முரசொலி கடிதங்கள் · 3443
அவர்களும் நாமும்; ஓர் ஒப்பீடு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3443. அவர்களும் நாமும்; ஓர் ஒப்பீடு! உடன்பிறப்பே,
என்னுடைய செயலாளர் இன்று (18-12-2009) மதியம் என்னிடம் ஒரு செய்தியைக் கூறினார். திண்டுக்கல் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 19, 20ஆம் தேதிகளில் ஒரு மாநாடு நடத்த விருப்பதாகவும், 21ஆம் தேதி பேரணி நடத்த விருப்பதாகவும் போலீசார் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தோழர் வரதராசன் அவர்களே தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார் என்றும் திரிபுரா மாநில முதலமைச்சர் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் முதல்அமைச்சரிடம் கூறி ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார் என்று என் செயலாளர் என்னிடம் கூறியவுடன், அவரிடம் நான் உடனடியாக தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த மாநாட்டிற்கும், பேரணிக்கும் அனுமதியினை வழங்குமாறு அறிவுறுத்தினேன்.
அதன் பின்னர் முரசொலி அலுவலகத்தில் நுழைந்த என் கண் எதிரே இன்றைய “தீக்கதிர்” நாளேடு இருந்தது. அதன் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தி வருமாறு :-
“2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியிலிருந்து மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான தோழர் பொ. மோகன் அவர்கள் வழக்கு தொடுத்திருந்தார். பொ.மோகன் அவர்கள் மறைவுற்ற பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் (மாற்று வேட்பாளராக
மனு செய்தவர்) வாதியாகச் சேர்க்கப்பட்டு அவ்வழக்கை தொடர்ந்து நடத்துவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இந்த வழக்கு நடைபெறட்டும். நீதிமன்றம் தீர்ப்பு கூறட்டும். அவர்களின் தீர்ப்பை நமது கழகம் ஏற்கத் தயாராக இருக்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலே உள்ள சிலர் எப்படிப்பட்ட உணர்வோடு இருக்கிறார்கள், நாம் எப்படிப்பட்ட உணர்வோடு இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக ஒருசிலவற்றை எண்ணிப் பார்த்தேன்.
23-4-1997 - அப்போது தி.மு.கழகம்தான் ஆட்சியிலே இருந்தது. அன்று மதுரையில் மாநகராட்சி உறுப்பினராக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருமதி லீலாவதி அவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து 24-4- 1997 அன்று பேரவையில் ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் உரையாற்றும்போது, “மதுரையிலே கொலை செய்யப்பட்ட திருமதி லீலாவதி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு கடுமையான உழைப்பாளி. பொது நலத் தொண்டர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கணவர் திரு. குப்புசாமி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தன் மனைவி லீலாவதி மதுரை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், அதே வார்டில் அவருக்கு எதிராக திருமதி வள்ளி (கருமலையான் என்பவரின் துணைவியார்) போட்டியிட்டு தோல்வியடைந்து விட்டார் என்றும், அதன்பிறகு கருமலையானும், அவரது சகோதரர் முத்துராமலிங்கமும் (இவர் 59வது வட்ட தி.மு.கழகச் செயலாளர்) திருமதி லீலாவதியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்து, அவரைப் பயமுறுத்திச் சென்றார்கள் என்றும், 23-4-1997 காலை திருமதி லீலாவதி கடைக்குச் சென்றபோது அவரை மேற்கண்ட இரு நபர்களும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால் திருமதி லீலாவதி அதே இடத்தில் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, கருமலையான் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற எதிரிகளையும் கைது செய்ய
காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்வது - இந்தக் கொலையிலே சம்பந்தப் பட்டவர்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்த தி.மு.க. வினர் என்றாலும்கூட, எந்தவிதமான தயவு தாட்சண்யமும் காட்டாமல், பாரபட்சமின்றி அரசு காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்பதை நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு நான் கூறியதோடு மட்டுமல்ல, அந்த வழக்கில் குற்றவாளிகள் தி.மு. கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் - அப்போது ஆளுங்கட்சியாக தி.மு.கழகம் இருந்த போதிலும் - அந்த வழக்கு முறையாக நடைபெற்று தி.மு.க.வைச் சேர்ந்த குற்றவாளிகள் நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டார்கள். ஜாமீனிலே வரக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் - “அந்த வழக்கிலே அரசாங்க வழக்கறிஞர் ஆஜராகக் கூடாது, அரசாங்க வழக்கறிஞர் வாதாடினால் தி.மு.க.வைச் சேர்ந்த குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள், எனவே எங்கள் கட்சியைச் சேர்ந்த, நாங்கள் சொல்லும் வழக்கறிஞரைத்தான் ஆஜராக ஆணையிட வேண்டும்” என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அதனையும் நான் ஏற்றுக் கொண்டு, அவர்கள் தெரிவித்த வழக்கறிஞரையே அந்த வழக்கில் வாதாட நியமித்தேன். வழக்கு நடைபெற்று தி.மு.க.வைச் சேர்ந்த அந்தக் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். இது நடைபெற்ற சம்பவம். இந்த நேரத்தில் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலே நடை பெற்ற ஒரு சம்பவத்தையும் உங்கள் நினைவிற்குக் கொண்டுவர விரும்புகிறேன். குடவாசலில் தங்கய்யா என்ற ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கொல்லப்பட்டார். அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த ஆட்சியிலே பொறுப்பிலே இருந்த ஒரு அமைச்சருடைய காரிலேயே பாதுகாக்கப்பட்டார். கழக ஆட்சி வந்த பிறகுதான் அந்த வழக்கிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் இதையெல்லாம் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டு மார்ச் திங்களில் மாநிலங்களவைத் தேர்தல் நடை பெற்றது. அதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது செய்து கொண்ட உடன்பாட்டின்படி தி.மு. கழகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் திரு. டி. ராஜா அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தது. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மாநிலங்களவைத் தேர்தல் குறித்து எந்த உடன்பாடும் செய்து கொள்ளவில்லை. இருந்தாலும் தி.மு. கழகம் தன்னுடைய தோழமைக் கட்சிகளிடம் கொண்டுள்ள தோழமை உணர்வோடு, 2008ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தன்னிடம் கூடுதலாக இருந்த 28 வாக்குகளை வழங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தது. ஆதரிக்க முன்வந்ததோடு மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தோழர் டி.கே. ரெங்கராஜனின் வேட்பு மனுவையே முன்மொழிந்து நான்தான் கையெழுத்திட்டேன். அந்த நேரத்தில் பேட்டியளித்த ரெங்கராஜன் தான் மாநிலங்களவையில் நுழைவதற்கு வழிவகுத்த கலைஞர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பதாக கூறியதோடு, “தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதுவரை டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், நல்லசிவம் ஆகிய மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது மார்க்சிஸ்ட் உறுப்பினராக நான் (டி.கே. ரெங்கராஜன்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நாங்கள் நான்கு பேருமே தி.மு.க.வின் சார்பில் மேல்சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். முதல்வர் கலைஞர் எனது வேட்பு மனுவை முன்மொழிந்தது மட்டுமல்லாமல், இந்தத் தேர்தலில் போட்டி வரும் என்றால் தி.மு.க.வின் வாக்குகளை மேலும் அளிப்பதாக உறுதி கூறினார். முதல்வர் கலைஞர் அவர்கள் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தார். இதை மனதில் வைத்துத்தான் கடந்த காலங்களில் சட்டமன்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தல்களுக்கான ஒதுக்கீடுகளை அவர் செய்துள்ளார்”
என்று கூறியது ஏடுகளில் இன்னமும் இடம் பெற்றுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றல்ல - தோழமைக் கட்சிகளோடு - அவர்கள் தோழமையாக இருந்த காலத்திலும் சரி, இல்லாத காலத்திலும் சரி - எந்த அளவிற்கு நேச உணர்வோடு விட்டுக் கொடுத்து அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தி.மு.கழகம் நடந்து கொள்கிறது என்பதை தெளிவாக்கவும், அதே நேரத்தில் மற்ற கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பதை அந்தக் கட்சியின் தோழர்களே தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கடிதம்!
அன்புள்ள, மு.க. 20-12-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 138–142. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.