அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3459

முரசொலி கடிதங்கள் · 3459

கரும்பில் அரசியல்!

நாள் 19.2.2010சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3459. கரும்பில் அரசியல்! உடன்பிறப்பே,

கரும்பு விலை பிரச்சினையில் ஆளுங் கட்சியும், எதிர்க்கட்சியும் ஏதோ பள்ளிக் கூடத்துச் சின்னப் பிள்ளைகளைப் போல சண்டை போடுவதாகக் கற்பனை செய்து கொண்டு;

தாங்கள் என்னவோ இதிலெல்லாம் தலையிடாத வகுப்பறை சட்டாம்பிள்ளைகளைப் போலக் கருதிக் கொண்டு;

“அரசியல் கட்சிகளின் கருத்து வேறுபாடுகளைக் கரும்பு உற்பத்தியாளர்களிடம் திணிப்பதா?” என்ற ஒரு கேள்வியைக் கேட்டு நீண்டதோர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை காரணம் இல்லாமல் எதிர்த்துக் கொண்டிருக்கிற சில பத்திரிகைகள் அந்த அறிக்கையை பெரிய எழுத்துக்களிலே உற்சாகத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில் தமிழகத்தில் முன்னாள் ஆட்சியில் அரசு ஆதரவு விலை அளிக்காமல் இருந்தது தவறு என்று சுட்டிக்காட்டுவதோடு - உத்தரப் பிரதேசத்திலும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் 2,100 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரை விலை கொடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

விலையைச் சொல்லியிருக்கிறார்களே தவிர, அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்பின் “பிழி திறன்” என்ன என்பதைப் பற்றி அவர்கள் யாரும் விவரிக்கவில்லை.

முதலில் ஒரு விவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கரும்புக்கு விலை அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்கின்ற விவசாயிகள் யாரிடம் கேட்கிறார்கள்? அரசாங்கத்திடம் கேட்கிறார்களா? அல்லது கரும்பை வாங்கி அரவை செய்து சர்க்கரையாக விற்பனை செய்கின்ற ஆலை அதிபர்களிடம் கேட்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கரும்பு விவசாயிகள் கேட்கிற விலையை அறிவித்துவிட அரசு தயாரானால்கூட, அந்த விலை கொடுக்க தங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்று திட்டவட்டமாக கூறுகின்ற சர்க்கரை ஆலைகளின் கூக்குரலுக்கு அரசு என்ன பதில் சொல்ல வேண்டும்? என்ன பதில் சொன்னால் அந்தக் கூக்குரல் அடங்கும் என்பதையோ அல்லது கரும்பு விலை அறிவிப்பு என்பது - அந்த விலையை அரசே கரும்பு விவசாயிகளுக்குக் கொடுக்கப் போகிற விலை என்று பொருள் அல்ல; அப்படி கூட்டுறவு ஆலைகளுக்காக அரசே கொடுக்க முன் வந்தால் கூட; அதே போன்ற விலையை தனியார் ஆலை அதிபர்கள் தங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்று கூறினால் அதனால் பாதிக்கப்படப் போவதும் கரும்பு விவசாயிகள் தானே?

கரும்புக்கு நிர்ணயிக்கப்படுகிற விலை யாரால் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்பதை மறந்து விட்டோ அல்லது மறைத்து விட்டோ மக்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை உருவாக்குவது கரும்பு விவசாயிகளுக்கு நல்லது அல்ல. சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும் நல்லது அல்ல. உத்தர பிரதேசம், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 2100 ரூபாய் முதல் 2300 ரூபாய் வரை தருகிறார்கள் என்றால் எத்தகைய பிழி திறன் கொண்ட கரும்புக்கு என்பதைக் கூறியிருக்க வேண்டாமா?

“அரசு நிதியில் இருந்து இலவச டி.வி., ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவைகளுக்கு வாரி வழங்கும் இந்த அரசு, லாபத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளை விலையை உயர்த்திக் கொடுக்க ஆணையிடாதது விவசாயிகள் தற்கொலைக்கு வித்திட்டது” என்று ஒரு கற்பனைக் கதையையும் இந்த அறிக்கையிலே அவர்கள் இணைத்திருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ற மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்கள் தான் - என்பதை அனைவரும் அறிவர்.

இவைகளையெல்லாம் கிண்டல் செய்கின்ற இந்த அறிக்கை யாளர்கள் விவசாயிகளுக்கான 7000 கோடி ரூபாய்க்கான கூட்டுறவு கடன்களை ரத்து செய்து அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியதை மட்டும் தங்களுக்கு வசதியாக மறந்தது ஏனோ? தற்போது விவசாயிகளுக்கு அறவே வட்டியில்லாத கூட்டுறவுப் பயிர்க் கடன் கொடுப்பதையும் நினைவிலே கொள்ளாதது ஆச்சரியம்தான்.

சர்க்கரைத் தொழிலில் உற்பத்தி சில ஆண்டுகளிலே அதிகமாக இருக்கும், சில ஆண்டுகளிலே குறைவாக இருக்கும். அது மாறி மாறி வருகின்ற ஒன்று. சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருந்து சர்க்கரையின் விலை குறைவாக இருந்து கூட்டுறவு ஆலைகள் நட்டத்தில் இயங்கிய நேரத்திலும் மத்திய அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச விலையைவிட கூடுதலாக மாநில அரசின் ஆதார விலையை அறிவித்து அதற்குத் தேவையான மானியத்தையும் கூட்டுறவு ஆலைகளுக்கும் அரசே வழங்கி விவசாயிகளுக்கு நியாயமான கரும்பு விலை கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளதை இப்போது அறிக்கை விடுபவர்கள் மறந்தது ஏனோ?

2006-2007ஆம் ஆண்டு இறுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் ஒட்டு மொத்த குவிந்த நட்டம் 1,270 கோடி ரூபாயாகும். 2007-2008 இறுதியில் இது 1,648 கோடி ரூபாயாக உயர்ந்து - 2008-2009ஆம் ஆண்டு முடிவில் 1,625 கோடி ரூபாயாக உள்ளது. இருப்பினும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இந்த அரசு அவர்களுக்கு தொடர்ந்து நியாயமான ஆதார விலையை அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு அதிகமாக மாநில அரசு பரிந்துரை விலை எதையும் நிர்ணயிப்பதில்லை. தனியார் சர்க்கரை ஆலை அதிபர்கள் சர்க்கரை விலை அதிகமாக இருக்கும்போது கரும்புக்கு கூடுதலாக விலை கொடுப்பது போல இருந்தாலும், சர்க்கரையின் விலைகுறையும்போது கரும்புக்கு குறைந்த விலை கொடுப்பது வழக்கம் என்பதை இவர்கள் உணராமல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கு கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யும் இந்த அரசின் கொள்கையைப் பாராட்டுவதற்குப் பதிலாக இந்தக் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் மாத்திரம் இந்த உண்மையை அறியாதது போல் அறிக்கை விடுத்திருப்பதுதான் அரசியல் உள் நோக்கம் கொண்டதாகும்.

அன்புள்ள, மு.க. 19-02-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 257–259. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்