முரசொலி கடிதங்கள் · 3444
மீண்டும் இதோ; என் அன்பழைப்பு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3444. மீண்டும் இதோ; என் அன்பழைப்பு!
உடன்பிறப்பே,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் 2010ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 23 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதையும், அந்த மாநாட்டினை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சான்றோர்கள், ஆன்றோர்கள், அறிவுலக மேதைகள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மீக வாதிகள், கலையுலகில் உள்ளோர் ஆகியோரைக் கொண்ட 21 குழுக்கள்; மாநாட்டுத் தலைமைக் குழு - மாநாட்டு ஆலோசனைக் குழு - மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு - மாநாட்டு ஆய்வரங்க அமைப்புக் குழு - மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழு - வரவேற்புக் குழு - மாநாட்டு அரங்க அமைப்புக் குழு - பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழு - ஊர்வலக் குழு - விருந்தோம்பல் குழு - தமிழ் இணைய மாநாட்டுக் குழு - மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு - கண்காட்சி அமைப்புக் குழு - கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு - தங்கும் இட ஏற்பாட்டுக் குழு - மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு - கோவை மாநகர மேம்பாட்டுக் குழு - மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு - போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு - பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு - ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு என்றெல்லாம் அமைக்கப்பட்டு, அந்தச் செய்திகள் ஏடுகளின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் எல்லாம் தத்தம் பணிகளைத் தொடங்கவிருக்கின்றன.
குழுக்களில் உறுப்பினர்களாக என் நினைவிற்கு வந்தவரை பலரை இடம் பெறச் செய்துள்ளேன். அவர்களையன்னியில்; அவர்களைப் போன்ற திறமைமிக்கவர்கள் மேலும் பலர் இருந்த போதிலும், அவ்வளவு பேரையும் இடம் பெறச் செய்ய இயலாமல் ஓரிருவர் பெயர் விட்டுப் போயிருக்கக் கூடும். அதனை அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். குழுக்களிலே இடம் பெற்றுள்ள
சிலருக்கு இந்தக் குழுவினை விட வேறு குழுக்களிலே இடம் பெற்றிருந்தால் மேலும் சிறப்பாக பணி செய்திருக்க முடியுமே என்று கூட எண்ணத் தோன்றலாம். நடைபெறப்போவது நமது செம்மொழிக்கான மாநாடு. இதிலே அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை மனதிலே கொண்டு அனைவரையும் தமிழ்ப் பணி புரிந்திட உரிமையோடு அழைத்திடுகின்றேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பி கவிஞர் பா. விஜய் என்னைச் சந்தித்தார். அவரது கையிலே ஏராளமான ஓவியங்கள், சில புத்தகங்கள். அவற்றையெல்லாம் என்னிடம் அவசர அவசரமாக நேரமின்மை காரணமாகக் காட்டினார். அந்த ஓவியங்கள் எல்லாம் மாநாட்டின் முகப்பு இப்படி இருக்கலாமா என்பதற்காக அவரே ஓவியரை வைத்து வரைந்து கொண்டு வந்திருந்ததையும், மாநாட்டினையொட்டிய சிறப்பு மலரின் அட்டைப் படம் இப்படியிருக்கலாமா என்பதற்கு பல படங்களையும் காட்டினார். அதையெல்லாம் பார்த்தவுடன் நான் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். மாநாட்டுப்பணிகளிலே அவரை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று உடனடியாக முடிவு செய்தேன். வேறு சில வெளிநாட்டினர் மாநாட்டிலே கலந்து கொள்வதற்கான ஆயத்தங்களிலே ஈடுபட்டு விட்டதாகவும், எப்போது ஜூன் திங்கள் வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாகவும் தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
இந்தப் பட்டியலிலே எனக்கு வேறு ஒரு அனுபவம். “தினமணி” நாளிதழ் பல நேரங்களில் நமது கழகத்தையும், கழக அரசையும் தாக்கி எழுதும் என்றாலும், அது ஒரு வரம்பிற்குள் இருக்கும். சில நேரங்களில் கழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டி தலையங்கங்களைக் கூட எழுதத் தயங்கியதில்லை. அந்தத் தலையங்கங்களை “முரசொலி”யிலும் எடுத்து வெளியிட்டிருக் கிறோம். பத்திரிகை சுதந்திரத்திலே அவர்களுக்கு முழு உரிமை உண்டு. என்னைத் தாக்கி வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக் கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்துகள் அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை
நான் அறிந்தவன். வாரந்தோறும் “கலாரசிகன்” என்ற புனைப் பெயரில் தினமணியில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த வேண்டுமென்று என்போல் எண்ணம் கொண்டவர்களில் வைத்தியநாதனும் ஒருவர் என்பதை நான் நன்றாகவே அறிவேன். அந்த வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு ஒரு இடம் அளிக்கப்பட வேண்டுமென்று நான் கருதினேன். அவர் மட்டுமல்ல - இந்து இதழின் திரு. என். ராம் அவர்களும், தினத்தந்தி இதழின் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களும், “சன்” தொலைக் காட்சி குழுமத்தின் தம்பி கலாநிதி மாறன் அவர்களும், தினமலரின் திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்களும், (அறிவிக்கவுள்ள ஆய்வரங்க விளக்கக் குழுவிலே இடம் பெற உள்ளார்) மாலை முரசு இதழின் திரு. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களும், தேசிய முரசு இதழின் திரு. கோபண்ணா அவர்களும், நக்கீரன் இதழின் கோபால் அவர்களும், கலைஞர் தொலைக்காட்சியின் ரமேஷ் பிரபா அவர்களும் இந்தக் குழுக்களிலே இடம் பெற வேண்டுமென்று விரும்பி அவ்வாறே இடம்பெறச் செய்திருக்கிறேன். இதற்கிடையே “தினமணி” ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன் அவர்கள் டிசம்பர் 16 ஆம் தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதனை வெளியிட்டால் அவர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றெண்ணி, இங்கே அதனை வெளியிடுகிறேன். அந்தக் கடிதம் வருமாறு :- என் பெருமதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு, அன்பு வணக்கங்கள். தங்களது உள்ளத்தின் அடித்தளத்தில் என் மீது தங்களுக்கு இருக்கும் அன்பும் பாசமும் நான் நன்கு அறிவேன். உரிமை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு என்மீது தங்களுக்கு அக்கறையும் நம்பிக்கையும் உண்டு என்பது நான் அறியாதது அல்ல. அரை நிஜார் பருவத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திலகா திடலில் பள்ளி மாணவனாகத் தங்களது உரையைக் கேட்க முன் வரிசையில் அமர்ந்திருந்த காலம் தொடங்கி இன்று வரை தங்களது எழுத்துக்கும் தமிழ்ப் பற்றுக்கும் மகுடியில் கட்டுண்ட பாம்பாக மயங்கி நிற்பவன் நான்.
உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வமும் வேகமும் எனக்குக் கொஞ்சநஞ்சம் அல்ல. தங்களது ஆட்சிக் காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே இருந்தது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த மாநாடு நடத்தப்படாமல் போனால், தமிழ் மீது தாளாத பற்றும் பாசமும் கொண்டிருந்தும் தங்களது புகழுக்கு நிலவில் களங்கம் போல ஒரு தீராப் பழி ஏற்பட்டுவிடும் என்று நான் பலமுறை வேதனை உற்றதுண்டு.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது எனது கனவும் கூட. நீங்கள் முதல்வராக இருக்கும்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்புடன் நடைபெறுவது என்பது தமிழுக்கு பெருமை, தமிழனுக்குப் பெருமை, தமிழகத்துக்குப் பெருமை.
என்னைப் பற்றி உங்களைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவரும், புரிந்து வைத்திருப்பவரும் வேறு யாரும் இருக்க முடியாது. எனக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவில் என்னை உறுப்பினராகச் சேர்த்திருப்பதில் மகிழ்ந்தேன் என்பதைவிட நெகிழ்ந்தேன் என்பதே உண்மை.
எந்த ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் என்னை முழு மனதுடன் கடிவாளம் போடப்பட்ட குதிரையைப் போல ஈடுபடுத்திக் கொள்பவன் நான். இப்போதைக்கு என்னுடைய எண்ணமும், செயலும், எழுத்தும் முழுமையாக தினமணியில் மையம் கொண்டிருக்கிறது. வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவோ செயல்படவோ என்னால் இயலாது. ஆகையால் எனக்கு வழங்கப் பட்டிருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் நான் இல்லை என்பதைத் தங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்களது நம்பிக்கையை நான் தகர்க்கிறேன் என்றோ, அன்புக் கட்டளையை மீறுகிறேன் என்றோ தயவு செய்து கருதலாகாது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு தினமணியின் முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் நிச்சயமாக உண்டு. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தரும், எனது அருமை நண்பருமான முனைவர் ம.ராஜேந்திரனும் நானும் அடிக்கடி இது பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். மாநாடு வெற்றியடைய எனது
ஆக்கப் பூர்வமான பங்களிப்பு, குழுவில் இடம் பெறாமல் தொடரும் என்பதில் தங்களுக்கு எள்ளளவும் ஐயம் வேண்டாம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது தங்களது கனவு மட்டுமல்ல, எங்களது கனவும் கூட. அந்தத் தமிழ்ப் பணியில் மேடையில் வீற்றிருக்கும் உறுப்பினராக இல்லாமல், பங்களிப்பு நல்கும் தமிழ் ஆர்வலனாக “உங்கள் வைத்தியநாதன் இருப்பான்” என்பதை நான் தங்களுக்கு வலியுறுத்தத் தேவையில்லை. நன்றி, வணக்கம். என்றென்றும் அன்புடன், கே. வைத்தியநாதன். உடன்பிறப்பே, இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் நாம் அறிவித்த குழுவிலே இடம் பெற மறுத்துவிட்டாரே என்று நான் எண்ணவில்லை. அவர் கடிதம் கிடைத்த சில நிமிடங்களுக்கெல்லாமே - அவருக்கு நான் ஒரு பதில் எழுதினேன். அந்தப் பதில் கடிதம் இதோ :- அன்புடையீர், வணக்கம். உணர்ச்சிமிக்க தங்கள் கடிதத்தைக் கண்டேன். வெளி உலக அரசியலுக்கு ஒரு தோற்றம் என்றாலும், உள்ளொளியில் கலந்திருக்கின்ற உணர்வையும், உறவின் திண்மையையும் கண்டு பெரிதும் வியக்கிறேன். தமிழின்பால் தடம் மாறாப் பற்றுகொண்ட தங்களைப் போன்றோர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் - தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் - தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும்! அந்த எண்ணத்தோடு தான் குழுக்களின் அறிவிப்பில், தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன். அன்புள்ள, மு. கருணாநிதி. இந்த என் கடிதத்தை நான் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே எனக்குத் திரு. வைத்தியநாதனிடமிருந்து நல்லதோர் பதில் கிடைத்தது. அந்தப் பதிலும் வருமாறு :- பெருமதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,
அன்பு வணக்கங்கள். என்னுடைய கடிதத்தைத் தொடர்ந்து தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும் கண்டு பெரிதும் உவக்கின்றேன். தங்களுடைய வேண்டுகோளை இனியும் மறுப்பது என்பதேது? எனினும் புறச் செயல்பாடுகளை விடவும் ஆய்வரங்குகள், ஆய்வுக் கோவைகள், பன்னாட்டுத் தமிழறிஞர்கள் உறவு போன்ற உள்ளார்ந்த களத்தில் என்னால் முழு மனதுடனும், ஆர்வத்துடனும் இயங்க முடியும் என நம்புகிறேன், விரும்புகிறேன். எனது கருத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஆவன செய்வீர்கள் என்கிற வேண்டுகோளுடன், நன்றியும், வணக்கமும். என்றென்றும் அன்புடன், கே. வைத்தியநாதன். உடன்பிறப்பே, என் வேண்டுகோளையேற்று முதலில் வர மறுத்துள்ளோரும் இவர்போல் வளமிகு தமிழுக்கு வலிமை சேர்க்க முனைவோர் உளமகிழ்ந்து ஒன்றாகக் கூடி கோவையில் செம்மொழிக் கொடியேற்றி குதாகலிக்க இருப்பது கண்டு தேன் கலந்த தெவிட்டாத அமுதுண்ணும் இன்பத்தை உலகத் தமிழர்களாம் நாமெல்லாம் பெறும் அரிய வாய்ப்பில் ஓரிருவர் குறையினும், அஃதோர் குறையென நான் எண்ணுவதாலதான், அதை எதிரொலிக்கும் இக்கடிதப் போக்குவரத்தை வெளியிட்டுள்ளேன் எனக் குறிப்பிடுவதோடு இவர் போல் அந்தக் குறை போக்கிடும் நிறை மனத்தினர் இன்னும் இருப்போர் இருப்பின், அவர்க்கும் சேர்த்தே மீண்டும் என் அன்பழைப்பு. நடைபெறவிருப்பது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இதில் தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எனவே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் தங்கள் பெயர்கள் இல்லை என்று எண்ணாமல் மாநாட்டின் வெற்றிக்காக அவரவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அன்புள்ள, மு.க. 21-12-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 143–148. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.