முரசொலி கடிதங்கள் · 3446
செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-2 கால்டுவெல் காட்டிய திராவிடத் தனிச்சிறப்பு
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3446. செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-2 கால்டுவெல் காட்டிய திராவிடத் தனிச்சிறப்பு
உடன்பிறப்பே,
தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887 ஆம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856 ஆம் ஆண்டு அறிஞர் கால்டுவெல் அவர்கள், தாம் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian Languages)” என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில்,
“திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச்
செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ்,
தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச்
சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு
அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்
பெற்று வளர்வதும் இயலும்.
செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப்
பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கி
யங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய
பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த
சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது. சமஸ்கிருதச்
சொற்களையும் எழுத்துக்களையும் மேற் கொள்வதை
வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு
வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை
மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும்
விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்
பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை,
பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது. (The
ancient or classical dialect of the Tamil language, called Shen-Tamil or correct Tamil, in which nearly all the literature has been written, contains exceedingly little Sanskrit; and differs from the colloquial dialect, or the language of prose, chiefly in the sedulous and jealous care with which it has rejected the use of Sanskrit derivatives and characters, and restricted itself to pure Ancient Dravidian sounds, forms, and roots)”
- என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.
தமிழ் மொழியின் தொன்மையும், தூய்மையும், வலிமையும், வனப்பும் - கற்றோர் அனைவரையும் கவர்ந்திழுத்து; உயிருக்கும் மேலென உணரவைத்திடும் தகுதி மிக்கதாகும். அப்படித் தமிழால் கவரப்பட்ட வெளிநாட்டவர் அநேகர். அவர்களுள் தலையாயவர் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் கால்டுவெல், 1838ஆம் ஆண்டு தனது 24ஆம் வயதில் மதபோதகராக, “லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தின்” மூலமாகச் சென்னை வந்தடைந்தவர்; பின்னர் நெல்லைப் பேராயராகப் பொறுப்பேற்று, பன்னூறு ஓலைச்சுவடிகளையும், சங்ககாலத் தமிழிலக்கியத்தையும் பயின்று, புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல்சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்து, நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில் நெல்லை வரலாற்றைப் பற்றி நூல் எழுதினார். திராவிட மொழிகள்
(Dravidian Languages)’ என்ற சொல்லாக்கத்தை உருவாக்கியவர்
கால்டுவெல் அவர்களே ஆவார். அறிஞர் கால்டுவெல் அவர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சி
அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார்கள். தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய இராபர்ட் கால்டுவெல் அவர்களது திருவுருவச் சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக
மேலவைத் தலைவர் திரு.எம்.ஏ.மாணிக்கவேலர் அவர்களது தலைமையில், பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரையார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மிகவும் ஆழமான புலமை கொண்டு, புகழ் உருவமாகத் திகழ்ந்த டாக்டர் கால்டுவெல் அவர்கள் தமிழைச் செம்மொழியென்று அறிவித்தது; செம்மொழி வரலாற்றில் நமக்கு மாணிக்கப் புதையலாகக் கிடைத்திட்ட மகத்தான பொன்னேடாகும்.
தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும். அத்தீர்மானம் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:
“சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் ஆதரவில் வெள்ளிக்கிழமை (15.3.1918) மாலை 5.45 மணிக்குப் பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் தமிழ் மொழிக்குரிய சில தீர்மானங்கள் செய்தற்பொருட்டு ஏறக்குறைய 400 தமிழ் மக்கள் கூடினர். பல பண்டிதர்களும், வித்துவான்களும், ஆங்கிலேய பட்டதாரிகளும் கூட்டத்தைச் சிறப்பித்தனர். தமிழ் அகராதிக் கழகத் தலைவரான சாண்டலர், எம்.ஏ., தலைவராக அமர்ந்து, தமிழ்மொழியின் உணர்வைக் குறித்துச் சில செய்திகள் பேசிய பின்னர், தீர்மானம் 1.
திராவிட மொழிகளுள் தொன்மையும் சீர்மையும் தலைமையும் பெற்றொளிர்கின்ற உயர் தனிச்செம்மொழி தமிழேயாம். இயற்கைச் செவ்வொளிகளானியன்ற எழுத்துடைமையின், என்றும் வழங்குமியல்பிற்றாய்த் தொன்மையே தனக்கென வகுத்த வரிவடிவுடையதாய்ப் பல்வளமிக்க பண்டையிலக்கண இலக்கிய நுண்ணூற் பெருக்குடையதாய்த் தனக்கே சிறக்கும் அகப்பொருள் நுணுக்கமும் புறப்பொருட் பொலிவும் அருணூற் செம்மையும் உடையதாய்த் திகழா நிற்றலின், அது சர்வகலா சங்கத்தாரால் ஆரியம், அரேபியம், பாரசீக முதலிய ஏனைத்தனி மொழிகளோடொப்ப வைத்துப் போற்றப்படவேண்டு மென்னும் முதல் தீர்மானத்தை திரு.கே.சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ.,எம். எல்., முன்மொழிந்தார். தமிழ்மொழி மிகத்தொன்மையும், சிறப்பும்
வாய்ந்த ஒரு மொழி என்றும், திராவிட நூல்களைக் குறித்துச் சில வடமொழி உபநிடதங்களில் குறிக்கப்பட்டுள்ளமையே அதன் பழைமையை நன்கு விளக்குமென்றும், தமிழ்ப் பண்டை இலக்கண மாகிய தொல்காப்பியம், வடமொழிப் பாணினீயம் என்னும் இலக்கணத்துக்கு முன்னரே செய்யப்பட்டதென்றும், தமிழ்மொழி யின்கண் உள்ள எழுத்துக்கள் இயற்கை ஒலிகளால் அமைந்த எழுத்துக்களென்றும், தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தால் அவற்றின் நுணுக்கங்கள் வெளியாகுமென்றும் கூறி முடித்தனர். பின்னர் அந்த முன்மொழிவினை திரு ஆர்.பி.சேதுப்பிள்ளை பி.ஏ., அவர்கள் வழிமொழிந்து பேசும் பொழுது, தமிழ் மொழியானது ஏனைய உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பவைத்து எண்ணுதற்குரிய உயர்வும் சீர்மையும் உடையதென்றும், இக்காலத்தில் தமிழ் தனிமொழியென்றும், தென்மொழியென்றும் பல அறிவாளிகள் ஒப்புக்கொண்டபோதிலும், அம்மொழி, நூல்வழக்கோடு உலக வழக்கிலும் காணப்படுகின்றமையால் அது உயர்தனிச் செம்மொழி அன்று என்னும் ஆசங்கை நிகழ்த்துபவர்கள், செம்மொழியின் உண்மை இலக்கணம் உணர்ந்தவரல்லர் என்றும், ஒரு மொழியானது திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்தியதாயிருப்பின் அதுவே உயர்தனிச் செம்மொழி என்ற பெயருக்கு உரியதென்றும், தமிழ்மொழியின் திருந்திய பண்பு அதன் பண்டை இலக்கணமாகிய தொல்காப்பியத்தின் திட்ப நுட்பங்களால் தெளியப்படுமென்றும், ஆதலின் தமிழ் ஏனைய உள்நாட்டு இலக்கண வரம்பில்லா மொழிகள் போல எண்ணப்படுதல் கூடாது என்று நடுநிலை தவறாத ஆங்கிலேய நூல் ஆசிரியர்கள் கூறியுள்ளாரென்றும், தமிழ் நூல்களின் தலையாய சிறப்பும், அகப்பொருள் புறப்பொருள் நுணுக்கமும், சொற்சுவை பொருட்சுவைகளும், அதன்சீர்த்த நாகரிகத்தை விளக்குகின்றன வென்றும், தமிழ்ப் பண்டை இலக்கியங்களில் ஒன்றாகிய திருக்குறள் இக்காலத்தில் வழங்கி வரும் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதே அம்மொழியின் உயர்வை உணர்த்துமென்றும், இன்னும் ஏனைய உயர்தனிச் செம்மொழிகள் பல கிளைமொழிகளுக்குத் தாயகமாய் நிற்றல் போல, தமிழ்மொழியும் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, முதலிய கிளைமொழிகளை உடையதென்றும், ஏனைய செம்மொழிகளினும் தமிழ்மொழி தொன்மையுள்ளது என்பது, இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்
இயற்றப்பட்டுள்ள தொல்காப்பியமென்னும் இலக்கணத்தாலே நன்கு விளங்குமென்றும், எவ்வாறெனில் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் முறையாதலாலும், இலக்கியத்தினின்று எடுபடுவதே இலக்கணமாதலாலும், நம் தமிழ்மொழி சரித்திர காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்ட காலத்திலேயே பல இலக்கியங் களை உடையதாய்ச் சிறப்புற்று ஓங்கியிருத்தல் வேண்டுமென்றும், ஆகவே தமிழ் தொன்மையும் சீர்மையும் திருந்திய பண்பும் வாய்ந்த செம்மொழியாயிருத்தலின், சர்வகலா சங்கத்தார் தமிழையும் உயர்தனிச் செம்மொழிகளோடு ஒன்றாக வைத்து எண்ண வேண்டுவதவசியமென்றும் கூறி முடித்தனர். பின்னர் தமிழ்க் களஞ்சியம் பத்திராதிபரான ஈ.சுவர அய்யரவர்கள், தமிழ் தனிமொழி யென்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று கூறி வழிமொழிந்த பின்னர் பண்டிகை திருமதி அலர்மேல்மங்கைத் தாயாரவர்கள், தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்ளாத சர்வகலாசாலை சங்கத்தினர் சிலர் தமிழ்மொழியைக் குறை கூறுகின்றாரென்றும், தமிழ் சிறந்த மொழிகளுள் ஒன்றாக வைத்து எண்ணுதற்கு உரிய உயர்வுடைமையால் அதனைச் சர்வகலாசாலைச் சங்கத்தார் அங்கீகரித்தல் அவசியமென்றும், சொல்லி முடித்த பின்னர் முதல் தீர்மானம் அங்குக் கூடியிருந்த தமிழ் நன்மக்கள் அனைவராலும் ஒருமுகமாக அங்கீகரிக்கப்பட்டது. ” பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் அவர்கள் 12.3.1918ஆம் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், “தமிழைச் செம்மொழியாக (Classical Language) ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15 ஆம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ.,எம்.எல்., வேண்டினார்” என்று குறிப்பிட்டுள்ளார். தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். திரு.த.வே.இராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள்
இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் ஆவார்கள். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றிய போது:
“உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேசமுடிந்தது? ”
- என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமை பெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது.
தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார்மடத்தின் தலைவர் திரு.சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் அவர்கள் தலைமையில், தமிழவேள் த.வே. உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், திரு.டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, திரு.டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அவ்விழாவில், “தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழி யென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், தமிழ்ச்சங்க உறுப்பினர்களான
திரு.டி.ஏ.சபாபதி பிள்ளை அவர்களால் முன்மொழியப்பட்டு, திரு.எம்.அப்பாவு முதலியார் அவர்களால் வழிமொழியப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சென்னைப் பல்கலைக் கழகத் தலைவர், துணைத் தலைவர், பதிவாளர் ஆகியோருக்கும்; சென்னை ஆட்சியமைச்சர் அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப்பட்டது. செம்மொழி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் போன்று அமைந்த மகத்தான தீர்மானம் இதுவாகும். காரணம், இதுதான் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டு மென்று அமைப்புரீதியாக நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் ஆகும். தொடர்ந்து, தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா, 21.8.1920 அன்று திரு எஸ்.சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிலும், “எவ்வளவினும் இனிது வாய்ந்துள்ள தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக்கழகத்தாரை வற்புறுத்தியும், அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிழையென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரி களில் கலை பயில் கருவிமொழியாகவும் கொண்டு, தங்கள் முதல் கடமையைச் செலுத்தும்படி அவர்களை இப்பெருங்கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள்” எனும் தீர்மானம் இயற்றப்பட்டது. இத்தீர்மானத்தை திரு.வி.ஏ. சகராயப் பிள்ளை முன்மொழிய, திரு.ஐ.குமாரசாமிப்பிள்ளை வழிமொழிந்தார். 1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆட்சித் தலைவர் அவர்கள், தஞ்சைக்கு வருகை தந்தபோது, செந்தமிழ் மொழியினை உயர்தனிச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவாளர் இராவ்பகதூர் வீ.அ.வாண்டையார் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் சென்று தங்கள் கோரிக்கைகளை நேரில் எடுத்துரைத்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராவது ஆண்டு விழா 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய நாட்களில் திரு.க.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இவ்விழாவின் போது, “விசுவபாரதிக்குடையார், தமிழை உயர்தனிச் செம்மொழியாகச் சம்மதித்து, அதனை அவர்கள் பாடவரிசையில் சேர்த்துக் கொள்ளவேண்டும்; இந்தியாவின் தொன்மை வரலாறு எழுதுவோர்க்குத் தென்னிந்திய வரலாறு இல்லையாயின் முற்றுப் பெறாததாலும், வேண்டிய செய்திகள் சங்கத் தமிழ் நூல்களில் மட்டும் கிடைக்குமாதலாலும், உலகத்து நாகரிகமுற்ற நாடுகளில் தமிழ்நூல், தமிழறிவுப் பரப்பை மிகுவிக்க வேண்டும்” எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டுவிழாவில், “உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித்தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனும் தீர்மானம் இயற்றப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15, 16, 17ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தனது உரையில், “இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலைத்தக்கதாகும்” என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார். இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. அன்புள்ள, மு.க. 26-12-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 157–164. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.
தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்
- கடிதம் 3447 · 27.12.2009செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-3 பாவாணர் கண்ட பதினைந்து சான்றுகள்
- கடிதம் 3448 · 28.12.2009செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-4 தொன்மைக்குத் தொன்மையாய் வாழும் தொல்பழங்கால மொழி!
- கடிதம் 3449 · 29.12.2009செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-5 கலிபோர்னியா பேராசிரியர் வழங்கிய கருத்துக்கோவை!