முரசொலி கடிதங்கள் · 3461
கலையுலக விழாவும்; சிலர் கண்ட கனவும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3461. கலையுலக விழாவும்; சிலர் கண்ட கனவும்! உடன்பிறப்பே, தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்து வரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை - ஏமாற்றம் - அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என் மீது - என் தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலே கூட என் கலைவாழ்வுக்கு பொன் விழா - பவள விழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாகப் பதிய வைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நல நிதி வழங்கியும் - அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத் தினரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் - திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் - படப்பிடிப்பு கட்டணச் சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும் - “திரைப்படத் துறையினர் நல வாரியம்” அமைத்தும் - அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக் கொண்டிருப்பதால் - தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும் - தன்னைக் காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும் - நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக் கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர்.
கடற்கரையில் 14-4-1996 அன்று எனக்கு கலையுலகப் பொன் விழாவினை கோலாகலமாக தம்பி விஜயகாந்த் அவர்களும் கலை யுலகச் செல்வர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய விழாவும் - அளித்த பரிசும் - அதன் பின்னர் நினைத்தாலே இன்னமும் என் நெஞ்சை நெகிழவைக்கும் இனிய நண்பர் சிவாஜி தலைமையில் எனது ஐம்பதாண்டு கால கலையுலகப் பணியை முன்னிட்டும் - 75வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே பொன்விழாவும் - பவள விழாவும் 27-9-1998 அன்று சென்னை நேரு அரங்கத்தில் நடந்ததும் - வழங்கிய பரிசுகளும் - கண்ணீரோடு கலந்த வாழ்த்துக்களும் மறக்கக் கூடியதா?
அந்த விழாவிலே தலைமையுரை ஆற்றிய போது - நடிகர் திலகம் அவர்கள், “தமிழே! உன் தலைமகனை - என் அருமை நண்பனை - இந்த நாட்டின் சிறந்த அறிவாளியை - உயர்ந்த அரசியல்வாதியை - வாழவை. தமிழினமே, கலைஞரை வாழ்த்துங்கள். உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன். தமிழ்த் திரையுலகம் கலைஞர் அவர்களுக்கு - என் உயிர் நண்பனுக்கு - ஒரு சிறந்த விழா எடுத்து, எவ்வளவோ பெரியவர்கள் இருந்தும் - இதற்கு என்னைத் தலைமை தாங்கப் பணித்தார்களே, இதை விட அவர்கள் எனக்கு மாபெரும் சிறப்பினைச் செய்ய முடியாது. கோடி கோடியாக எனக்குக் கொட்டிக் கொடுத்தாலும் இதைவிடச் சிறப்பு எனக்குக் கிடைக்காது. எப்போது கலையுலகம் கலைஞர் அவர்களுக்கு மாபெரும் கலை விழா எடுப்பது? நான் எப்போது அதற்குத் தலைமை தாங்குவது? அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கலாம் - எனக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ? இந்த விழாவிற்கு கலைஞர் அவர்கள் சிவாஜி தலைமை தாங்கலாம் என்று பெருமையோடு ஒரு நண்பனுக்கு வாய்ப்பு கொடுத்தாரே, அதை நான் மனமார வரவேற்கிறேன்” என்றுதான் தன் பேச்சினைத் தொடங்கினார். கலைஞனின் பேச்சு பொய்க்காது என்பார்கள். அவர்கள் அன்று ஆற்றிய உரையில் கூறியவாறு அந்த விழாவிற்குப் பிறகு எனக்கு பல விழாக்கள் நடைபெற்றபோதிலும், அவர் அன்று கூறியவாறே அப்படி ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ என்று சொன்னபடி - அந்த மாபெரும் கலைஞன் மறைந்தே போய்விட்டார்.
பின்னர், 23-9-2006 அன்று திரையுலகத்தினரும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து வரி விலக்கு அளித்தமைக்காக நடத்திய பாராட்டு விழாவும் - 9-10-2009 அன்று அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சார்பில் “உலகக் கலைப் படைப்பாளி” என்ற விருதினை வழங்குவதற்காக நடத்திய விழாவும் - இன்னமும் என் இல்லத்திலே மட்டுமல்ல; உள்ளத்திலும் மறையாமல் இருக்கின்றன.
நான் மறைந்தாலும் மறைய முடியாத அந்த அன்புரைகளை - இனிய வாழ்த்துக்களை - அந்த விழாக்கள் நடைபெற்ற மண்டபங்கள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்! இப்போது எனக்கு கலையுலகத்தினர் எடுத்து நன்றி தெரிவிக்கும் விழா கூட - என்னை விளம்பரப்படுத்துவதற்காகவோ - அல்லது யாரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவோ எடுக்கப்பட்ட விழா அல்ல. “நன்றி மறப்பது நன்றன்று” எனும் வள்ளுவரின் குறள் மொழிப்படி நடந்து கொள்வதற்காக நமது கலைஞர்கள், திரையுலகத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய விழாதான்!
“எல்லா முதல் அமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள்” என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலைத் தணித்துக் கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதல் அமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல - அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு - தோழர்களுக்கு அவர் தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு - அவர்கள் விடுத்த கோரிக்கையையேற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக - அவர்கள் காட்டிய நன்றிப் பெருக்கு அந்த விழா!
சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை உணர்ந்து - மகிழ்ந்து - உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக் காட்டிக் கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.
அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய் - அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப் பொட்டு வைத்து அனுப்புவதைப் பார்க்கிறோமே - அதைப் போன்றதொரு பொட்டு - அந்த விழாவில் வைக்கப்பட்டதைப் பெரிதுபடுத்தி - அந்தப் பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப் போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான். அகில இந்தியப் புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதா பச்சன் - நமது சூப்பர் ஸ்டார் தம்பி ரஜினிகாந்த் - கலைஞானி தம்பி கமலஹாசன் - இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து - அது மாசற்ற மலர் எனினும் - அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி - அதைத் தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் “இதுதான் சமயம்” என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று - “இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள் - அவைகள் அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்த போது - அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப் புள்ளி வைத்திடும் முயற்சியாக - தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார். “நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல - இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றிதான் குறிப்பிட்டதாக” அவர் விளக்கம் அளித்ததும் - இதனைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று பெருந்தன்மை பூண்டு தம்பி ரஜினி போன்றவர்கள் அமைதிகாத்ததும் - திரையுலகத் தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் - பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர் பார்த்த வாணம் - புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலகம் விளையும் கலையுலகத்தில் - அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர் தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.
உடன்பிறப்பே, இந்தக் கடிதத்தின் நோக்கத்தையும் - இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன் நின்று நடத்திய தம்பி ராமநாராயணன், தம்பி குகநாதன், தம்பிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால் - அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெரு மகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்! அன்புள்ள, மு.க. 26-2-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 266–270. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.