பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 99 / 102

ஒருதலைக் காதல் — 8

அச்சுப் பக்கம் 457–463 · ஸ்கேன் 469475 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 471

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒருதலைக் காதல்

8

களத்தில் வீசிய கைவேல் எனவே
கடுகிப் பறந்தாள் நற்கண்ணை! அவ்வேல்
களிறுடல் புகுந்து வந்தாற்போல
களைத்துச் சோர்ந்து பூமியில் உதிர்ந்தாள்!

கண் விழித்துப் பார்த்தபோது; புலவர்
காலடியில் தலையிருப்பதுணர்ந்தாள் - “மனப்
புண்ணாற்ற மருந்திடுவீர் என நினைத்தேன்;
தண்ணார்ப் பெருங்கடல் மூழ்கிடு கலத்தை மீட்க,
எண்ணார் கிள்ளி என்பதை உணர்ந்தும்
மண்ணாற் செய்த பாண்டமாய் எமது மதிப்பை
அவை நடுவே போட்டுடைத்ததேனோ?” என்று
அழுதுகொண்டே அனல் கக்கும் சொல்லால் கேட்டாள்!

“அம்மா; நற்கண்ணை! அழுதென்னைக் கொல்லாதே!
அவைக் களத்தில் நான் அவசரமுற்றேன் எனினும்
உண்மையில் நடந்தது தெரியாது உனக்கு!
உறையூரான் மகன் உள்ளத்தை அறிவதற்கு,
போர்முனையின் ஓய்வற்ற பாசறையில், உனக்காக;
ஓர் இரவு அவனோடு மனந்திறந்து உரையாடினேன்.

முடியட்டும் போர் பிறகு பேசலாம் - நாளைப் பொழுது
விடியட்டும் வெற்றிச் செய்தியுடன்; எனக்கூறி,
நற்கிள்ளி, புன்னகையைத் தவழவிட்டுப் போனவுடன்,
நம்பிவிட்டேன் நான் அவனை; நாணத்தால் நழுவிப்
போகின்றான் என்று!

தென்றலுக்குத் தடை விதிக்கும் சோலையுண்டா?
தேனருவித் தழுவுதலை ஏற்காத மலைதான் ஏது? - இந்தத்
தென்னவனும் கன்னியுன்னை மணப்பான் என்றே
மன்றலுக்கும் உன் தந்தையுடன் நாள் குறித்து
மண்டபத்தில் அறிவித்து மனநிறைவு கொண்டுவிட்டேன்;
மறுத்தான் கிள்ளியென்றவுடன் நான் மாண்டுவிட்டேன்!

இப்போது
உயிரற்ற உடல்தானம்மா உன்னோடு பேசுவது!
சாறற்ற சக்கைதானம்மா இந்தச் சாத்தந்தை!
கயிறற்ற பம்பரங்கள் சுழல்வதில்லை;
கவிகற்ற உன்நெஞ்சுக் கென்நிலை புரியுமம்மா!”

விழியாறு பெருகியோடித் தாடியின்
வெள்ளிமுடி வெண்முத்துக்களைத் தாங்கிநிற்க,
பழிவந்து சேர்ந்ததே எனப் பதைத்துப்போன புலவரிடம்;
மொழியிலே அமைதி குழைத்து நற்கண்ணை, பேசலுற்றாள்!

“வேண்டாம் புலவரே; வேதனைக்கு விடையளிப்பீர்.
சாத்தந்தை என்றும் சாகாத்தந்தை; தமிழுக்கு!
பொன்மணிக் குவியலும் வைர வைடூரிய முத்துக் குன்றமும்,
நன்மணிமாடக் கூடங்களும் கோட்டைக் கோபுரமும்,
தொழுதேத்திப் போற்றுகின்ற கொற்றக்குடை ஆட்சியும்,
தோத்திரத்தால் உயர்ந்துள்ளம் கொள்ளை கொள்ளும் காட்சியும்,
இன்றிருக்கும், நாளை இல்லாமற் போகக்கூடும்!
என்றுமிருக்கும் பணியன்றோ தமிழுக்குச் செய்கின்ற பணி!
எனவே
தமிழ் உள்ளளவும் வாழ்வீர் நீவிர் - இந்தத்
தரணி உள்ளளவும் தமிழும் வாழும்!” என்றாள் நற்கண்ணை!

“நல்லதம்மா; நான் இனி வாழும் காலமனைத்தும்
மெல்லத் தமிழ் சாகாமல் காப்பதற்கே செலவிடுவேன்!
வெல்லச் சொல் கவிபுனையும் பெண்பாவாய் - நீ மட்டும்,
செல்லத்தான் வேண்டுமோ கிள்ளியினைப் பின்தொடர்ந்து?”

இவ்வாறு கேள்வி கேட்ட புலவருக்கு
எவ்வாறு விடையளிப்பதென்று நாணி;
“உறையூர்க்கு என்ன வேலையாய்ச் சென்றுளார் கிள்ளி?” என்று
உடனடியாய்ப் பேச்சுதனை மாற்றிவிட்டாள்!

“தித்தனுக்கும் கிள்ளிக்குமிடையே - ஒரு
தத்துவப் போர் நடந்ததாலே
மகன் தந்தை மனத்தாங்கல் விளைந்து - அதனால்
மாற்றார்க்கு இடம் கொடுத்துப் போனதம்மா!

1. வெண்சங்கம் முழங்கிடவும்
வெற்றி முரசு கொட்டிடவும்
வேல்விழி மங்கையர் ஏற்றும்
விளக்கொளி வரிசை காண்பதற்கும்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

விரைந்து வரும் மாலைப்பொழுதுக்குரிய
வீரை வேண்மான் வெளியன் தித்தன் - என்று,
முதுகூற்றனார் எனும் புலவர் - தமிழ்
மதுவூறும் கவிமலரால் புகழ்ந்தார் தித்தனை!

அம்மட்டோ?

2. சீரும் சிறப்பும் செழிப்புறு நாடும்,
சிறிய கண்கொண்ட பெரிய யானைப்படையும் பெற்று,
போருக்கிளையா தித்தனின் ஆற்றல்
பூத்துக் குலுங்கிடும் உறையூர் - என்று;
ஏறுநடைப் புலவர் நக்கீரப் பெருமான்
ஏடு கொண்டெழுதியுள்ளார் தித்தன் பற்றி!
அவனுக்கோர் மகளுண்டு ஐயை என்பாள் - உன்
ஆருயிர்க் கிள்ளிக்கு அன்புத் தங்கை!
அந்த ஐயையினை முன்னிறுத்தி
அவள் தந்தை தித்தன் என்று
பரணராம் பெரும் பாவாணர்,
பாராட்டிப் பாட்டெழுதியுள்ளார் எனில் - அந்தப்
பாவையின் பெருமையைப்
பகர்வதும் எளிதோ?

அதனையும் கேள்!

3. கலகலவெனப் பரல்கள் உருண்டொலிக்கும்
காற்சிலம்பணிந்து ஆம்பல்மலர் மாலைசூடி
அரமிட்டறுத்த பொன்வளையல்கள் பொலிவுற்று
அழகிய முன்கை இரண்டும் அசைந்திட,
முத்துப் பவளமொடு அணிகலன் பூண்டு
மூங்கில் எனவே தோள்கள் பூரிப்புக் கொண்டு
கற்பெனும் பொற்புடைக் கன்னியாம்
கவின்மிகு ஐயையின் தந்தை;
மழையெனக் கொடை வழங்கும்
மாவெண் தித்தன் எனும் மன்னன்!

பரணர் புகழ்ந்த அந்தப் பாவையை மணந்திட
பற்பல வேந்தர்கள் பகற்கனா கண்டனர்!

நற்கிள்ளிக்கும் அவன் தந்தைக்கும்
நல்லுறவு இல்லையென்று கேள்வியுற்று
நல்ல சமயம் இதுதான் என்றும் - இதனை
நழுவ விடுதல் கூடாதென்றும்,
பவானியாற்றுப் பகுதி ஆண்ட சேரர் தலைவன்

“பல்வேற்கட்டி” எனும் பெயருடையான்;
தித்தன் மகளாம் தித்திப்பு மாங்கனியை மணப்பதற்கு
முத்திரை ஓலையொன்றுடன் தூதனை அனுப்பிவைத்தான்.

4. ஓலையில் உள்ள குறிப்பில்; உறையூர்க்கிணையான
ஒப்பிலா ஒளிபொழியும் நவமணிகள் பலவற்றை உமக்குக்
கொடுத்தபின், கொள்கிறேன் உமது பெண்ணையென்று,
எழுத்தின்மூலம் உரைத்தது கண்டு,
எது கொடுப்பினும் கொள்ளமாட்டேன்
என் மகளைக் கட்டியெனும் மன்னனிடம் தள்ளமாட்டேன்.

இதுதான் முடிவென்று உன் தலைவனிடம்
இன்றே சென்று அறிவித்திடுக! என்றான், தித்தன்.

சோழன் உரைத்த சொல்கேட்டுக்
கோபம் தலைக்கேறிக் கட்டிமன்னன்,

பாணன் என்னும் பலமுடை வீரனுடன்
படையெடுத்து வருகின்றான் உறையூர்மீது!

காதில் இச்செய்தி விழுந்ததுதான் தாமதம்;
காட்டில் உள்ள புலிகள் எல்லாம் ஓருருவம் கொண்டதுபோல்,
கட்டி, பாணன் இருவருமே எல்லையை மிதிக்காமல்
எட்டி உதைத்துத் திரும்புவதாய்ச் சூளுரைத்து
உறையூர் நோக்கி இளவல் நற்கிள்ளி - போர்ப்
பறை முழக்கிப் போயுள்ளான்” என்றுரைத்தார் சாத்தந்தை!

தேடிநானும் செல்கின்றேன் என் தெய்வத்தையென்று,
ஆடிக்காற்றில் பறக்கின்ற அன்னத்தின் தூவிபோல் அங்கிருந்து
மறைந்து போனாள்!

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஆமூர்தாண்டி
பூவிரியும் சோலை உறையூர் புறநகரில் நுழைந்தபோது
நற்கண்ணை, விழியிரண்டும் வியப்பால் துள்ளியாட,

5. சிற்றில் முகப்பொன்றில் செந்தமிழ்ச் செவிலி
காவற்பெண்டாம் கவியரசி நிற்பது கண்டாள்!
ஆவல் ததும்பிட அவளிடம் ஓடி,
ஆங்கோர் தூணைப் பற்றியவாறு
அன்னாய்! உன் மகன் எங்கே? என்றாள்!
தமிழை மட்டுமல்ல; தன் மகனையும் காதலிக்கும்
தங்கநிலா நற்கண்ணை என்பதறிந்த காவற்பெண்டு;

என்மகன் எங்கு சென்றான் என நானறியேன்!
எனினும் அவன் எங்கோ ஒரு போர்முனைக்கே
போயிருப்பான்!
புலிபோன இடம் குறிப்பாகத் தெரியாவிடினும்,
புலி தங்கியிருந்த மலைக்குகையினைப் போலப்
புதல்வனை ஈன்றெடுத்துக் களத்தில்
முதல்வனாய் அனுப்பிய வயிறு இதுதானம்மா!

இவ்வண்ணம் காவற்பெண்டுரைத்த பதில் கேட்டுச்
செவ்வண்ணப் போர்க்களம் நோக்கி நற்கண்ணை
புறப்பட்டபோது;
தடுத்து நிறுத்திய அந்தத் தாய் - தன் மனையில்
தங்கிவிட்டுப் போகுமாறு பணித்திட்டாள்! அவளும் தட்டவில்லை!

“உணவருந்தி, ஓய்வு பெற்று, உறங்கிடுக; நாளை
உதயத்துக்குப் பின்னால் ஓலையொன்று தந்து
உன்னை ஐயையிடம் அனுப்பி வைக்கின்றேன்!
உடன்பிறந்தாள் பேச்சைக் கிள்ளி மறுத்தாலும்;
நற்கண்ணை - நற்கிள்ளி திருமணம் நடப்பதற்கு
நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்!
ஐயை மாளிகைக்குக் கிள்ளியும் வரக்கூடும்.
அதற்குள் நீ அவன் பிரிவை ஆற்றாமல்,
கையை மேலும் இளைக்கவிட்டுக்
கழல விடாதே வளையல்களை!” என்று
காவற்பெண்டு செய்த கேலியினால் நாணமுற்று,
கைவளையல்களை முழங்கைவரை ஏற்றிக்கொண்டாள்!

1. “வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப....”

மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 58
பாடியவர் : முதுகூற்றனார்)

2. “சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தை....”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 395
பாடியவர் : நக்கீரர்)

3. “அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
இழையணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்....”

மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 6
பாடியவர் : பரணர்)

4. “மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொளாஅ நெடுந்தகையவனே....”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 352
பாடியவர் : பரணர்)

5. “சிற்றில் நற்றூண்பற்றி, நின்மகன்
யாண்டுளனோ? என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஒரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 86
பாடியவர் : காவற்பெண்டு)

பொருள் விளக்கம் :

வெண்கோடு = வெளிய சங்கு. செல்லாநல்லிசை = கெடாத
நற்புகழ். அரிபெய் = பரல்கள் இடப்பட்ட.
தொடலை = தொடுக்கப்பட்ட மாலை. அரம்போழ் = அரமிட்டு
அறுத்த. பணை = மூங்கில். மாவண் = சிறந்த கொடைத்தன்மை
கொண்ட. வெண்ணெல்வேலி = நெல்விளையும் வயல்களை
வேலியாகப் பெற்ற. நன்கலம் = அணிகலன்.
கல்அளை = மலைக் குகை.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்