அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3456

முரசொலி கடிதங்கள் · 3456

மனித நேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்!

நாள் 11.2.2010சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3456. மனித நேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்!

உடன்பிறப்பே,

ஐந்தாவது முறையாக தமிழ்ப் பெருமக்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டு முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் ஆற்றிய பணிகள் நூற்றுக்கு நூறு அடித்தட்டு மக்கள் - ஏழை யெளிய மக்கள் ஆகியோரின் வறுமையைக் களைந்திடவும் - உரிமையை வழங்கிடவும் பயன்பட்ட பணிகளாகும். இஃதன்னியில், கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற கால கட்டங்களில்தான்

• ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி • ஏழைப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள நிதி உதவித் திட்டம் • கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி திட்டம் • பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் • உழவர் சந்தை திட்டம் • அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் • கூட்டுறவுக் கடன்கள் ரத்து • உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் • 108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம் • கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.

காந்தியடிகள் - வடலூர் ராமலிங்க அடிகள், தந்தை பெரியார் போன்றவர்களின் பெருந் தொண்டினாலும் அவர்கள்

நடத்திய தியாகப் போராட்டங்களினாலும் - தீண்டாமை என்ற கடும் விஷத்தை நாட்டில் ஒரு துளிகூட இல்லாமல் அறவே துடைத்தெறிய இயல வில்லை என்பதை இன்றைய நாட்டு நடப்பு சான்றாக இருந்து எடுத்துக்காட்டி வருகின்றது.

தீண்டாமையை ஒழிப்பதற்கான கடுமையான சட்டங்கள் இருந்தும் கூட அந்தப் போராட்டத்தில் முழு வெற்றியைப் பெற முடியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க. உள்ளிட்ட எத்தனையோ கட்சிகளின் ஆட்சிகளிலேகூட காற்றில் வளைந்து பின்னர் நிமிர்ந்து நிற்கும் ஆற்றோரத்து நாணல் போல - சாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் தலைநிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கொடுமைகளின் மொத்தச் சுமையையும் சுமக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்று நமக்கு - நமது ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதை யாரும் அலட்சியப்படுத்தி விட முடியாது.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில் கடந்த காலங்களில் எந்தவொரு ஆட்சியிலும் ஊராட்சி மன்றத் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமலும் - நடத்தப்பட்டால் அந்த ஊராட்சி மன்றங்களின் தலைவர்களாக “தலித்” சகோதரர்கள்தான் வர முடியும் என்பதால் அவர்கள் உயிரோடு இருக்க முடியாமலும் - அந்த அச்சத்தின் காரணமாகவே அவர்கள் யாரும் அந்த ஊர்களில் ஊராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடாமலும் இருந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதையும், அகற்ற முடியாவிட்டால் நாம் பெரியார் வழியிலும், அண்ணா வழியிலும் வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையை இழந்தவர்களாவோம் என்பதையும் நினைத்துப் பார்த்து 2006 ஆம் ஆண்டு நான் மேலே குறிப்பிட்ட அந்த ஊர்களில் ஊராட்சி மன்றத் தேர்தலை நடத்தியும் - அதில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களையெல்லாம் “தலித்” சமுதாயம் மனம் மகிழத் தக்க அளவிற்கு சென்னை கலைவாணர் அரங்கத்திற்கே அழைத்துப் பாராட்டியும், பரிசுகளை வழங்கியும்,

மாலைகளை அணிவித்தும், மகிழ்ச்சியினை மழையாகப் பொழிந்தும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைத்து ஒரே மேடையில் பங்கு பெற வைத்து - இந்த வெற்றியில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டியும் - ஜனநாயகத் தோட்டத்தில் புகுந்த சாதி வெறி எனும் பாம்புகளை வெளியேற்றி வெற்றிச் சங்கொலித்தோம்.

அடுத்து, மதுரையை அடுத்த உத்தபுரம் எனுமிடத்தில் தலித்துகள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக உயர் வகுப்பினர் தடுத்துக் கட்டியிருந்த சுவரை - மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி - இடிக்கச் செய்து - சாதி வெறியைத் தணித்தோம்.

அதைப் போலவே கோவை மாநகரில் உள்ள பெரியார் நகரில் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசித்து வருகின்ற பகுதியில் அவர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டதோடு - சுவரை காக்க வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையையும் அகற்றி வேறொரு இடத்தில் இந்த அரசின் சார்பில் வைக்கப் பட்டது.

தலித்துகளை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருமைமிகு அருந்ததிய மக்களை - அடித்தளத்திலே வீழ்ந்து கிடக்கின்ற சூழலிலேயிருந்து கை தூக்கி விட அவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு அளித்து ஏற்கனவே பெரியார் தலைமையில் நடந்த சுய மரியாதை மகாநாடுகளில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்தினோம்.

அதன் காரணமாக இந்த ஆண்டே ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்ததிய மாணவர்களுக்கு உயர் கல்வி பயில இடம் கிடைத்தது மாத்திரமல்ல - 56 பேருக்கு மருத்துவக் கல்லூரியிலும் 1165 பேருக்கு பொறியியல் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன.

இவைகளுக்கெல்லாம் எதிர் வரிசையிலே உள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கும் நியாயமான பங்கு உண்டு என்பதை அரசியல் நெறிமுறையுடன் - ஆம், அரசியல் நாகரிகத்துடன் நன்றி உணர்வுடன் கூட எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

ஏதோ நாம் மட்டும்தான் இந்த இலட்சிய உணர்வுகளை செயல் வடிவம் பெறச் செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள என்றைக்குமே நாம் கருதியதுமில்லை - அப்படி நடந்து கொண்டதும் இல்லை. ஆனால் அதற்கென்று வேறு சில கட்சிகள் இருக்கின்றன. நாம் அந்தக் கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள் தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும் - கோரிக்கைகளை நிறை வேற்றிய இந்த அரசின் செயலை இருட்டடிப்புச் செய்வதும் தங்களுடைய நிரந்தர “சாமுத்ரிகா இலட்சணங்”களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

பல ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த - நடைபெற்றாலும் உயிரோடு இருக்க முடியாத ஊராட்சி மன்றத் தேர்தல்களை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊர்களில் நடத்த முன் வந்த ஆட்சி எது - இருபதாண்டு காலமாக தீண்டாமைச் சுவர் என்று திகழ்ந்த தீய சுவர்களை இடித்தெறிந்தது எந்த ஆட்சி - யார் துணையோடு - கோரிக்கை வைத்தவர்களின் துணையோடா - அல்லது இந்த ஆட்சியின் அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வா?

இதையெல்லாம் மறைத்துக் கொண்டு விருந்திட்டோர்க்கு நன்றி கூறாமல் - விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும் பாராட்டும் கூறி -

“உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற திருக்குறளை மறந்து - நடமாடிக் கொண்டிருப்பவர்களை வாழ்த்துவோம் - வணங்குவோம் - நம்மிடம் வற்றாமல் இருக் கின்ற மனித நேயத்தோடு - மாசற்ற அரசியல் நாகரிகத்தோடு!

அன்புள்ள, மு.க. 11-02-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 246–249. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்