முரசொலி கடிதங்கள் · 3442
சோதனைகளை வென்ற கழக அரசின் சாதனைகள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3442. சோதனைகளை வென்ற கழக அரசின் சாதனைகள்! உடன்பிறப்பே, இன்று 16-12-2009. 19ஆம் தேதி இடைத் தேர்தல்கள். இடையில் இருப்பதோ 48 மணி நேரங்கள்தான். நாளையோடு தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுற இருக்கின்றன. யார் மீதும் எந்தவிதமான குறையும் கூற முடியாத அளவிற்கு தம்பிமார்கள் அனைவரும் இரவுப் பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களோடு சேர்ந்து மகளிரும் இடைவிடாது தேர்தல் பணியிலே ஈடுபட்டிருக்கின்றார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் 8-5-1966 அன்று “தம்பிக்கு” எழுதிய கடிதத்தை முடிக்கும்போது பின்வருமாறு எழுதியிருந்தார். “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளாகவே - தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். என் ஆற்றலின் முழு வேகத்தையும் பணியாற்றுவதிலே இணைத்திருக்கிறேனா? தொடர்ந்து பணியாற்றுகிறேனா? தோழர்களை அணி திரட்டிக் கூட்டாகப் பணியாற்றுகிறேனா? ஆத்திரப்படாமல், பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்று கிறேனா? ஜனநாயகக் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றுகிறேனா? மற்ற எந்தவிதமான ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பணியாற்றுகிறேனா? மக்களுக்கு நல்லாட்சி கிடைத்திடச் செய்யும் மகத்தான தொண்டு என்பதை உணர்ந்து பணியாற்றுகிறேனா? தம்பி! இந்தக் கேள்விகள், ஒருவரை மற்றொருவர் கேட்டுக் கொள்வதற்காக அல்ல; ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே
கேட்டுக் கொள்வதற்காக. ஏன் இத்தனைக் கூறுகிறேன் என்றால், தம்பி! உன்னால் இப்போது செய்திடுவதைக் காட்டிலும் அளவிலும் தரத்திலும் உயர்வான பணியாற்றிட முடியும். நாளை, நாளை என்று எண்ணிக் கொண்டிருந்திடக் கூடாது. இன்று, இன்று - என்ற எழுச்சியுடன் புறப்பட்டாக வேண்டும். இழிமொழி உமிழ்ந்திடுகிறார் ஒரு சிலர்! அவர் தம் அரசியல் ஆணவத்தை அடக்கிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் உன்னிடம் கூறுகிறேன்; முறையிடுகிறேன்.
அண்ணன், அண்ணாதுரை. உடன்பிறப்பே, அண்ணா அவர்கள் 8-5-1966 அன்று எழுதிய கடிதத்தின் வார்த்தைகளைத்தான் இந்த மடலிலே நானும் எழுதுகின்றேன். எதிர்க் கட்சியின் சார்பில் இது தான் தருணம் என்று எண்ணிக் கொண்டு ஏதேதோ குற்றச்சாட்டுகளை நம்மீது சாட்டுகின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்யவில்லையாம்! சிறுபான்மையோருக்கு அவர்கள்தான் பிரதிநிதிகளாம்! அருந்ததியர்களுக்காக நாம் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்கவில்லையாம்! பேசியிருக்கிறார்கள் திருச்செந்தூரிலே சென்று!
1992ஆம் ஆண்டு நடைபெற்ற கரசேவையின் போது பெரும்பான்மையினருக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசும்போது சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிடவில்லையா?
24-11-1992 தேதிய “தினமணி” நாளிதழிலேயே ஜெயலலிதாவின் பேச்சு வெளிவந்திருந்ததே! அப்போது என்ன பேசினார்?
“அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு, இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச் சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக்
கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும். பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப்போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். கரசேவையை அனுமதிக்கும்படி நீதி மன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டு கோளைத் தெரிவிக்கிறேன். உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. பொது மக்கள் கருத்தை இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது.” இவ்வாறு சிறுபான்மையினருக்கு விரோதமாக பேசியவர், இப்போது திருச்செந்தூருக்குச் சென்று சிறுபான்மையினருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசுகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய ஏமாற்று வித்தை? இஸ்லாமியர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் குறிப்பாக எனக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்றுகள் கூறவா? 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி செல்லும் மாணவனாக இருந்தபோதே, திருவாரூரிலே நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே - நான் கொடிபிடிக்கும் சிறுவனாக - பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக- அந்த மாநாட்டிலே கலந்துகொண்டேன் என்பதை நான் பெருமையோடு நினைவு கூர்கிறேன். 1969-ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001-ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது; 1973-ல் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி
முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974-ல் சென்னை-அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டியது; 1989-ல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், “சிறுபான்மையினர் நல ஆணையம்” ஒன்றை 13.2.1989 அன்று உருவாக்கியது; 1999-ல் வக்ஃபு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 இலட்ச ரூபாய் வழங்கியது; 1999-ல் “தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்” என ஒரு அமைப்பினை 1. 7.1999 அன்று உருவாக்கியது; 2000-ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை 19.7.2000 முதல் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது; 2000-ல் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று “உருது அகடமி”யைத் தொடங்கியது; 2001- ல் “காயிதே மில்லத் மணிமண்டபம்” 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது; சிறுபான்மையினரின் நலனுக்கென தனி இயக்குநரகம் ஒன்றை 6.4.2007 அன்று அமைத்தது; “உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” என ஒரு வாரியத்தை 2009, மார்ச் திங்களில் ஏற்படுத்தி யது; என்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங்காதவை.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, 1947ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரையில், தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையிலே இடம் தரவேண்டுமென்ற குரலை முதன் முதலாக எழுப்பியவர் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். அதற்குப் பிறகுதான் 1962-ல் கடையநல்லூர் மஜீத் அவர்கள் காங்கிரஸ் அமைச்சரவையிலே அமைச்சராக இடம் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகம்தான் முதன்முதலாக தமிழகச் சட்டமன்ற மேலவைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை, அதாவது திருச்சி ஜானிபாய் அவர்களை நியமித்தது. ஜனாப் அப்துல் சமது அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியதும் தி.மு.க. தான். 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் பெரியகுளம் மேத்தா, நெல்லை கதிரவன், சாதிக்பாட்சா ஆகிய மூவர் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆனார்கள்.
2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலில் ஒரு ஆறு மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக திரு.அன்வர்ராஜா இடம் பெற்றிருந்தார்; ஆனால், அதற்குப்பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.
தற்பொழுது, 2006-ல் பொறுப்பேற்ற கழக ஆட்சியில் இரண்டு முஸ்லிம்கள், அதாவது, திரு.உபயதுல்லா, திரு.மைதீன்கான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத தி.மு.க. அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை - என்ற உண்மைகள் அனைத்தையும் அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள்.
நீதியரசர் திரு.ஜனார்த்தனன் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய”த்திடம் இஸ்லாமியர் இட ஒதுக்கீடு பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து, உரிய பரிந்துரையைப் பெற்று முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியது.
இதுபோலவே மீனவர்களுக்கு கழக அரசு செய்த சாதனைகளில் ஒரு சிலவற்றையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே? கழக ஆட்சியில் தானே? சிங்காரவேலர் என்றால் யார் என்று கேட்கக் கூடியவர்கள் எல்லாம் மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்றால் மீனவர்கள் நம்புவார்களா?
மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது கழக அரசு அல்லவா?
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்தைக் காத்திடும் பொருட்டு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கிடவும், இலங்கை கடலோரக் காவல் படையினரால்
சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு பாதுகாப்பு
நிதியாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவும் கழக ஆட்சியிலே முடிவெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மீன் பிடித் தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவீத பங்குத் தொகை 300 ரூபாயுடன் சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006-2007இல் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 853 உறுப்பினர்களுக்கு 21 கோடியே 20 இலட்சம் ரூபாயும் - 2007-2008இல் 1 இலட்சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு 20 கோடியே 83 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008-2009இல்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவர் களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம்;
செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கும் திட்டம்;
மீனவர்களுக்காக மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்;
மீனவர்களின் நல்வாழ்வு கருதி தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தை அமைக்கப்பட்டு ஐந்து கோடி ரூபாய் நிதியும் கழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது;
இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 50 விசைப்படகுகள் 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.
மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம்.
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்களை கூடுதல் நிவாரணமாக வழங்கும்
பொருட்டு 110 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் வலைகள், கவச உடைகள், கை விளக்குகள், மிதி வண்டிகள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகள் முதலியவை 42 ஆயிரம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5 ஆயிரத்து 635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட 19 கோடியே 56 இலட்சம் ரூபாய் கடன் மற்றும் வட்டித் தொகை முழுவதையும் கழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.
உடன்பிறப்பே, கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லா வித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இதனை மக்கள் அனைவரும் அறிவார்கள். ஆனால் எதிர்க்கட்சியின் சார்பில் இடைத் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்காக வருபவர்கள் எதையாவது மக்களிடம் சொல்லியாக வேண்டுமே என்பதற்காக சிலவற்றைப் பேசுகின்றார்கள். அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்று இல்லாவிட்டாலும், அதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் என்னென்ன செய்தோம் என்பதை மக்களுக்கு நினைவூட்டு வதற்காக ஒரு வாய்ப்பாகக் கொண்டு இதனை எழுதியிருக்கிறேன்.
இந்த விவரங்களை நீயும் தெரிந்து கொள்வதோடு, தொகுதியிலே உள்ள உடன்பிறப்புகளுக்கும் சொல்லி அவர்களை யெல்லாம் நமது உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றிக் கனியைப் பறித்திட ஆவன செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சோதனைகளை வென்ற கழக அரசின் சாதனைகளே; ஜனநாயகக் களத்தில் நமது போர்க் கருவிகள் என்பதை மறந்து விடாதே!
அன்புள்ள, மு.க. 16-12-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 131–137. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.