முரசொலி கடிதங்கள் · 3457
அவனும் சிரித்தான்; நானும் சிரித்தேன்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3457. அவனும் சிரித்தான்; நானும் சிரித்தேன்!
உடன்பிறப்பே,
குறிஞ்சி மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும் என்ற பெருமையுடையது.
கும்பகோணம் மகாமகத்திற்கும் அப்படியொரு பெருமை பேசப்படும்.
எங்கேயோ ஒரு கோவில்! அதன் எதிரே ஒரு குளம்! அந்தக் குளத்தில் சேறும், சகதியும் நிரம்பியிருந்தாலுங்கூட, அந்த அழுக்கு போதாதுயென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்தக் குளத்திலே குளித்து அகற்றிடும் அழுக்கையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது குளமாக அல்ல - குட்டையாகவே காட்சி தரும். அதிலே குளித்தால் - மூழ்கினால் பாவங்கள் தொலையும்; புண்ணியங்கள் சேரும் என்ற நம்பிக்கையோடு பரம பக்தர்கள் மற்றும் பாமர பக்தர்கள் இன்னமும் அங்கு குளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோல ஒரு பாவம் தீர்க்கும் தீர்த்தத்தில் “நீராடி மூழ்கலாம் வாடி!” என்று அரசி ஒருத்தி அவளுடைய தோழியை அழைத்துக் கொண்டு சென்றாள். திரளான மக்கள் தீர்த்தமாடிக் கொண்டிருந்த அந்தத் தெய்வீக குளத்தில் திடீரென குண்டு வெடித்ததைப் போல பெரும் பரபரப்பு - பதைப்பு - பயத்தில் அங்குமிங்கும் ஓடியவர்கள் உருவாக்கிய நெருக்கடியும், கூச்சலும், குழப்பமும் சேர்ந்து பாவம் தீர்க்க வந்த இடத்தில் பல உயிர்கள் பலியாயின.
குளத்தோர மண்டபத்தில் இரண்டு சன்னியாசிகள் கண்கலங்க இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கோபுரத்து விதான மேடையில் அரசியும், அவள் தோழியும் நீரை மொண்டுமொண்டு ஒருவர் தலையில் ஒருவர் ஊற்றி மகிழ்ந்து விளையாடினர். பாவம் போக்க திருக்குளத்தில் திரண்ட பக்தர்கள் அரசியாருக்கு - அவள் தோழி நடத்திய அபிஷேகத்தையும் - அதற்குப் பதிலாக அரசியாரும், அவள் தோழிக்கு நடத்திய
அபிஷேகத்தையும் பக்த கோடிகள் அனைவருமே பாவம் தணிக்க வந்ததை மறந்து விட்டு அந்தக் காட்சியைப் பார்ப்பதிலேயே சகல பாவமும் தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.
குண்டு விழுந்து வெடித்தது போன்ற குழப்பத்தில் ஏற்பட்ட பரபரப்பும், பதைபதைப்பும் அடங்கிவிட்டாலுங்கூட - அரசியார் தோழியுடன் தீர்த்தமாடிய அந்தக் காட்சி பக்தர்கள் மனதை விட்டு மறையவேயில்லை.
பரிதாபமான இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்த பெரிய சாமியாரும், சின்னச் சாமியாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே குளக்கரையிலிருந்து மெல்ல நடந்து அவர்களின் மடாலயத்து பல்லக்கிலே ஏறிக் கொண்டார்கள். பல்லக்கு சென்ற பாதையில் பத்திரிகை நிருபர்கள் அந்தச் சாமியார்களை வளைத்துக் கொண்டு “பாவம் போக்கும் குளத்தில் என்ன நடந்தது? நீங்கள் நேரில் பார்த்தீர்களா? எப்படி நடந்தது? ஏன் நடந்தது” என்று அவர்களுக்கே உரிய திறமையோடு வினாக்களை எழுப்பினார்கள். அதற்கு சாமியார்கள் சொன்னார்கள். “எங்களுக்கு ஒன்றும் தெரியாது; நாங்கள் குளக்கரையில் நின்று கொண்டு பார்த்தவரையில் அரசியார் வந்தார் - அவர் தோழி வந்தார் - இருவரும் ஜலத்தை மொண்டுமொண்டு இவர் தலையிலே அவர் ஊற்றினார் - அவர் தலையிலே இவர் ஊற்றினார் - இரு பெண்டிரும் இவ்வாறு ஸ்நானம் செய்த போது - அந்தக் காட்சியைக் காண ஒருவர் மீது ஒருவர் விழுந்து முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் குழப்பம் ஏற்பட்டது! பிணங்கள் குவிந்தது!” என்று கூறி விட்டு - பல்லக்குத் தூக்கிகளைப் பார்த்து “போ - போ” என்று விரட்டவே - அவர்களும் மிரண்டு போய் ஓடினார்கள். பத்திரிகைக்காக குறிப்பெடுத்த நிருபர்களும் அந்தச் சன்னியாசிகள் இருவரும் சொன்ன பதிலை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதனை தாங்கள் வேலை பார்க்கும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள். அதைப் படித்த அரசியாருக்கு பயங்கர கோபம். “சாமியார்கள் இருவரும் - நமது நிர்வாகத்திற்கு உட்பட்ட நிலங்களில் மடம் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு மமதை பார்த்தாயா? சமயம் வரட்டும்; ஒரு கை பார்க்கிறேன்” என்று சபதமும் செய்தார் அரசியார்.
அந்தச் சபதம் நிறைவேறும் சந்தர்ப்பமும் உருவாகிவிட்டது. மடாலயத்தில் நடைபெற்ற ஒரு கொலையில் சாமியார் சிக்க
வைக்கப்பட்டார். “இவாள் தலையில் அவாள் ஊற்றினா - அவாள் தலையில் இவாள் ஊற்றினா - என்று கேலியா பேசினாய்! எவ்வளவு ஆணவம் இருந்தால், என்னிடத்திலேயே இப்படி விளையாடியிருப்பாய்” என்று சாமியாரை அரசியார் மிரட்டினார் - விரட்டினார். “உம்மைத் தூக்குத் தண்டனை கைதியாக ஆக்குகிறேன் பார்” என்று தூற்றினார்.
சாமியாரோ துடித்தார், துவண்டார். “ஐயோ, அரசியார் தீர்த்த குளத்தில் நடத்திய திருவிளையாடலை நாம் கேலி செய்யப் போய் - அது நம் தலைக்கே தீவினையாகி விட்டதே” என்று புலம்பித் தீர்த்தார். சாமியாரின் மெய்யன்பர்களுக்கும் சாமியார் எப்படியோ பிழைத்தால் போதும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பழி நீங்கினால் போதும் என்று பகல் இரவு பாராது பகவானை வேண்டிக் கொண்டார்களே தவிர, தங்கள் அன்புக்குரிய சாமியாரை - தங்களுக்கு வழிகாட்டியாக உள்ள சாமியாரை - இப்படி பழி தீர்த்துக் கொண்டாரே அரசியார் என்று யாரும் பதறவில்லை - அரசியார் மீது பாய்ந்து தாக்குதல் கணை தொடுக்கவும் இல்லை. அரசியாரின் அடி பணிந்தாவது அவர் அருளைப் பெற்று, சாமியாரை மிரட்டிக் கொண்டிருக்கும் மரண தண்டனை என்ற மருளைப் போக்க - “ஜெய ஜெய சங்கரா” என்ற பாடலை மட்டும் உரக்க ஒலித்துக் கொண்டிருந்தார்கள், அந்தப் பாடல் ஒலியையும் - கேட்பதற்கு விருப்பம் இல்லாதவர் போல் அரசியார் நடித்தார். பல்லைக் கடித்தார். அதிர வெடி போல் வெடித்தார். இந்த இரண்டு வேறுபாடான காட்சிகளுக்கிடையே ஊரின் நடுவே கம்பம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்ற ஒலி பெருக்கி குழாயில்
“நாம் இருவரும் ஒரு குலம் அல்லவா? நம்மை எதிர்ப்போர் நம்மை வெல்லவா?”
என்று ஒரு பாட்டு ஒலிக்க ஆரம்பித்து - தொடர்ந்து;
“கொலைப் பழி தூற்றியது பாவம் தான்! அதை - நிலைப் பழியாக நிறுத்துவது அதை விடப் பாவம் அன்றோ? எனவே பொல்லாப் பாவங்கள் தீர்க்கும் பொய்கையிலே - நம் எல்லா பாவங்களையும் தீர்த்திடுவோம் - நம்
இன எதிரிகள் யாரென்று பார்த்திடுவோம் - கூத்திடுவோம் அவர்களை வீழ்த்திடுவோம் என”
பாடல் முழங்கிக் கொண்டே இருந்தது ஒலிபெருக்கியில்!
அப்போது என்னருகே ஒரு சிரிப்பொலி சப்தம் கேட்டது.
“என்னய்யா? பாடல் கேட்டாயா?” என்று சிரித்துக் கொண்டே அந்த நண்பன் என் முதுகில் தட்டினான்.
“இதற்குப் பெயர்தானப்பா “இன ஒற்றுமை” என்றேன்.
அவனும் சிரித்தான் -
நானும் சிரித்தேன்!
அன்புள்ள, மு.க. 12-02-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 250–253. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.