பகுதி 100 / 102
ஒருதலைக் காதல் — 9
அச்சுப் பக்கம் 464–470 · ஸ்கேன் 476–482 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 477
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஒருதலைக் காதல்
9
உறையூர்த் தித்தனது அத்தாணி மண்டபத்தில்
உறைவிட்டெழுந்த வாட்களுடன் தளபதிகள் நின்றிருந்தார்.
வீரைவேண்மான் வெளியன் தித்தன்;
வீரர்களின் அணிவகுப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்றும்
வெகுண்டுவரும் கட்டி, பாணன் இருவருக்கும்
தகுந்தபடி பாடம் கற்பிக்கத் தவறக்கூடாதென்றும்
மரக்கிளையில் தொங்குகின்ற மலைப்பாம்பு
வனவிலங்குகளை சுற்றிவளைத்துச் சிக்கவைத்து
எலும்புகளைக் கணுக்கணுவாய் முறித்தெடுத்து
இறுதியிலே இரையாக்கிக் கொள்வதுபோல்
பகைப்புலத்தைப் பலமுனையில் சூழ்ந்தெதிர்த்துப்
பாணன், கட்டி இருவரது பல் பிடுங்க வேண்டுமென்றும்,
கூர்முனை வாள் ஒன்றை விரல்களால் தடவிக்கொண்டே
போர்முறைகள் வகுத்தளித்துக் கொண்டிருந்தான்!
அப்போது அமைச்சர், பணிவாகத் தலைகுனிந்து
அரசன் தித்தனிடம்; “மன்னவனே!
மாற்றார் வலிமையினைக் குறைவாக மதிக்க வேண்டாம்.
மற்போரில் திறமுடைய பாணன் என்பான்
கங்கநாட்டுத் தலைவன் பல்வேற்கட்டிக்குச்
சிங்கம்போல் துணையாக வருகின்றான்!” என்றார்.
“உறையூரின் வளத்திற்கு ஒப்பான
உரைசால் அணிகலன்கள் தருகின்றேன்;
உன் மகளை எனக்களித்திடுக, என்று
என்ன மமதையிருந்தால் கட்டி மன்னன் கேட்டிருப்பான்?
இறப்பெனும் முடிவு எல்லோர்க்கும் உண்டெனும்போது - அது
இளமையில் வந்தால் என்ன; முதுமையில் வந்தால் என்ன!
எப்போது வந்தாலும் என் கொள்கை; உடலில்
தப்பாது ஓடுகின்ற உயிரோடு மானமும்
உடன்கட்டை ஏறுதல் கூடாது என்பதுதான்!”
[Full-page illustration; no printed body text.]
தித்தன், இவ்வாறு தீப்பிழம்புச் சொற்களாலே விடைபகர்ந்த
பின்னும்,
அத்தாணி மண்டபத்தில் அமைச்சர்பிரான்; இதுகுறித்து
இத்தோடு விட்டுவிடலாம் என்றிராமல்; மன்னனிடம்
“பத்தோடு பதினொன்றாக என் கருத்தை ஒதுக்கிடாமல்,
பாணன் துணை, பல்வேற்கட்டிக்கு வாய்த்துளதை
பகுத்தாய்ந்து பார்த்து முடிவெடுத்தல் நலம்,” என்றார்.
“பாணனின் ஆற்றல் பற்றிக் கல்லாடனார் எனும் கவிஞர்,
பாட்டொன்றில் கூறுகின்றார்; பார்வேந்தே கேட்டிடுக!
1. எல்லை கடந்த தொலைவில் உள்ள எதிரிகளின் அரண்
அழித்து
ஏறுகளுடன் பசுக்களையும் கவர்ந்து வரும் திறன் பெற்றுத்
திகழ்ந்து
நெய் தடவிய கரிய பூண் அமைந்த நெடுவேல் கையிலேந்தி
நேர்நின்று பகைவரை எதிர்த்து வெல்லும் புறங்கொடாத
புலிப்போத்து
என்று
பாணன் வீரத்தைக் கல்லாடனார் வியந்துரைப்பார்!
2. பல்வேறு வேற்படைகளைக் கொண்டு பகையெதிர்க்கும்
மாவீரன் கங்கநாட்டுக் கட்டியென்று
மாமூலனார் புகழ்ந்துரைப்பார்! இவ்வாறு
பாடல் பெற்ற வீரர் இருவர் - உறையூர்மீது
படைதிரட்டி வருகின்றார் என்ற உண்மை
மன்னர்பிரான் மறத்தல் தீது!” என்றார்.
ஆழ்ந்து சிந்தித்தே அறிவுரை வழங்கும் அமைச்சர் கருத்தை,
ஆத்திரத்தில் புறந்தள்ளிப் போட்டு விடாமல் - அரசன்,
தயக்கமுடன் தலையசைத்து அவரை நோக்கி;
“மயக்கத்தில் தள்ளாதீர் என்னை - மானங்காக்க மாற்று
வழிதான் என்ன?” என்றான்.
“மாவீரன் நற்கிள்ளியெனும் வெண்ணெயினைக் கையில்
வைத்துக் கொண்டு,
மானங்காக்கும் போர்முனையில் வெற்றியெனும் நெய்க்குத்தான்
அழுவாருண்டோ?
மறுப்பொன்றும் சொல்லாமல் மன்னா - இப்போதே
மகன் கிள்ளிக்கு அனுப்பிடுக ஓலை”யென்றார் அமைச்சர்!
“கிள்ளிக்கா? என்மகன் கிள்ளிக்கா? என்னை
எள்ளி நகையாடிவிட்டுப்போன நற்கிள்ளி;
அழைத்தால் வருவதற்கு ஒப்புவானா? ஒப்பமாட்டான்!
அமைச்சரே! அந்த முயற்சி வீண்தான்!” என்றான் தித்தன்!
“உங்கள் அழைப்புக்குக் காத்திருக்கவில்லையப்பா கிள்ளி!
உறையூரின் சிறப்புக்கு ஊனம் வராமலும்
உயிரனைய சோழர்குல மானம் போகாமலும்
உடன்பிறப்பு ஐயைக்கோர் இழிவு நேராமலும் தடுத்திடவே
உங்கள் உத்திரவு இல்லாமலே நாட்டுக்குள் வந்துவிட்டேன்!
உடன் ஆணை வழங்கிடுங்கள் உங்கள் மகனுக்கு!
உறுபகையை ஓடஓட விரட்டிவிட்டு வருகின்றேன்” - என்றபடி;
அந்திவானத்தில் அப்போது இறங்கிக் கொண்டிருந்த சூரியனின்
செந்தீ முகத்துடன் நற்கிள்ளி; நாளவையில் நுழைந்திட்டான்!
“மகனே,” என்றோடி மார்புறத் தழுவிக் கொண்டான் தித்தன்!
மாவீரன் தோள்மீதும் உச்சிமீதும் முத்தமிட்டான்! அவனோ
மண்டியிட்டுத் தந்தையின் தாள்வணங்கித் தொழுதபோது
சுண்டிவிட்ட நாணயம் போல் அவையோர் எழுந்து நின்றார்!
அமைச்சர்பிரான் கண்களிலே ஒளியுமிழ; “உறையூரை
ஆளப் பிறந்தவனே!” என அழைத்துக் கிள்ளியிடம்,
“கட்டிக்கும், பாணனுக்கும் களத்திற்சென்று - நல்ல
வட்டியும் முதலுமாய்க் கொடுப்பதற்கு வந்துவிட்டாய்” என
வாழ்த்துரைத்தார்!
“பகை நாட்டான் பாணன் வெல்வதற்குப் படை எதற்கு?
புகை கிளப்பும் யாககுண்ட மந்திரங்கள் போதாதோ?
வேற்படை பல கொண்ட கட்டியினை வீழ்த்துதற்கு,
வீரர்கள்தான் எதற்காக?
வேள்வி செய்து விரட்டியடிக்க முடியாதோ?” என்று,
விளையாட்டாய்க் கண்சிமிட்டிக் கேட்ட கிள்ளியினை
வெட்கத்தால் தலைதொங்கும் தித்தன், அணைத்தவாறு;
“நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும் மகனே! இனி
நடப்பவைகள் நல்லவைகளாயிருக்கட்டு” மென்றான்!
அத்துடன் அவையில் உள்ள வீரர்களை நோக்கி;
“ஆமூர் விட்டுக் கிள்ளி வந்துவிட்ட சேதியினை அறிவியுங்கள்
நாட்டுக்கு!
அதிர்ச்சியுற்று அஞ்சியோடப் போகின்றார் பகைவர் என்று நமது
அத்தாணி மண்டபத்துப் பேரிகைகள் முழங்கட்டும்!”
இவ்வாறு
தித்தன் வீரைவேண்மான் ஆணை அதிர்ந்தவுடன்
அத்தாணி மண்டபத்துத் தோற்கருவிகள் அதிர்ந்தன!
உறையூர் அரண்மனையின் மதில்கள் அதிர்ந்தன!
உள்நாட்டுப் பாசறை முரசங்கள் அதிர்ந்தன!
ஆயத்தமாகிவிட்டான் போருக்குக் கிள்ளியெனினும்
ஐயையாம் தன் தங்கையினைக் காண்பதற்கு,
அவளிருக்கும் மாளிகைக்கு விரைந்து சென்றான்;
அங்கு நற்கண்ணை வந்துள்ள தகவல் அறியாமல்!
இதற்கிடையே
உறையூர் அரண்மனைக்கு உடனே அழைத்து வரச் சொன்னார்
என்று
ஒரு வீரன் தேர் ஒன்றை தெருவாயில் ஓரத்தில் நிறுத்திவிட்டு,
அந்தி சாய்ந்துவிட்ட காரணத்தால் அகல்விளக்கின் முன்னாலே
குந்திக்கொண்டு கவிதை எழுதுகின்ற காவற்பெண்டை,
அழைத்திட்டான்! அவசரமெனக் குதித்திட்டான்!
பரபரப்பில் எதற்காக என்றுகூடக் கேட்காமல்
பாட்டெழுதும் ஓலையினைச் சுருட்டிப் போட்டுவிட்டு
பூட்டொன்றை வீட்டுக்குக் காவலாய் மாட்டிவிட்டு
புறப்பட்டுத் தேர்ஏறி அமர்ந்துகொண்டாள் காவற்பெண்டு!
உறையூர் அரண்மனைக்குப் போகாமல் அந்தத்தேர்,
ஒரு காத தூரம் உறையூர் எல்லை தாண்டி ஓடியதால்,
தித்தன்தான் அழைத்திருப்பான் என்று நம்பி,
தேர் ஏறிச் சென்ற செவிலித்தாய் திடுக்கிட்டாள்!
எத்தர்களாம் கட்டியும் பாணனும் செய்திட்ட சூழ்ச்சியினால்
எதிரிகளின் பாசறைக்கு இழுத்து வரப்பட்டோம் என்றுணர்ந்து,
எரிமலையாய் வெடித்தபடி, “இந்த இழிதகைச் செயலுக்கு,
எவன் வகுத்தான் வீரம் என்று ஓர் இலக்கணம்?”
எனக்கேட்டக் காவற்பெண்டை நெருங்கி;
“பசுமந்தை கவர்ந்தபின்தான்; தாயே;
பகையெதிர்த்துப் போரிடுதல் இந்தப் பாணன் வழக்கம்!
உறையூர் அரண்மனையில் பசுவாக நீ இருந்து
உறவாக வளர்த்தமகன் ஓடிவிட்டான் நாட்டைவிட்டு!
ஒப்பில்லாப் பேரழகி ஐயை எனும் ஒய்யாரியும்
உன் மடியில் தவழ்ந்து வளர்ந்தவள்தானே!
அதனால்தான்;
காவற்பெண்டாம் இந்தக் காராம்பசுவைக் கவர்ந்துள்ளோம் - உன்
கன்றனைய கட்டழகுப் பெட்டகமாம் ஐயை; இந்தக் கட்டியெனும்
மன்னவனை,
மணந்து கொள்ளச் செய்துவிடு! பின்னர்
மன்னித்து மறந்திடுவோம் உறையூர்மேல் பகையுணர்வை”
என்றான் பாணன்!
“மண்வளைத்துப் பின்னர் நீங்கள்
பெண் வளைத்துப் போவதற்கு - உறையூர்வாழ்
மக்கள் எல்லாம் மரங்கள் அல்லர்! அதனாலே
மறந்திடுங்கள் ஐயைநல்லாளை அடைகின்ற திட்டத்தை” என்றாள்!
3. “கொய்யாக் கனியாம் ஐயையினை மறப்பதெனில் எளிதான
காரியமோ?
கொத்துக் கொத்தாய்ப் பூத்த வேங்கை மரத்தின்
கவினுறு தாதுக்களைப் போன்ற அழகுத் தேமல்கள் நிறைந்து
கருங்கண்களுடன் விளங்கும் கட்டவிழா மொட்டுக்களாய்க்
குன்றென நிமிர்ந்த கொங்கை கொண்டாள் என்று
கோதையொருத்தியைப் பரணர் வர்ணிப்பாரே; அவர்
பாணியில் சென்று நானும் ஐயை முகம்
நாணிடப் புகழ்ந்து பாடிடல் வேண்டும்”
- என்ற;
கட்டி மன்னன் பேச்சுக் கேட்டுக்
காதுகளைப் பொத்திக் கொண்டாள் காவற்பெண்டு!
“பகைவர்களே! நீங்கள் எனை இந்தப் பாசறையில் கொன்றாலும்
பரவாயில்லை;
பசுந்தோகை ஐயையின் வாழ்வைப் பாழ்படுத்த விடமாட்டேன்
அறிவீர்” என்றாள்!
“அதையுந்தான் பார்ப்போம்; அடே! யாரங்கே?
அடையுங்கள் இவளை ஒரு கூண்டில்” என்று; ஆணையிட்டான்
கட்டி மன்னன்
1. “இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்
கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்
விழவு அயர்ந் தன்ன கொழும்பில் திற்றி........
எழாஅப் பாணன்........”
மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 113
பாடியவர் : கல்லாடனார்)
2. “குல்லைக் கண்ணி வடுகர் முனையது,
பல்வேற்கட்டி நன்னாட்டும்பர்........”
மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் : 11
பாடியவர் : மாமூலனார்)
3. “நாகிள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலகள்........”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 352
பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :
இகந்தனவாயினும் = எல்லைகடந்த தூரமாயினும்.
பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பு = பசுக்களைப்
பாதுகாத்து பகைவர் உறையும் உணவு மிகுதியான அரண்.
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் = திரண்ட திமில்
கொண்ட காளைகளுடன் கூடிய பகைவர்களின் பசுக்களைக்
கவர்ந்திடும். சுருணை = பூண். கனிகாழ் = நெய்கனிந்த வேலின்
தண்டு. எழாஅப் பாணன் = புறங்கொடாத பாணன்.
நாகிள வேங்கை = கொத்துக் கொத்தாய் பூத்துள்ள இளவேங்கை
மரம். நுண்பல் சுணங்கு = நுண்ணிய பலவாகிய பூந்தாது.
❀
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்