அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3441

முரசொலி கடிதங்கள் · 3441

உடன் பிறப்புகளில் ஒருவனாக விடுக்கும் வேண்டுகோள்!

நாள் 13.12.2009சுமார் 10 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3441. உடன் பிறப்புகளில் ஒருவனாக விடுக்கும் வேண்டுகோள்!

உடன்பிறப்பே,

திருச்செந்தூர் தொகுதியிலும், வந்தவாசி தொகுதியிலும் வரும் 19ஆம் தேதியன்று இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. கழக தென் மண்டல அமைப்புச் செயலாளர் தம்பி மு.க. அழகிரியும், அப்பகுதி மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக அமைச்சர்களும் திருச்செந்தூர் தொகுதியிலேயே முகாமிட்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோலவே வந்தவாசி தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டக் கழகச் செயலாளர் எ.வ. வேலுவும், அந்தப் பகுதி மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக அமைச்சர்களும் முகாமிட்டு பம்பரமென சுழன்று தேர்தல் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பேராசிரியர், துணை முதல்வரும் கழகப் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி மற்றும் கழக முன்னணியினர் இந்த இரண்டு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இடைத் தேர்தல் என்பதாலும், என் உடல் நிலை கருதியும் நான் நேரடியாக அந்தத் தொகுதிகளுக்கு வராவிட்டாலும், மடல் வாயிலாகவாவது நம் அண்ணன் நம்மிடம் ஒரு முறை வாக்கு கேட்டானா என்று நீ கேட்டு விடக் கூடாதல்லவா? அதற்காக மட்டுமல்ல; எதிர் தரப்பினர் இந்தத் தேர்தலில் என்ன சொல்லி வாக்குக் கேட்பது? அரசின் மீது என்ன குற்றஞ்சாட்டுவது? என்று தெரியாத நிலையில் குழப்பமடைந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக அருந்ததிய சமுதாயத்திற்கு பல ஆண்டுகளாகக் கேட்டுக் கிடைக்காத கோரிக்கையான மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டினை நாம் செய்து கொடுத்து, அதன் வாயிலாக அவர்கள்

பெரும் பயன்பெற்று, அதற்காக வள்ளுவர் கோட்டமே கொள்ளாத அளவிற்கு எனக்கு நன்றியறிவிப்பு கூட்டம் நடத்திய மூன்றாம் நாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திருச்செந்தூரிலே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருந்ததிய சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று பேசுகிறாரா என்றால், அந்தத் தொகுதி மக்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றுதான் வருத்தப்படுகிறேன்!

நாம் வாக்காளப் பெருமக்களிடம் சென்று வாக்குகளைக் கேட்கிறபோது, நம் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லி, எங்களை பதவியிலே அமர்த்தினீர்கள், நாங்கள் சும்மாயிருக்கவில்லை, இதோ இவையிவைகளைச் செய்திருக்கிறோம் என்று பட்டியலிட்டுக்காட்டி அதன் பெயரால் வாக்குகளைக் கேட்க முடிகிறது. அதே சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சென்று அவர்கள் ஆட்சியிலே செய்த கொடுமைகளைப் பட்டியலிட்டுத்தான் வாக்கு கேட்க முடியும். அல்லது அரசு அலுவலர்க்கும், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட அக்கிரமங் களையெல்லாம்தான் பட்டியலிட்டுக்காட்டி வாக்கு கேட்க முடியும்.

ஆனால் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் கழக அரசு செய்த சாதனைகளை வாக்களிக்கப் போகும் மக்களுக்கு நினை வூட்டுவதற்காக ஒருமுறை பட்டியலிட விரும்புகிறேன். இதோ அவற்றில் சில மட்டும் :-

❖ கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி; 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

❖ ஏழை எளியோர்க்கு விலைவாசியின் கடுமை குறைய பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவை சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

❖ 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;

❖ விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 9 சதவீதம், 2006- 2007இல் 7 சதவீதம்; 2007-2008இல் 5 சதவீதம்; 2008-2009இல்

4 சதவீதம்; 2009-2010இல் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு வட்டி ரத்து.

❖ குவின்டால் ஒன்றுக்கு சாதாரண நெல் 850 ரூபாய்; சன்ன ரக நெல் 880 ரூபாய் என மத்திய அரசு சென்ற ஆண்டு நிர்ணயித்த விலைகளை உயர்த்தி, சாதாரண நெல் விலை 1000 ரூபாய் என்றும், சன்ன ரக நெல் விலை 1050 ரூபாய் என்றும் வழங்கப்பட்டது.

❖ உழவரும், நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட மாநிலமெங்கும் 117 உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு;

❖ மத்திய அரசு 9.5 சதபிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் 1077 ரூபாய் 60 காசு என நிர்ணயித்த விலையைவிட மாநில அரசின் பரிந்துரை விலையாக 359 ரூபாய் 80 காசு சேர்த்து ஒரு டன் கரும்புக்கு 1437 ரூபாய் 40 காசு என உயர்த்தியுள்ளதுடன் போக்குவரத்துக் கட்டணமாக 90 ரூபாய்; சர்க்கரைக் கட்டுமான ஊக்கத் தொகை 22 ரூபாய் 60 காசு சேர்த்து கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 1550 ரூபாய் வழங்கிட 24.9.2009 அன்று ஆணை: இது கடந்த ஆண்டைவிட டன் ஒன்றுக்கு 330 ரூபாய் கூடுதலாகும்.

❖ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 சதவீத காப்பீட்டுத் தொகையாக அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ளதால் 2008-2009 ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க்காப்பீடு செய்தனர். 2008 டிசம்பரில் பெய்த பெருமழையால் சேதமடைந்த பயிர்களுக்காக 5 இலட்சத்து 36 ஆயிரத்து 352 விவசாயிகளுக்கு 656 கோடியே 66 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டு மாநில அரசின் பங்காக 306 கோடியே 48 இலட்ச ரூபாய் 4.9.2009 அன்று விடுவிக்கப்பட்டு, விவசாயிகள் பயன்.

❖ 2009-2010 ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்திடும் 25 இலட்சம் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கிட 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

❖ ஆதிதிராவிட விவசாயிகள் “தாட்கோ” நிறுவனத்தின் மூலம் 31.8.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி;

நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வாங்கிய கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து;

❖ மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைத்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீரை வறண்ட மாவட்டங் களுக்குக் கொண்டு சென்று பாசன வசதிகளைப் பெருக்கிடும் புரட்சிகரமான திட்டத்தின் முதற்கட்டமாக 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்;

❖ 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிர பரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்;

❖ கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006இல் 61 இலட்சம் டன்; 2008-2009இல் 91 இலட்சம் டன் என உயர்வு.

❖ விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 30 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 77 ஆயிரத்து 817 உறுப்பினர்கள் சேர்ப்பு;

❖ 11 இலட்சத்து 96 ஆயிரத்து 705 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 544 கோடியே 8 இலட்சத்து 28 ஆயிரத்து 87 ரூபாய் உதவித் தொகை;

❖ 2 ஆயிரத்து 678 கோடியே 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் பணிகளில் இதுவரை 2144 கோடியே 19 இலட்சத்து 59 ஆயிரத்து 216 ரூபாய் செலவில் 89 இலட்சத்து 78 ஆயிரத்து 496 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்படுவதுடன் மேலும் தேவைப்படுவோருக்கு வழங்கிட 40 இலட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கிட 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

❖ ரூபாய் 360 கோடி செலவில் 20 இலட்சத்து 680 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன;

❖ 1 இலட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் இலவச நிலம்;

❖ 6 இலட்சத்து 85 ஆயிரத்து 976 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்;

❖ காமராஜர் பிறந்த நாளில் “கல்வி வளர்ச்சி நாள்” என சட்டமியற்றி பள்ளிகளில், கல்வி விழா;

❖ 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்; வாழைப்பழங்கள்;

❖ தமிழ் வழியில் பயிலும் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 இலட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

❖ பட்டப்படிப்பு பயிலும் 3 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

❖ படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர்வரை வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற்பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் அவர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை;

❖ ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 இலட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர் களுக்கும் இலவச பஸ் பாஸ்;

❖ ஏழை மகளிர்க்கு பட்டப் படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

❖ தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

❖ கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்;

❖ 2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய 7 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்;

❖ மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள்;

❖ அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள்.

❖ பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்;

❖ நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.

❖ அருந்தமிழ்ச் சான்றோர் 81 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு 5 கோடியே 33 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

❖ 3072 திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன ;

❖ மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமணத்திட்ட நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, இரண்டு இலட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்களுக்கு 315 கோடியே 93 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 75 ஆயிரம் ஏழைப் பெண்கள் பயன்பெற ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு;

❖ ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து பெற 6 ஆயிரம் ரூபாய் வீதம் 15 இலட்சத்து 47 ஆயிரத்து 205 ஏழை மகளிர்க்கு 774 கோடியே 48 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி; மேலும் 4 இலட்சம் தாய்மார்கள் பயன்பெற ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

❖ திருமணமாகாமல் 50 வயது கடந்து வறுமையில் வாடும் 9 ஆயிரத்து 158 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகை;

❖ “வருமுன் காப்போம் திட்டம்” மீண்டும் செயல்படுத்தப்பட்டு 10 ஆயிரத்து 394 மருத்துவ முகாம்களில் 91 இலட்சம் ஏழை எளியோர் பயன்; இவ்வாண்டில் மேலும் 4500 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு இதுவரை நடத்தப்பட்ட 2361 முகாம்களில் 21 இலட்சத்து 24 ஆயிரத்து 922 பேர் பயன்;

❖ தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2006இல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 766 என்பது, 2008இல் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 78 ஆக மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சி;

❖ மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 இலட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கும் இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் 21.11.2007இல் தொடங்கி, 653 குழந்தைகளுக்கும், பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் 3.6.2008 இல் தொடங்கி 1663 பள்ளிச் சிறார்க்கும் 13 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 23 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

❖ கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 32 கோடி ரூபாய் செலவில் அதிநவீன “அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது;

❖ அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்ச ரூபாய் வரை நிதியுதவி வழங்கும் புதிய “மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;”

❖ ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெற “உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” 517 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரை 1 கோடியே 31 இலட்சத்து 53 ஆயிரத்து 161 குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 ஆயிரத்து 639 ஏழை மக்களுக்கு 57 கோடியே 5 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது;

❖ 1 இலட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 இலட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்;

❖ ஏறத்தாழ 2 இலட்சத்து 20 ஆயிரத்து 292 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 45 ஆயிரத்து 891 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புதிய தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் 11 அரசாணைகள் வெளியிடப்பட்டு 36 தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை களில் இதுவரை 9 தொழிற்சாலைகள் திறப்பு;

❖ 3 இலட்சத்து 53 ஆயிரத்து 488 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 156 கோடியே 15 இலட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது;

❖ ஏறத்தாழ 3 இலட்சத்து 44 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன;

❖ முதியோர், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 400 ரூபாய் என உயர்வு; 7 இலட்சத்து 39 ஆயிரத்து 541 முதியோரும், 7 இலட்சத்து 90 ஆயிரத்து 41 ஆதரவற்றோரும் பயன்.

❖ கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ஊனமுற்றோர் பயன்;

❖ 1989இல் தருமபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர்

சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 4,12,104. இக்குழுக்களில் சேர்ந்துள்ள மகளிர் உறுப்பினர்கள் எண்ணிக்கை 65 இலட்சத்து 72 ஆயிரம். இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் ரூ. 5041 கோடி.

❖ 2006க்குப்பின் 10 இலட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 72 ஆயிரத்து 346 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 3 ஆயிரத்து 276 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

❖ 1,75,677 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 175 கோடியே 67 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்.

❖ 2,033 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரத்து 96 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப்பணிகள்;

❖ அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 210 கோடி ரூபாய் செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்;

❖ மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிச்சுமையைக் குறைத்து மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

❖ 45 ஆயிரத்து 943 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள்; 4 ஆயிரத்து 730 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இரு வழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.

❖ தமிழகத்தில் உள்ள சாலைகளில் 551 சிறு மற்றும் பெரிய பாலங்கள் 557 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன;

❖ 2004 முதல் 5 ஆண்டுகளில் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளன.

❖ தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயரளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;

❖ ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

❖ அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;

❖ கட்டணம் உயர்த்தப்படாமல் ஏற்கெனவே விடப்பட்ட 9,248 புதிய பேருந்துகளுடன் மேலும் 3500 புதிய பேருந்துகள்;

❖ இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

❖ அருந்ததியர் சமுதாயத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

❖ சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

❖ அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது; 95 சமத்துவபுரங்களில் இதுவரை 19 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன.

❖ சென்னையில் உலகத் தரத்திலான 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நூலகம்;

❖ 450 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்;

❖ 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்;

❖ ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;

❖ 1330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

❖ 630 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது;

❖ மதுரவாயலிலிருந்து சென்னைத் துறை முகத்திற்கு 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலைத் திட்டம்;

❖ மத சுதந்திரம் பேண - கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

❖ மூன்றாவது காவல் ஆணையம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அதுவழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் ஏற்பு;

❖ 2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;

❖ டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதுடன் - 6வது ஊதியக்குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தும் நோக்கில் இடைக்கால நிவாரணமாக மூன்றுமாத ஊதிய நிலுவைத் தொகை 4247 கோடி ரூபாய் வழங்கியது.

❖ அத்துடன், 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

❖ இதன்காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

செய்த சாதனைகளில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.

தமிழகத்திலே உள்ள ஒவ்வொருவரும் இந்தச் சாதனைகளில் ஏதாவது ஒன்றால் பயன்பெறுகிறார்கள். அந்தச் சாதனைகளின் பெயரால் - இத்தகைய சாதனைச் சரித்திரம் படைத்த ஆட்சியின் தலைவன் என்ற நிலையில்தான் அனைத்து மக்களிடமும், அருமைத் தாய்மார்களிடமும் அவர்களின் குடும்பத்து உடன்பிறப்புகளில் ஒருவனாக இருக்கின்ற நான் என்ற உரிமையோடும் - மேலும் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற சமுதாய முன்னேற்ற

நோக்கத்தோடும் அன்பு உடன்பிறப்பே, உன் வாயிலாக நான் வாக்குகளைக் கேட்கின்றேன் என்பதை அவர்களுக்குத் தெரிவித்து

இந்தத் தேர்தல் வெற்றி, நமது இன உணர்வுக்கும், இலட்சிய பிடிப்புக்கும் கிடைத்திடும் வெற்றி என்ற நம்பிக்கையோடு நீ பணியாற்றுவாய்; இந்த இடைத் தேர்தல்களில் வாக்களிக்க வரும் பெரு மக்களும் வாழ்த்து முழக்கத்தோடு இந்த என் நம்பிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருக்கின்றேன்.

அன்புள்ள, மு.க. 13-12-2009

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 119–130. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்