அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3460

முரசொலி கடிதங்கள் · 3460

தேசிய ஆதி திராவிடர் ஆணையமும், தி.மு.கழக அரசும்!

நாள் 20.2.2010சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3460. தேசிய ஆதி திராவிடர் ஆணையமும், தி.மு.கழக அரசும்! உடன்பிறப்பே,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அய்யன் திருவள்ளுவர் வகுத்த வாக்கிற்கிணங்க, தமிழகத்தில் சாதி, சமய வேறுபாடுகளை அகற்றி சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்னும் உணர்வினை நாட்டிலே மட்டுமின்றி வீட்டிலும் கடைப்பிடித்து வரும் எனது தலைமையிலான கழக அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் ஆண்டாண்டுக் காலமாக விழுந்து கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு சீரிய திட்டங்களைச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் தேசிய ஆதி திராவிடர் நல ஆணையத்தின் சார்பில் நேற்றைய தினம் (3-2-2010) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்காக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்தும் - உதவிகள் குறித்தும் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் என்.எம். காம்ப்ளே அவர்களும், உறுப்பினர் மகேந்திரா போத் அவர்களும் அந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் சில செய்திகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்தது பற்றி தமிழக அரசு தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றிய விளக்கத்தை அளித்திட விரும்புகிறேன்.

ஆதிதிராவிடர்களுள் மிக மிகப் பின்தங்கிய அருந்ததிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு சிறப்பு சலுகைகள் அவசியம் என்ற அடிப்படையில் - ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய - நீதியரசர் திரு.எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழுவை அமைத்து -

அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டை அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் தலைவர் திரு.பூடாசிங் அவர்களுக்கு 25-11- 2008 அன்று தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் நேற்று அளித்த பேட்டியில் அவர்களுக்கு தமிழக அரசு தெரிவிக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார். அது மாத்திரமல்ல, நமது தலைமைச் செயலாளர் அவர்கள் தேசிய ஆதி திராவிட நல ஆணையத்திற்கு எழுதிய கடிதத்திற்கு ஆணையத்தின் சார்பில் 19-2-2009 அன்று நமக்கு பதிலும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதமும் நமது அரசிடம் உள்ளது. எனவே தமிழக அரசு அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று நேற்று பேட்டியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் யாருடைய பேச்சையோ கேட்டுக் கொண்டு செய்தியாளர்களிடம் கூறியிருப்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.

அது மாத்திரமல்ல - அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வது பற்றி தேசிய ஆதி திராவிட நல ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றுதான் விதி இருக்கிறதே தவிர, அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த உள் ஒதுக்கீட்டினை செய்ய வேண்டுமென்பதில் எந்தவிதமான கட்டாயமும் கிடையாது. அதனால்தான் தமிழக அரசின் சார்பில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு இந்த உள் ஒதுக்கீட்டைப் பற்றி தமிழக அரசின் சார்பில் அறிவித்து விட்டு - அந்த ஆணையத்திடமிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் - ஒரு நபர் குழுத் தலைவராக இருந்த நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களையும் கலந்தாலோசித்து - அதற்கு மேலும் அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு செய்ய கால தாமதம் செய்யக் கூடாது என்ற அக்கறையுடன் அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நான் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட - இந்தச் சட்ட முன் வடிவினை துணை முதல்வரைக் கொண்டு பேரவையில் முன்மொழியச் செய்து - அந்தச் சட்ட முன்வடிவினை

நிறைவேற்றித்தர வேண்டுமென்று மன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டு நானே மருத்துவமனையிலிருந்து கடிதமே எழுதியனுப்பி அந்தச் சட்ட முன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த இட ஒதுக்கீடே அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு மாறானது என்றும், அதை எதிர்த்து நீதி மன்றத்தில் கூட வழக்கு தொடரலாம் என்று தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவரே பேட்டியிலே கூறியிருப்பது - அருந்ததிய சமுதாயத்திற்கு செய்த நன்மையைத் தடுக்கின்ற வகையிலே அமைந்துள்ளது மாத்திரமல்ல, அந்தச் சமுதாயத்திற்கே தீமையை விளைவிக்கக் கூடியதுமாகும். எனவே அது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்.

மேலும் திரு. காம்ப்ளே அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே வழக்கத்திற்கு மாறாக - இந்தக் கூட்டத்திலே விவாதிக்கப்படுவதற்காக எடுத்துக்கொண்ட புள்ளி விவரங் களைத் தவிர - வேறு சில புள்ளி விவரங்கள் எங்கே என்று கேட்டு - அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அந்த விவரங்கள் எல்லாம் தரப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆய்வுக்கு என்னென்ன விவரங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று முன்கூட்டியே அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியலுக்கான அனைத்து விவரங்களும் புத்தகமாகவே தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அந்தக் கூட்டத்தில் தரப்பட்டுள்ளன. மேலும் அவர் பேட்டியிலே கூறும் போது “தமிழகத்தில் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதில்லை என்று சொல்லப்பட்டது, ஆனால் அது தொடர்பான புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. இதுதான் எங்களை உலுக்குவதாக உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தில்தான் மாநகராட்சி களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கக் கூடாது என்ற கொள்கையை அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்திட தேவையான நிதி ஒதுக் கீட்டையும் செய்து, அதற்கான இயந்திரங்களையும் வாங்கி வழங்கியுள்ளதை தமிழகத்திலே உள்ள அனைவரும் அறிவார்கள். ஆனால் எப்போதோ எடுத்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு, தன்னிடம் புகைப்படம் இருப்பதாக ஒரு ஆணையத்தின் துணைத் தலைவரே ஒரு மாநில அரசைப் பற்றி இவ்வாறு குறை

கூறியிருப்பது சரிதானா என்பதை தமிழ்நாட்டிலே உள்ள ஆதி திராவிட மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் அவர் தனது பேட்டியில் - “நீதி மன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனை தரப்படும் விகிதம் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. இதற்கு அரசு வக்கீல்கள் திறமையின்றி இருப்பது காரணமாக இருக்கக் கூடும். இல்லையெனில் நீதிமன்றங்களில் இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்” என்று சொல்லியிருப்பது - அரசு வழக்கறிஞர்களை வேண்டுமென்றே குறை கூறுவதும், நீதிமன்றங்களைக் குறை கூறுவதாகவும் உள்ளது. கூட்டம் நடைபெற்ற போதே, இந்தக் கேள்விகளுக்கு சரியான விளக்கங்களை தலைமைச் செயலாளரும், நிதித்துறை செயலாளரும், உள்துறை செயலாளரும், மற்ற அதிகாரிகளும் அளித்த பிறகும்கூட, அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்.

ஆதி திராவிடர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவது பற்றி கேட்டதாகவும், அதற்கு அத்திட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பதில் கூறப்பட்டதாக திரு. காம்ப்ளே குறை கூறியிருக்கிறார். ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு வசதி செய்து தரும் திட்டம் மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றாகும். மாநில அரசுக்கும் அதிலே பங்கு உண்டு. அந்தத் திட்டத்தைப் பற்றி இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட புள்ளி விவரத்தில் - 2006-2007இல் 36,556 (60 சதவிகிதம்) வீடுகளும் - 2007-2008இல் 47,256 (56.32 சதவிகிதம்) வீடுகளும், 2008-2009இல் 45,728 (53 சதவிகிதம்) வீடுகளும் கட்டப்பட்டுள்ளன என்று பக்கம் 39இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் எதையும் சரியாகச் சொல்லவில்லை என்று பேட்டியிலே கூறியிருக்கிறார்.

திரு.காம்ப்ளே அவர்கள் இறுதியாக அனைத்து மாநிலங்களையும் குறை கூறும் வண்ணம் எந்த மாநிலமுமே எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லை என்று சொல்லியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், மத்திய அரசையும் மற்ற மாநில அரசுகளையும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் உள்ளது. ஆதி திராவிட மக்கள் நலனில் கழக அரசு எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு ஆட்சியிலே இருந்த காலங்களில்

எல்லாம் நன்மைகளை அளித்திருக்கிறது என்பதற்கான விவரங்களையும் சுருக்கமாக அளித்திட விரும்புகிறேன்.

1969 வரை ஆதிதிராவிடர் நலத்துறையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் இணைந்திருந்தது. 2.5.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை எனப் புதிய துறையை தனியே உருவாக்கி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை - முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்காகவே செயல்படும் நிலையை உருவாக்கியது கழக அரசுதான். அதைப்போலவே, 2000ஆம் ஆண்டில் பழங் குடியினருக்குத் தனித்துறையை உருவாக்கியதும் கழக அரசுதான்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இருந்த 16 சதவிகித இட ஒதுக்கீட்டினை 1971ஆம் ஆண்டில் 18 விழுக்காடாக உயர்த்தியது கழக அரசு. பின்னர் 1990ல் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து, பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்க வழி செய்ததும் கழக அரசுதான்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் கழக அரசு உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமானத் திட்டம் ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ திட்டம். இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பிலும் 100 வீடுகள் கட்டப்பட்டு; அவற்றுள் 40 வீடுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 25 வீடுகள் மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 10 வீடுகள் இதர பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 172 சமத்துவபுரங்கள் திறந்து வைக்கப்பட்டு, அதில் அனைத்துப் பிரிவினரும் நல்லிணக்க உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த மாதிரியான புரட்சிகரத் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சிறப்பு உள்ளடக்கத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக மாநில ஆண்டு திட்டத்திலிருந்து 19

சதவிகிதத்திற்கு அதிகமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிதி செல்லுமாறு கண்காணித்து வருகிறது. ஆண்டாண்டு காலமாக மண் குடிசைகளில் வாழ்ந்து வரும் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைக்கும் சீரிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர் இலவச வீட்டு வசதிக் கழகம் 15.2.1974 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம்தான் பின்னர் “இந்திரா வீட்டுவசதித் திட்டம்” என மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சாதி வேறுபாடுகளை ஒழித்திட “அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்” எனும் திட்டம் கழக அரசில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் எனில் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கரைப் போற்றுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பது கழக அரசுதான். அண்ணல் அம்பேத்கர் பெயரில் சென்னையில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசின் திட்டப் பணிகளில் பிரித்தளிக்கக் கூடியவற்றில் - ஆதி திராவிடர் துணைக் கூறுத் திட்டத்திற்கென தனி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2005-2006 ஆம் ஆண்டில் ரூபாய் 567 கோடியாக இருந்த இந்த ஒதுக்கீடு - 2009-2010 ஆம் ஆண்டு நிதியாண்டில் நான்கு மடங்காக அதாவது 2,615 கோடியாக உயர்த்தப்பட்டது என்பதையெல்லாம் மறைத்து விட்டு - தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதைப் போல ஒரு ஆணையத்தின் துணைத் தலைவர் சொல்லியிருப்பதற் காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - இது பற்றிய விவரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு, குறிப்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் இருக்கிறேன். அன்புள்ள, மு.க. 20-02-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 260–265. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்