முரசொலி கடிதங்கள் · 3458
புள்ளியைத் தொடர்ந்து போட வேண்டிய கோலம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3458. புள்ளியைத் தொடர்ந்து போட வேண்டிய கோலம்!
உடன்பிறப்பே,
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும் - என்றும் எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கும் நிலை தொடர்ந்தாலும் - இந்தியத் திருநாட்டில் ஜனநாயகத்தைக் காத்திடவும்; தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்திட உழைத்திடவும்;
அந்தப் பூங்காவைக் காத்திடும் பணியை அமைதியாகவும் - ஆர்ப்பாட்டமின்றியும் - அன்னியர்க்கு இடம் கொடாத வகையிலும் கடைப்பிடித்து நிறைவேற்றிடவும்;
உறுதிபூண்டு - ஒல்லும் வகையெலாம் ஒத்துழைப்பு தருகின்ற இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்துகின்ற தகுதியும் திறமையும் நமது தி.மு. கழக அமைப்புக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை அண்மையில் நமது அமைச்சர்கள் தம்பி துரைமுருகன் - தம்பி ஜெகத்ரட்சகன் இருவரும் ஒருங்கிணைந்து நடத்திய சங்கத் தமிழ்ப் பேரவையின் விழாவில் கண்கூடாக கண்ட ஒன்றாகும்.
விழாவில் கலந்து கொண்டு கருத்து மழை பொழிந்த மத்திய அமைச்சர்கள் - எனது ஐம்பதாண்டு கால நண்பர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களும் - கண்ணியத்திற்குரிய பரூக் அப்துல்லா அவர்களும் என்னைக் குறிப்பிட்டு பாராட்டினாலுங்கூட, இந்தியாவுக்கு வழி காட்டக் கூடிய சிறப்பியல்புகளைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியபோது என் நினைவுகள் உண்மையிலேயே அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் சென்னையில் நான் முன்னின்று நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டையும் - அந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் ஆற்றிய உரையினையும் - தொடர்ந்து திரு. பரூக் அப்துல்லா அவர்கள் காஷ்மீரில் நடத்திய மாநில சுயாட்சிக்கான கொள்கைகளை
வலியுறுத்தும் முதல் அமைச்சர்கள் மாநாட்டிற்கு மறைந்த நண்பர் அமைச்சர் சாதிக் பாட்சா அவர்கள் கலந்து கொண்டதும்
மாநில சுயாட்சி குறித்து நமது கழகம் எடுத்த நடவடிக்கைகள் - கொண்டுள்ள உறுதிப்பாடு - இவைபற்றியெல்லாம் அந்த மாநாட்டில் நண்பர் சாதிக் அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து
கொல்கத்தாவில் மறைந்த தோழர் ஜோதிபாசு, மேற்கு வங்க முதல் அமைச்சர் பொறுப்பிலே இருந்தபோது மாநில அதிகாரங்களை மேலும் பெறுவதற்கு வலியுறுத்துகிற நியாயமான தீர்மானங்களை நிறைவேற்றியதும்
என் நெஞ்சை விட்டு அகலாத வரலாற்று ஏடுகள் மாத்திரமல்ல; எதிர்காலத்தில் நனவாக வேண்டிய கனவும் கூட!
நனவாக வேண்டிய கனவு என்று குறிப்பிடுகிறேன் - கனவு கனவாகவே போய்விடாமல், குமரிக் கடலின் ஆழத்திலிருந்து - இமயக் கொடுமுடி வரையில் பரவிக் கிடக்கும் இந்தியத் திருநாடு முழுதும் எதிரொலித்து நாம் கண்டு வரும் கனவு வெறும் கனவல்ல - எதிர்காலத்தில் என்றல்ல; நம் காலத்திலேயே நடக்கக் கூடிய ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டும் கடிகாரத்தின் முள்ளாக விளங்குகின்றது.
கடிகாரத்தின் முள் சுழன்றால் அதன் தொடர்ச்சியாக காலண்டரில் நாட்கள் சுழலும் - அப்படிச் சுழன்ற போது எத்தனையெத்தனை இடங்களுக்கு - நாடுகளுக்கு சுயாட்சியும், சுதந்திர ஆட்சியும் கிடைத்திருக்கிறது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். அதனால்தான் நம்பிக்கையோடு சொல்கிறேன் - “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற பழம் பெரும் சுதந்திரப் பாடலை நினைவிலே நிறுத்தி - சுதந்திரமடைந்த இந்த நாட்டில் சுயாட்சி கோருவது தவறல்ல - ஒவ்வொரு ஆண்டும் தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையானாலும் - நிதி நிலை அறிக்கை ஆனாலும் - மறவாமலும், மாறாமலும் எடுத்து வைக்கின்ற மாநில சுயாட்சி கோரிக்கை என்பது நாட்டைத் துண்டாடும் அல்லது பிரிவினை செய்து தனித்ததோர் ஆட்சி அமைக்கும் முழக்கமுமல்ல; முழக்கத்தின் எதிரொலியுமல்ல.
பெற்ற சுதந்திரத்தை இந்தியாவில் பேணிக் காக்கவும் - மாநிலங்கள் வலிமையோடு இருந்தால்தான் மத்திய ஆட்சியும் வலிமையோடு இருக்க முடியும் என்ற தத்துவத்தை உறுதிப் படவும்
- உளப்பூர்வமாகவும் எடுத்துச் சொல்லி எழுப்புகிற கோஷம்தான் மாநில சுயாட்சி.
மாலை தங்கத்தால் ஆனதாயினும் - மரகத மணிகளால் ஆனதாயினும் -
ஒவ்வொரு மணியையும் இணைத்திருக்கின்ற “கொக்கி” வலிமையாக இருந்தால்தான் மாலைக்கு வலிவு. அந்த வலிவுக்கு நாம் வைத்துள்ள பெயர்தான் மாநில சுயாட்சி.
மாநில சுயாட்சி பற்றி அறிஞர் அண்ணா அவர்களும் - சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் - தம்பி முரசொலி மாறன் அவர்களும் தந்துள்ள விளக்கங்கள் -
அந்த விளக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் -
சுயாட்சி என்பது பிரிவினையோ என்று கருதும் பித்தம் தெளிவிக்கிற மாமருந்துகளாக அமைந்துள்ளன.
எனவே உடன்பிறப்பே, மாநில சுயாட்சி எந்தெந்த காலகட்டத்தில் - எந்தெந்த வகையில் நம்முடைய தலைவர்களாலும் - நம்முடைய இயக்கங்களாலும் - எந்தச் சூழலில் எவ்வாறு வலியுறுத்த நேரிட்டது என்பதை - அந்த வரலாற்றை ஊன்றிப் பார்த்தால் வாய்மையுடன் நாம் வலியுறுத்துகிற மாநில சுயாட்சிக்கு இந்தியப் பூபாகம் முழுதும் உள்ள மாநிலங்களின் ஆதரவு கிட்டும் என்றே நம்புகிறேன்.
அதற்கோர் புள்ளி வைத்ததுபோல்தான் அமைந்தது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் என் தம்பிமார்கள் நடத்திய விழா.
புள்ளியோடு நின்றால் போதுமா?
புள்ளியைத் தொடர்ந்து கோலம் உருவாக வேண்டாமா?
அந்தக் கோலத்தை வரைந்து முடிக்கும் வரையில் நாம் வாழ்கிறோமோ இல்லையோ?
அந்தக் கோலம் வரைந்து முடிக்கப்பட்டால் அது என்றும் வாழும் கோலம்!
அன்புள்ள, மு.க. 18-02-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 254–256. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.