முரசொலி கடிதங்கள் · 3440
“காஞ்சி” வழியில் “கோவை” மாநாடு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3440. “காஞ்சி” வழியில் “கோவை” மாநாடு! உடன்பிறப்பே,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை நடைபெறவிருக்கின்ற நேரத்தில்; “காஞ்சித் தலைவன்” பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து 1968ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய நிகழ்ச்சிகளை ஒரு முறை நினைவு கூர்ந்திட விரும்புகின்றேன்.
மாநாட்டின் தொடக்கமாக, 1-1-1968 அன்று மாலையில் - யாருடைய உழைப்பு நமது வாழ்வின் வளைவுகளை எல்லாம் நிமிர்த்த நித்தம் நித்தம் பயன்பட்டதோ அந்த உழைப்பாளரின் சிலை திறப்பு விழா - யார் இந்தத் தமிழ் மண்ணிலே சொர்க்கத்தை நடமாடவிட தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்தாரோ அந்தத் தலைவனின் சிலை திறப்பு விழா - யாருடைய பேச்சு, எழுத்து நம் உதிரத்திலே சேர்ந்து - நமக்குத் தமிழுணர்ச்சியை ஏற்படுத்தியதோ, அந்தத் தகைமைச் சான்றோனுக்கு சிலை எடுப்பு விழா - யாருடைய பெயரை அந்தச் சாலைக்கே பின்னர் நான் சூட்டி மகிழ்ந்தேனோ, அந்த அண்ணா சாலையில் (அப்போது அந்தச் சாலைக்குப் பெயர் மவுண்ட்ரோடு) அந்த அண்ணாவின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அந்தச் சிலையை அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தனது சொந்தச் செலவில் வாங்கி வழங்கினார். டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள்தான் அந்தச் சிலையினை திறந்து வைத்தார். கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றிட, பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நான் அரசின் சார்பில் அந்தச் சிலையை ஏற்றுக் கொண்டு நன்றியுரை ஆற்றினேன். விழா மேடையில், அறிஞர் அண்ணாவின் சிலையை உருவாக்கிய சிற்பி எஸ்.பி. பிள்ளைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செய்தேன்.
அதே சிலை திறப்பு நாளன்று சிலம்புச் செல்வர் அவர்கள் எழுதிய “அவ்வையார்” நூலினை நான் வெளியிட்டுப் பேசும்போது பயிற்று மொழி பற்றிப் பேசியது தற்போதும் நினைவிலே கொள்ளத்தக்கது. பொதுப்பணித் துறை அமைச்சராக அந்த விழாவிலே கலந்து கொண்ட நான் பயிற்று மொழி பற்றி பேசிய விவரங்கள் வருமாறு:-
“தமிழ்நாட்டுக்கு தமிழா - ஆங்கிலமா என்பது முடிவெடுக்கப்பட்டுவிட்ட பிரச்சினையாகும். தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக - பயிற்று மொழியாகத் தமிழ்தான் இருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் குறிக்கோள். இதில் சிறு துளியும் மாற்றமில்லை. தொடர்பு மொழி என்கிற போதுதான் இந்தியா, ஆங்கிலமா என்ற பிரச்சினை எழுகிறது. தமிழக அரசு ஆங்கில மோகம் கொண்ட அரசல்ல என்பதையும், தமிழே அதன் குறிக்கோள் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். வளையாபதியும், குண்டலகேசியும், சிலப்பும் குறளும் செந்தமிழ் பாடி வாழ்க வாழ்கவென வாழ்த்துரைக்க அதன் கீழே சீரோடும் சிறப்போடும் நடைபெற வேண்டும் மென்றுதான் அண்ணாவின் அரசு துடித்து நிற்கிறது. தொடர்பு மொழியில்தான் தகராறு. காஷ்மீர் வரை பஞ்சாப் வரை டெல்லி வரை எது தொடர்பு மொழி என்றால் இந்தி எனப்படுகிறது. ஆனால் நாமோ “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அடிப்படைக் கருத்தின் வழி நடக்கின்ற காரணத்தால் அகில உலகத் தொடர்புக்கு ஆங்கிலமே என்கிறோம். ஆளுகின்ற மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, உலகத் தொடர்புக்காகவே அதை வரவேற்கிறோம். நாம் பிடித்திருப்பது தமிழ்ச் செங்கோலைத்தான் என்பதில் யாருக்கும் துளி ஐயமும் தேவையில்லை.”
1968ஆம் ஆண்டில் நான் பேசிய இந்தக் கருத்துக்குத்தான் இன்றளவும் நமது மொழிக் கொள்கையாகத் தொடர்ந்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை.
2-1-1968 அன்று உலகத் தமிழ் மாநாட்டின் நிகழ்ச்சியாக தமிழ்ச் சான்றோர்களின் சிலை திறப்பு விழா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. அய்யன் திருவள்ளுவரின் சிலையை அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் - அவ்வையார்
சிலையினை அமைச்சர் சத்தியவாணிமுத்து தலைமையில் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களும் - கம்பர் சிலையினை அமைச்சர் ஏ. கோவிந்தசாமி தலைமையிலே முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களும் - ஜி.யு. போப் அவர்களின் சிலையினை சட்டப் பேரவைத் தலைவர் ஆதித்தனார் தலைமையிலே பிஷப் லெஸ்லி நியூபிகின் அவர்களும் - கால்டுவெல் சிலையினை மேலவைத் தலைவராக இருந்த மாணிக்கவேலர் தலைமையில் பன்மொழிப் புலவர் அப்பாத்துரை அவர்களும் - பாரதியார் சிலையினை அமைச்சர் செ. மாதவன் தலைமையில் நாமக்கல் கவிஞர் இராம லிங்கனார் அவர்களும் - பாரதிதாசன் சிலையினை அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாக்டர் மு. வரதராசனார் அவர்களும் - கப்பலோட்டிய தமிழன் சிலையினை அமைச்சர் மதியழகன் தலைமையில் தமிழவேள் பி.டி. இராசன் அவர்களும் - வீரமா முனிவர் சிலையினை அமைச்சர் சாதிக்பாட்சா தலைமையில் ஆர்ச்பிஷப் அருளப்பா அவர்களும் - கற்புக்கரசி கண்ணகி சிலையை என் தலைமையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் திறந்து வைத்தார்கள். சிலை திறப்பு விழா சீர்காழி கோவிந்தராசனின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு தொடங்கியது. தமிழ் வளர்ச்சிக் கழக நெறியாளராக இருந்த பெருமாள் முதலியார் வரவேற்புரை ஆற்றிட தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சி.ஏ. ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழா சென்னை கடற்கரையில் பல இலட்சம் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகிர் உசேன் மாநாட்டினை துவக்கி வைத்தார். தொடக்க விழாவிற்கு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கினார். கல்வி அமைச்சராக இருந்த நாவலரும், தகவல் துறை அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்துவும் வரவேற்புரையாற்றினர். திருக்குறள் ஆராய்ச்சிக்கென தமிழகத்தின் மூன்று பல்கலைக் கழகங்களுக்குமாக ரூபாய் ஒன்பது இலட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் அந்த மேடையிலே இணைந்து நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியாரிடம், மூன்று இலட்சம் ரூபாயை நான் ஒப்படைத்தேன். அதைப் போலவே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குரிய மூன்று இலட்சம் ரூபாயை உணவு அமைச்சராக இருந்த கே.ஏ. மதியழகன், அந்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த சந்திரா ரெட்டியிடம் வழங்கினார். மதுரைப் பல்கலைக் கழகத்திற்குரிய நிதியை துணை வேந்தர் தெ.போ. மீனாட்சி சுந்தரனாரிடம், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மா. முத்துசாமி வழங்கினார். பல்கலைக் கழகங்களின் சார்பில் எம்.ஏ.எம். முத்தையா செட்டியார் நன்றி கூறினார்.
மலர்க் குழுவின் சார்பில் அன்பு நண்பர் எம்.ஜி.ஆர். உரையாற்றினார். பன்னாட்டறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் பேராசிரியர் பிலியோசா, ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தின் தலைமை நெறியாளர் மா. ஆதிசேஷையா, இலங்கை அரசின் உள்ளூராட்சிதுறை அமைச்சர் திருச்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழக ஆளுநராக இருந்த மேதகு சர்தார் உஜ்ஜல் சிங் விழா மலரினை வெளியிட்டார். அந்த விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் வருகை தந்திருந்தார். அவரைக் கண்டவுடன், அண்ணா அவர்களே; காமராஜர் அவர்களை அந்த விழாவிலே உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார். காமராஜர் அந்த மேடையில் பேசும்போது,
“எதிர்பாராத நிலையில் முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டதால் இப்போது நான் பிரதிநிதிகளுக்கு வரவேற்புக் கூறி பேசுகிறேன். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டுக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரையும் மனமார வரவேற்கிறேன். ஆராய்ச்சிக் கருத்தரங்கின் பயனாகத் தமிழ் வளம் பெற்று வாழும் என நம்புகிறேன். உலகத் தமிழ் கருத்தரங்க முதல் மாநாடே இங்குதான் நடந்திருக்கவேண்டும். மலேசியத் தமிழர்கள் முந்திக் கொண்டார்கள். பக்தவத்சலம் முதல் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது இரண்டாவது மாநாடு தமிழகத்தில் நடத்த அழைத்தார். அதன்படி மாநாடு நடக்கிறது. இது வெற்றிபெற வேண்டும். தமிழர் எங்கேயிருந்த போதிலும்
எல்லா காலத்துக்கும் பெருமையுடன் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, குடியரசு துணைத் தலைவர் வி.வி. கிரி, மூதறிஞர் ராஜாஜி, மலேசிய அமைச்சர் சம்பந்தம், சிங்கப்பூர் பிரதமர் லி குவான்யூ, அமைச்சர் ராஜரத்தினம் ஆகியோரும், மற்றும் பலரும் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.
உலகத் தமிழ் மாநாட்டிற்கே அணி செய்யும் சிறப்பு அங்கமாக பிரமாண்டமான ஊர்வலம் ஒன்று பூம்புகார் நகர் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தீவுத் திடலில் இருந்து 3-1-1968 அன்று புறப்பட்டு சென்றதை, இலட்சக்கணக்கான மக்கள் அண்ணா சாலையின் இரு மருங்கிலும் நின்று ரசித்தனர். சென்னை மாநகரமே அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. பிற்பகலில் புறப்பட்ட அந்த பவனியைக் காண அன்று காலை எட்டு மணி முதலே மக்கள் சாலையோரங்களில் அணி வகுத்து நின்றனர். ஊர்வலம் அண்ணா சாலை, ஜெமினி முனை, டாக்டர் ராதாகிருஷ் ணன் சாலை, கடற்கரைச் சாலை வழியாக மீண்டும் தீவுத் திடலை அடைந்தது. அண்ணா சாலையில் கலைக் கல்லூரிக்கு அடுத்து அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தவாறு, இந்தியக் குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களும், தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களும், முதலமைச்சர் அண்ணா அவர்களும் அமைச்சர்களும் அந்த ஊர்வலத்தைக் கண்டுகளித் தனர்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி கலைக் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு அதனை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள். கண்காட்சி மலரை முதலமைச்சர் அண்ணா அவர்கள் வெளியிட்டார்கள்.
தீவுத் திடலில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரில் 4-1- 1968 முதல் 10-1-1968 வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றன. இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு அரங்கங்கள், சிறப்பு நாடகங்கள், கிராமிய ஆடல் பாடல்கள் எல்லாம் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பூம்புகார் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்தக் கருத்தரங்கு சென்னை பல்கலைக்
கழக பட்டமளிப்பு விழா மண்டபத்திலே நடைபெற்றது. அந்தக் கருத்தரங்குக்கு உலகம் முழுவதிலுமிருந்து 40 நாடுகளைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர்கள் வருகை தந்திருந்தனர்.
பூம்புகார் நகரில் 7 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிலே நிற்கின்ற நிகழ்ச்சிகள் என்ற போதிலும், அண்ணா அவர்களும் நானும் சம்பந்தப்பட்ட ஒன்றை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
தமிழ்ப் புலவர் குழு வரவேற்பு விழா ஒன்று அங்கே நடைபெற்றது. அதில் அண்ணா, ஒரு புலவரா என்ற வாதம் ஏற்பட்டது. அந்த விழாவிற்கு நான் தான் தலைமை தாங்கினேன். தொடக்கத்தில் அண்ணா ஒரு புலவர் என்று குறிப்பிட்டேன். அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் - தான் புலவர் அல்ல என்று அவை அடக்கத்தோடு குறிப்பிட்டார்கள். இருந்தாலும் நான் தொடர்ந்து, “புலவருக்கு உரிய அடையாளம் “அவை அடக்கம்.” நான் அண்ணா அவர்களைப் புலவர் என்றேன். ஆனால் அண்ணா அவர்கள் அவை அடக்கத்தோடு தான் புலவர் அல்ல என்றார். அந்த அவை அடக்கமே அவரைப் புலவர் தான் என்று காட்டி விட்டது. முதல் முறையாக அண்ணாவை நான் வெற்றி கொண்டேன்” என்று நான் நகைச்சுவையாக குறிப்பிட்டபோது, அந்த அரங்கமே சிரித்து மகிழ்ந்ததும், அண்ணா அவர்கள் சிறு குழந்தையைப் போல எழுந்து நின்று சிரித்ததும் என்றைக்கும் நீங்காமல் என் நினைவில் இருக்கும் காட்சியல்லவா? அந்த மேடையில் அடுத்துப் பேசிய வ.சுப. மாணிக்கம் அவர்கள், விளிக்கும் போதே முதலமைச்சர், புலவர் அண்ணா அவர்களே என்றுதான் அழைத்தார். டாக்டர் மு.வ. அவர்கள் பேசும்போது, முதலமைச்சர் அண்ணா பேசும்போது மணிமேகலைப் பாடல் ஒன்றை சுட்டிக் காட்டியதன் மூலம், அவர் புலவர் மட்டுமல்ல, பெரும்புலவர் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார் என்றார்.
அந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை யொட்டி தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்; அந்த மாநாட்டையும், கவின் மிகு ஊர்வலத்தையும் வண்ணப் படமாகத் தயாரித்தனர். அந்தத் திரைப்படத்தில் வந்த ஒவ்வொரு காட்சியையும் விளக்கி நான் கவிதை வடிவில் வர்ணனைத் தீட்டியிருந்தேன். அண்ணா அவர்கள் வெளி நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்ற போது, என்னுடைய வர்ணனையோடு எடுக்கப்பட்ட அந்த உலகத் தமிழ்
மாநாட்டு ஊர்வலக் காட்சி திரைப்படத்தினையெடுத்துச் சென்று அந்த நாடுகளிலே உள்ள தமிழர்களுக்கெல்லாம் அதனைப் போட்டுக் காட்டினார். அந்த மாநாட்டின் மற்ற மற்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் மேலும் விரிவாக எழுதுவதென்றால் நீண்ட நேரம் ஆகும். அந்த மாநாட்டிற்கு வந்த பன்னாட்டுப் பேரறிஞர்கள் எல்லாம் தமிழகச் சுற்றுலா மேற்கொள்ளவும் அப்போது ஏற்பாடு செய்யப்பட்டது. 10-1-1968 அன்று இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறைவுச் சொற்பொழிவினை ஆற்றினார்கள். நான் நன்றியுரையாற்றினேன். கோவையில் ஜூன் திங்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தவிருக்கின்ற நேரத்தில் - பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிகளும், அதிலே நான் பங்கேற்ற நிகழ்வுகளும் என் உள்ளத்தில் எழுந்ததை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கோர் மகிழ்ச்சி. இந்த மாநாட்டில் பங்கு பெறுவோருக்கும், பல்வேறு குழுக்களில் இடம் பெறுவோருக்கும் தாங்கள் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்ளவும் இது ஒரு வசதியான வாய்ப்பாக விளங்குமல்லவா? அன்புள்ள, மு.க. 12-12-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 112–118. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.