996ஆம்

ஆண்டு நான்காவது முறையாக கழக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அதற்கு முன்பு பல ஆண்டுக் காலம் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் தேர்தலை நடத்தி 1,16,747 மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்புகளையேற்கும் நிலையை உருவாக்கியபோது, மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துப் பதவிகளிலும் 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்து பெரும் சாதனை புரிந்ததின் வாயிலாக 44,143 மகளிர் அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்கும் நிலைமையை தமிழகத்தில் கழக அரசு செய்து காட்டியது.

அதே 1996ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா முதலில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அன்றைய பிரதமர் தேவ கவுடா அவர்கள் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் 81வது அரசியல் சாசன திருத்தத்தின் கீழ் இந்த மசோதாவை அன்றைய மத்திய சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம்காந்த் காலப் அவர்கள் முன்மொழிந்தார். சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா - நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீ லனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையானது அதே ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதியன்று பதினோராவது மக்கள் அவையில் முன்மொழியப்பட்டது.

பின்னர் அதற்கடுத்த பன்னிரண்டாவது மக்கள் அவையிலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலே - 84வது அரசியல் சாசன திருத்தமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் - 26-6-1998 அன்று மீண்டும் முன்மொழியப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவை ஒத்தி வைக்க நேரிட்டது. அதன்பிறகு பதிமூன்றாவது மக்கள் அவையில், திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது 22-11-1999 அன்று மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த திரு. ராம் ஜெத்மலானி அவர்கள் மசோதாவை முன்மொழிந்தபோது - சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து - சட்ட

அமைச்சரின் கையிலே இருந்த மசோதாவின் நகலைப் பிடுங்கி, கிழித்தெறிந்தனர். அதன் காரணமாக அப்போதும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டில் ஒரு முறையும் - 2003ஆம் ஆண்டில் இரண்டு முறைகளும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோதிலும், அப்போதும் அதனை நிறைவேற்றிட இயலவில்லை. 2008ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே - சட்ட அமைச்சராக இருந்த திரு. பரத்வாஜ் அவர்கள் மாநிலங்களவையிலே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்த போதிலும், அப்போதும் அவையிலே ஏற்பட்ட அமளியால் மசோதா நிறைவேறவில்லை.

“Don’t fail the Women of India” (இந்திய நாட்டு மகளிரை ஏமாற்றிவிடாதீர்கள்) என்ற தலைப்பில் ‘இந்து’ நாளிதழ் இன்று எழுதிய தலையங்கத்தை “The United Progressive Alliance Government’s announcement of its intention to push forward the Women’s Reservation Bill without any dilution in the coming week is the best political news we have had for a long time. If all goes according to plan, the long-pending Bill will be adopted by both houses of Parliament on or around March 8, which marks the Centenary of International Women’s Day” என்றுதான் தொடங்கியுள்ளது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தனது தலையங்கத்தைத் தொடங்கும்போது, “The Government’s renewed efforts to push ahead with the women’s reservations bill underline the political value of the measure in its eyes rather than the possibility of enactment” என்று எழுதியுள்ளது. -திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் - இன்று நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக இந்த மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறை கொண்டு, ஒவ்வொரு மாநாட்டிலும், பொதுக் குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றிடத் தவறியதில்லை.

“பெண்ணுரிமை”க்காக 1928ஆம் ஆண்டிலேயே “குடியரசு” இதழிலே தந்தை பெரியார் “பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில் அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலை உள்ளவர்கள் போலக்

காட்டிக் கொண்டு, மிகப் பாசாங்கு செய்து வருகிறார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் - எவ்வழியிலும் - பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம்” என்று எழுதினார்.

இன்றைக்கு இந்தியத் திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் முழங்கப்படுகின்ற கொள்கை முரசமாக - மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற ஒலியைக் கேட்க முடிகிறது.

ஏன்; தனியாக மகளிர்க்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வர வேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?

சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப் போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத் தடுக்கவில்லை. ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச் சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியும்; அதனால்தான் மகளிர்க்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்து விட்டால்; அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும்.

ஏற்கனவே தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை; இந்த உரிமைகளை; பெறக் கூடியவர்களாகக் கைதூக்கி விட இருக்கின்ற தனித் தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை “மாதிரி” யாகக் கொண்டு; அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; இப்போது கோரிக்கையாக வைக்கப்படுகிற மகளிர் இட

ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப் பிரக்ஞையுள்ள, உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலை நாட்டுவதற்கு நினைத்திடும் இயக்கங்கள் முன் வர வேண்டும்.

பொதுக் கருத்து உருவாக வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருப்பது பொறுப்புடையோர் செயல் எனினும்; கோரிக்கையைத் தள்ளிப் போடுவதற்காகக் “காத்திருப்பு” என்பது ஏற்க இயலாத ஒன்றாகிவிடும்.

சட்டம் நிறைவேற்றிட தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால் கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தராதவர்களை மகளிர் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாம் அல்லவா?

பொதுக் கருத்து பற்றி பிரஞ்சு நாட்டுப் பேரறிஞன் - பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து; பிரெஞ்சுப் புரட்சிக்கான எழுச்சிப் பாதையை தனது எழுத்து மூலம் வகுத்துக் கொடுத்தவர்களில் ஒருவரும், “வால்டேர்” காலத்தவருமான “ரூசோ” என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“புதிதாக ஒன்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ளும் போது அதற்கான பொதுக் கருத்து அறிவதற்குத் தேவையான ஒப்பந்தம் ஏற்படத்தான் எல்லோருடைய கருத்தும் ஒரே வகையாக இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் அந்தப் பொதுக் கருத்து, எல்லோருடைய விருப்பம் போல அமைந்திட முடியாது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ, அதைத்தான் பொதுக் கருத்து எனக் கொள்ள வேண்டும்”

ரூசோவின் இந்தக் கருத்தையும்; மகளிர்க்கான இட ஒதுக்கீடு சட்டம் கொணர ஆர்வமுடையோர் சிந்தித்துச் செயல்பட முன்வர வேண்டும்.

எனவே முதலில் மகளிர்க்கு 33 சதவிகிதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதும்; பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்று படிப்படியாக “உள் ஒதுக்கீடு” செய்து கொள்வதும் சரியானதாகும்.

முதலில் விருந்துக்கான அழைப்பையேற்று வீட்டுக்குள் செல்வோம்.

பின்னர் விருந்தில் படைக்கப்படும் பண்டங்களில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடியது எது; ஒவ்வாதது எது என்பதைச் சொல்லி அதற்கேற்பப் பரிமாறச் செய்வோம்.

அன்புள்ள, மு.க. 07-03-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 279–284. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்