பகுதி 101 / 102
ஒருதலைக் காதல் — 10
அச்சுப் பக்கம் 471–478 · ஸ்கேன் 483–490 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 485
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஒருதலைக் காதல்
10
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயினும் சாலப்
பரிவு காட்டி வளர்த்த தாய் காவற்பெண்டு;
பகைவரது பாசறையின் கூண்டுக்குள்ளே
பறவைபோல் சிறகடித்துப் பதைப்பதை அறியாப்
பாசமகன் நற்கிள்ளி, ஐயையினைப் பார்ப்பதற்கு,
பொற்கூரை வேய்ந்துள்ள மாளிகைக்குள் நுழைந்தவுடன்
நற்கண்ணை அங்கிருக்கக் கண்டு அதிர்ந்து போய்
நின்றுவிட்டான்!
“அண்ணா வருக!” என அழைத்திட்ட ஐயை நல்லாள்; “உன்னைக்
கண்ணாக உயிராகக் கருதுகின்ற கவியரசியினைக் காண்க!”
என்றாள்!
“மண்ணாளும் மகராசன் கட்டியென்பான் - மணப்
பெண்ணாக உனைக்கொள்ள முற்றுகையிட்டுள்ளான்! மனம்
புண்ணாக உறையூர் மக்கள் எல்லாம் புறப்பட்டுப்
போருக்குக் கிளம்புகின்றார் - நற்கண்ணையினை;
நாளைக் காலைக்குள் போர்ப்
பண்ணாகப் படைவீரர்க்குப் பாட்டொன்று எழுதச்சொல்!”
என்றுரைத்த கிள்ளியின் கால்வீழ்ந்து;
“மண்ணாகப் போகட்டும் என் வாழ்வென்று முடிவெடுத்து
விட்டீரா? இதற்காகவோ
பெண்ணாக நான் பிறந்தேன்?” எனக் கேட்டுக் கண்ணீர்
உகுத்தாள் நற்கண்ணை!
“தங்கையினைக் காண வந்தேன் - இங்கும்
மங்கையுந்தன் மையல் கதை கேட்கும் வேதனையா
எனக்கு வேண்டும்?
ஐயை! வருகின்றேன் நான்; நாளை
அதிகாலைப் போர்முனைக்குப் போகின்றேன்!
நற்கண்ணை நல்லதமிழ்க் கவியரசி - அவளுக்கு
பொற்கிழியொன்றைப் பரிசாக வழங்கி நீயே வழியனுப்பி
வைத்திடுக!”
எனக்கூறி நகர்ந்தவனை எதிர்மறித்து;
“தன வணிகன் பெற்றெடுத்த மகள்தான் நான்!
தந்திடுவீர் பரிசென்று தமிழ் எழுதிப்பிழைக்க வரவில்லை!
முந்தி நான் அறிவித்த சூளுரையை
முடிமன்னன் மகனே! உமக்கு மீண்டும் நான்
நினைவூட்டுகின்றேன்!
வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன் - அன்றி
வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்
இஃதுறுதி என அறிக!” என்றாள்!
“இரண்டுமே நடக்காதென்று அறுதியிட்டு
இன்னும் ஒருமுறை கூறுகின்றேன்!” என
இன்னாச்சொல் இறைத்துவிட்டுச் சென்றுவிட்டான் கிள்ளி!
புயலில் ஆடாத கொடி பார்த்ததுண்டோ;
பொய்யில்லை இதோ இரு கொடிகள்,
புயற்காற்றில் அசைவற்றுப் போயின காண்!
1. தித்தனிட்ட கட்டளைப்படி நாளவையின் முரச ஒலி;
திக்கெட்டும் பரபரப்பாய்ப் பரவிடவே,
திகைத்துப்போய் நடுங்கினார்கள் பாணன், கட்டி!
கிள்ளியில்லா நேரத்தில் உறையூரை வென்று
துள்ளி விளையாடவந்த பகைவர்கள்;
முள்ளில் இட்ட ஆடையினை எடுத்தாற் போதுமென்று
“கள்ளியாம் ஐயை எனும் கருங்குரங்குப் பெண்
யாருக்கு வேண்டு” மென்று கூறிவிட்டுப்
போருக்கு வராமலே கடையைக் கட்டி
புளிக்குமிந்தப் பழமென்று கூறி,
இளிக்கும் நரியைப் போல் ஓடிவிட்டார்!
களம் புகுந்தால் புறமுதுகு காட்டவேண்டும் - பின்
உளம் நெகிழ்ந்து கூனிக்குறுக வேண்டும்!
காவற்பெண்டு மட்டும் நமது காவலிலே இருக்கட்டும்;
காலாள், புரவி, களிறு, தேர்ப்படை நான்கும் திரும்பட்டுமென்ற
கட்டி, பாணனது ஆணைகேட்டுச்
சட்டி சுட்டதடா - கைவிட்டதடா என்றெண்ணி
நண்டுக்குஞ்சுகள் வளைநோக்கி விரைவது போல்
நாடு திரும்பியதாம் நலமாக நாற்படையும்!
[Full-page illustration; no printed body text.]
இந்த
நற்செய்தி உறையூர் மாளிகைக்கு எட்டியதும்,
நற்கண்ணையினைத் தழுவிக்கொண்டு ஐயை நல்லாள்;
“படையெடுத்து வந்த நச்சுப் பாம்பிரண்டும்
பாய்ந்து வரும் கீரியாம் நமது கிள்ளிக்குமுன்
நிற்க முடியாமல் நெளிந்தோடி விட்ட
நிகழ்ச்சியினைப் பாட்டொன்றாய்த் தீட்டுக!” என்றாள்.
“செத்திருப்பேன் இந்நேரம் உன் அண்ணன் கையால்!
செவிலித்தாய் காவற்பெண்டு வரட்டுமென்றிருக்கின்றேன்!
‘நானே முன்னின்று நடத்திவைக்கின்றேன் திருமணத்தை’
என்றார்; அதை
நம்பிக்கொண்டு நானுமின்னும் இருக்கின்றேன் உயிரோடு!
எண்ணியவாறு இனிதாய் என்காதல் நிறைவேறி உன்
அண்ணியாகும் பேறு நான் பெற்றுவிட்டால்
வெண்ணிலவு, தென்றல், தீம்பாகு, தேன்மழையன்ன
எண்ணற்ற கவிதைகளை எழுதிக் குவித்திடுவேன்” என்றாள்!
அப்போது
தோழியொருத்தி பெருமூச்சு வாங்க ஓடிவந்து பெருங்
கோழிநாய்கன் மகள் உயிர் மூச்சு பறிக்கின்ற சேதி
சொன்னாள்!
“கட்டி, பாணன் எனும் கயவர் இருவரும் - நமது
காவற்பெண்டைச் சிறைக்கூண்டிலிட்டு இழுத்துச் சென்றுளதால்
செவிலித்தாயை மீட்டுவர - நாளைக்குச்
செருமுனை செல்கின்றார் நற்கிள்ளி!”
இன்பச் செய்தியினைத் தொடர்ந்து - இந்தத்
துன்பச் செய்தி வந்ததாலே;
இரவுணவை மறுத்துவிட்டு, உறங்குதற்கு
இருவருமே தனித்தனி அறைக்குச் சென்றார்!
காலையிலே பாணன், கட்டி இருவர் நகர் முற்றுகையிட்டு
காவற்பெண்டுத்தாயை மீட்பேன் எனச் சூளுரைத்து;
நள்ளிரவில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த
நற்கிள்ளிச் சோழன் காதில் கதவுதட்டும் ஒலிகேட்க; “இந்த
நற்கண்ணையின் தொல்லை தாங்க முடியவில்லை” என
முணுமுணுத்தவாறு அசைந்தெழுந்து சென்று அறையின்
முன்வாசல் கதவுதனைத் திறந்து பார்த்தான்!
“அம்மா வந்து விட்டீர்களா?” என ஆச்சரியத்தால்
அலறிவிட்டான்!
ஆமாம்! காவற்பெண்டு எதிர்வந்து நின்றாள்!
“மகனே நற்கிள்ளி! மன்னன் கட்டியையும் அவன் தோழன்
பாணனையும்
மாமூலனார், கல்லாடனார் எனும் இருபுலவரும் சந்தித்து,
பகைவர்களின் உயிர்பறிக்கும் போர்முனையில்கூட
பண்பாடு காக்கின்ற நெறிமுறைகள் உண்டு!
உறையூரின் இளவரசியை சிறைபிடிக்கச் சென்றீர்;
ஓடிவந்தீர் நற்கிள்ளி வந்துவிட்ட செய்தியினைக் கேட்டு!
எதிரியின் வலிவு பெருகியதுணர்ந்து நீவிர் எடுத்த முடிவு நன்று!
எனினும் எங்களில் ஒரு தமிழ்க்கவியைக் கைது
செய்தமைக்கு என்ன நியாயம் உண்டு?
கணநேரமும் தாமதிக்காமல் காவற்பெண்டை விடுவித்திடுக!
அப்படியோர் கட்டளையினை இப்போதே நீவிர் பிறப்பிக்காவிடில்
இன்றோடு கல்லாடனார், மாமூலனார் உறவு அற்றுப் போயிற்றென
முற்றுப்புள்ளி வைத்திடுக;
இரு புலவர்களும் இவ்வாறு சினந்து கொண்டவுடன்
ஒரு நொடியும் தயங்காமல் எனை விடுவித்தார்!
திருமகனே! உனைக்காண ஓடோடி வந்தேன் - என்
மருமகளாய் நற்கண்ணை இங்கு வந்தாளே; எங்கே?” என்றாள்!
“தாயே! அடியேனை மன்னித்திடுக; அவளை நான் மணந்து
கொண்டால்
தமிழுக்கு கிடைக்கவேண்டிய இலக்கிய அணிகலன்கள் பல
கிடைக்காமலே போகும்!
தமிழ் இனமானமும் தடந்தோள் வீரமும் மேலும் உயர்ந்து
அமிழ்தாய்க் கவிதைகள் அவள் இயற்றிட வேண்டும்;
அதை விடுத்து,
அந்தப்புரச் சிறையினில் அந்தப் பாடும் பறவையை
அடைத்துப் போட்டால் அணுப் பயன்தான் உண்டோ,
தமிழுக்கு?” என்றான்!
“இலக்கியங்கள் தமிழில் வார்த்தெடுக்க;
இல்வாழ்க்கை தடையாக இருக்குமென்று யார் சொன்னார்?
மாந்தோப்பில் குலுங்குகின்ற பழங்களைப்போல்
மங்காப்புகழ் தமிழ்க்கவிதை குவிப்பதற்கு
மணவாழ்வு மறுப்பா கூறும்?
மாதுளைச் சாறுடன் மலைத்தேன் கலப்பதாலே கசப்பா தோன்றும்.
மகனே கேள்; மறுக்காமல் என் வேண்டுகோளை ஏற்றிடுக!” என்றாள்.
“மறுப்பதாக எண்ணிடாதீர் அம்மா! நான்
வெறுக்கவில்லை நற்கண்ணையினை - ஆனால்;
போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்.
பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல;” என்றான்!
“வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது மகனே - ஊரார்
கூறுவதுபோல் உனைப்பெற்ற உண்மைத்தாயாக இருந்திருந்தால்,
தாய்சொல் தட்டாத தனயனாகத் திகழ்ந்திருப்பாய்! இந்தச்
சேய் வளர்த்த செவிலித்தாய்தானே காவற்பெண்டு!
அதனாலே அலட்சியப்படுத்துகின்றாய் என்னை;
அன்புள்ள இளவரசே! நான் வருகின்றேன்” என நகர்ந்தாள்!
“இதயத்தில் ஈட்டியினை எறிந்துவிட்டீர் தாயே!
இனியும் நான் பிடித்த பிடியில் உடும்பாக இருக்கப்
போவதில்லை!
எனைப் பெற்றெடுத்த தாய்தான் தாங்கள் - அதற்கு
எடுத்துக்காட்டாக; நாளைக்காலையிலே
நற்கண்ணையினை நானே போய்ச் சந்தித்து
நல்ல முடிவை அறிவிப்பேன்”
கிள்ளியின் உச்சிமோந்து வாழ்த்துக்கூறி,
“நள்ளிரவு ஆயிற்று அதனால் நாளைக்கு வருகின்றேன்;
இருவருமே நற்கண்ணையினைப் பார்த்து
இனிய செய்தி கூறுவோம்” என்றுரைத்து
விழிவடிக்கும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துத் தன்
வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள் காவற்பெண்டு!
நற்கண்ணையின் தூய காதல் வெற்றியினை நினைத்தவாறு
நற்கிள்ளி இமை மூடி இன்பத்தில் ஆழ்ந்திருந்தான்!
நாழிகை ஒரு சிறிது கழிந்த பின்னர்,
ஆழிசூழ் உலகமே அவளாய் மாற - கற்பனைக்
கனவுலகில் பயணமானான் - காதற்
கிளியுடனே இணையாகப் பறக்கலானான்!
அச்சத்தால், நாணத்தால், மடம், பயிர்ப்பால்
அருகில் வராது அசைந்தாடிச் சென்றவளை
‘இச்’ சென்ற முத்தத்தால் புலன்மாற்றி
இழுத்தணைத்துப் பஞ்சணையில் போட்டுக்கொண்டான்!
இருமேனி - திருமேனி - ஒன்று கருமேனி; அது அவன் மேனி!
மறுமேனி - மாம்பழ நிறமேனி - மங்கையவள் மாயமேனி!
அமுதகலசங்கள் இரண்டும் நெஞ்சில் அழுந்த அழுந்த - அவள்
குமுதவிழிகளோ குறுகுறுக்க இன்பம்! இன்பம்! இந்தக்
கனவுப்பனியின் பொழிவு கலைத்து
நினைவுக் கதிரோன் முளைத்திடவே
கண்விழித்துக் கொண்ட கிள்ளி;
களிப்பு சிந்தும் முகத்தினனாய் - ஒரு
கால்தூக்கித் தலையணைமேல் போட்டுக் கொண்டான்!
இவ்வாறு
பஞ்சணையில் பரவசமாய்ப் படுத்திருந்த கிள்ளிமீது
பறந்து வந்து விழுந்தது ஓர் ஓலைச்சுருள்!
எடுத்துப் படித்துப் பார்த்த கிள்ளி,
துடித்துப் போய் எழுந்து நின்றான்!
“இன்றிரவு இளவரசி ஐயை
இங்கிருந்து சிறையெடுக்கப்படுகின்றாள்”
ஓலையிலே இச் செய்தி கண்டு
உரக்கச் சிரித்திட்டான் கிள்ளி!
ஓடி ஒளிந்த கட்டிக்கும் பாணனுக்கும்
உடல்தினவு அடங்கவில்லை போலும் - என்
உடன்பிறப்பாம் ஐயையினைக் காப்பாற்ற; இந்த
உடைவாளே போதுமென உறுமிக்கொண்டு,
ஊழித்தீயெனப் புறப்பட்டான் - தங்கை
உறங்குகின்ற மாளிகைக்கு!
1. “வலிமிகும் முன்பின் பாணனொடு மலிதார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடுஇன் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சி
போரடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய........”
மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 226
பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :
வலிமிகும் முன்பின் பாணன் = வலிமை மிகுந்த போர் ஆற்றல்
கொண்ட பாணன். தார்மலி தித்தன் = வெற்றி மாலைகள்
மிகுதியாக அணிந்த தித்தன்.
பாடுஇன் தெண்கிணைப் பாடு = மகிழ்ச்சியொலி கிளப்பும்
தோற்கருவியின் முழக்கம். நாளவை = அரசனின் அத்தாணி
மண்டபம். போர்அடு தானைக் கட்டி = போரில் பகைவரை
வெல்லும் ஆற்றல்மிகு படைகளைக் கொண்ட கட்டிமன்னன்.
பொராஅது = போராடாமல்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்