பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 98 / 102

ஒருதலைக் காதல் — 7

அச்சுப் பக்கம் 451–456 · ஸ்கேன் 463468 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 465

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒருதலைக் காதல்

7

மெல்லக் கண்ணிமைகள் விரிந்து கருவிழிகள் மலர்ந்தபோது;
இல்லத்துக் கட்டிலிலே நற்கண்ணை; தானிருப்பதுணர்ந்தாள்!
மேகத்தின் சூழலுக்குள் மறைந்திருக்கும் கதிரொளிபோல்
சோகத்தின் ஆழத்திலிருந்து கண்ணோளியைப் பாயவிட்டு,
தன்னருகே குனிந்து நின்ற பொற்கொடியை உற்று நோக்கி,
“தாய் தந்தை எங்குற்றார்?” எனக் கேட்டாள்!

“தலைவெடித்து விட்டதுபோல் ‘தாம்தூம்’ எனக்குதித்து,
தன்மானத்தை விலை கூறிவிட்டீரே” என்று;
தந்தையைக் கடிந்துகொண்டு - இனித்
தாமதித்தல் இவ்வூரில் ஒருக்கணமும் கூடாதென்று,
பொங்குற்றே உன் தாயார் புறப்பட்டுப்
பூம்புகார் நோக்கிப் போய்விட்டாள்!
இங்குற்ற அவமானத்தால் தலையிறக்கம் வந்ததென்று,
இடிந்து போயிருந்த தந்தை; உன் தாயைத் தொடர்ந்து
ஒடிந்து போன அவள் இதயத்தை ஒட்டவைக்கச் சென்று
விட்டார்”

பொற்கொடியாள் சொன்ன தகவல் கேட்டு நற்கண்ணை;
விற்புருவம் மேலுயர்த்தி, “வீணாக நான் மட்டும் ஏன்
வாழவேண்டும்” என்றாள்!
“உயிரினுமினிய தமிழ்மொழியை வாழவைக்க
உனைப்போன்றோர் ஓராயிரம் ஆண்டு வாழத்தான் வேண்டும்!”
என்ற குரல் கேட்டு ஏந்திழையாள் திடுக்கிட்டாள்!
அந்தக் குரலுக்குரியோன் நற்கிள்ளி என்றபோது;
எதிரே காணுகின்ற காட்சி மெய்தானா என்று -
எழில் விழிகள் இரண்டின் இமைக்கதவு படபடக்க;
“எந்த உலகில் இருக்கின்றேன் நான்?” என்று
சொந்தக் கண்களையே நம்பாமல் கேட்டுக்கொண்டாள்!

இந்த உலகில் இனி நமக்கென்ன வேலையென்று
இருவரையும் தனிவிடுத்துத் தோழி மெதுவாக நகர்ந்துவிட்டாள்!

நற்கண்ணை நிலையோ இங்கு;
நரம்புகளில் எல்லாம் இசையரங்கு!

“இரக்கம் பிறந்ததா என்மீது?” என்று எழுதிக்கேட்டன விழிகள்!
“உருக்கம் சுரந்ததா என்பால்?” என்று துடித்துத் தவித்தன
இதழ்கள்!

“மகுடமொன்றைத் தலைக்கு அணியும் மன்னவன் மகனே! - நான்
மகுடமிரண்டை மார்பகத்தில் தாங்கி நின்றும்;
முடிசூட மறுத்திடல் ஏனோ?” என்று
கொடியிடையாள் கேட்கவில்லை! அஃது அவள்;
முறுவலிலே ஒளிந்திருந்த மெளன வினா!

நிலைகுலைந்து நிற்கின்றாள் நேரிழையாள் எனக் கண்டும்
அலைகடலின் கொந்தளிப்பை அடக்குதற்கு முனையாமல்;
“நான் வந்திருக்கும் நோக்கம் புரிகிறதா?” என்றான்!

அவள்:-

“தேன் இனிக்கும்! தேளின் நஞ்சு கடுக்கும்!
தேடி, இவையிரண்டில் எதை எனக்கு அளிக்கப்
போகின்றீர்?
வான் பார்த்து ஏங்குகின்ற உழவனுக்கு
வறண்ட காற்றுத்தான் வெகுமானமா? அன்றி
வளம் சேர்க்கும் மழையெனும் அமுதபானமா?
கூன்பிறை வளர்ந்தொரு முழுமதியாகுமா? - அன்றிக்
கும்மிருட்டே என் வாழ்வுக்கு வகுத்த விதியாகுமா?”

அவன்:-

“மாம்பழச்சாறு நிகர் தமிழைத்தான்
மங்கையுன்பால் நான் கேட்டு மகிழக்கூடும்!
மாம்பழ மேனியின்பால் எனக்கு நாட்டமில்லை! உன்
மாத்தமிழ்த் திறன் போற்றும் மனமுண்டு எனக்கு!”

அவள்:-

“திறனைப் புகழ்ந்தமைக்கு மிக நன்றி; அந்தத்
திறனிருக்கும் ஆரணங்கின் காதலுக்குத் தீவைத்தல்
நன்றா?”

அவன்:-

“இருதரப்பின் இதயப் பரிமாறலே காதலுக்கு
இலக்கணமாம்!”

அவள்:-

“ஒருதரப்பின் ஆசைக்கும் அதுதான் இலக்கணமா?”

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

அவள்:-

“படர்கின்ற முல்லைக்குப் பரிவு காட்டாமல்
இடர்தந்து புறக்கணித்தல் பாபமன்றோ?”

அவன்:-

“பாரி மன்னன் தேர்; முல்லைக் கொடியொன்று
படரத்தான் பயன்பட்டதேயன்றி;
பரவிடும் மலரின் மணத்தை - அந்த
மரத்தேர் நுகர்ந்து மகிழ்ந்ததும் உண்டோ?
பாவை நீ என்மீது படர்வதென்றால் - நான்
பாரியின் மரத்தேராய் இருந்தென்ன பயன்?”

அவள்:-

“நாடாளும் மன்னரின் மைந்தர்தானே -
காடாளும் மாமுனிவர் அல்லவே நீர்!”

அவன்:-

“மாமுனிகளும் மாதர் மடி வீழ்வதுண்டு -
மறைமுகமாய் மதனன் கலை பயில்வதுண்டு!
மன்னர்மகன் நான்; உண்மைதான்!
மண் வளைக்கக் கொண்ட ஆசை;
பெண்ணின் இடை வளைக்கக் கொண்டேனில்லை!”

அவள்:-

“வாளுறையுடன்தான் உறங்குவேன் எனும், தலைவ!
சூளுரையொன்றுரைப்பேன் அறிக!
வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன்! அன்றி
வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!”

அவன்:-

“கார்கால இடியைப்போல் முழங்குகின்ற
கவிப்பாவாய்; நீ சொன்ன இரண்டுமே நடக்காது!
போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்
பூவிதழை அல்ல! அல்ல! இதுவும் உறுதி!
அஃதேபோல் அவ்வாளால் உன்உயிரை
அழிக்கமாட்டேன் அதுவும் உறுதி!
வருகின்றேன்; என்னை மன்னித்து
வழியனுப்பி வைத்திடுக!”

இவ்வாறு கூறிவிட்டு,
விழியழகி நற்கண்ணை விடையளிப்பதற்குக் காத்திராமல்
விரைந்து வந்து வீட்டோரம் நின்றிருந்த தேர் ஏறி அமர்ந்து
கொண்டான்.

தொடர்ந்து வந்த துடியிடையாள் - தேரின்
தூண் ஒன்றைப் பற்றிக்கொண்டு - “உமைப்
படர்ந்து தழுவத் தாவுகின்ற - இளம்
பருவக்கொடிதான் வதங்குவதோ” என்றழுதாள்!

“உறையூர்க்கு அவசரமாய்ப் போகின்றேன் இன்று!
ஓரிருகிழமைக்குள் திரும்புகின்றேன் இங்கு!
உன்னோடு உரையாட நேரமில்லை இப்போது;
உளம் திறந்து முழுமையாகப் பேசலாம் அப்போது!” என்றான்.

தட்டிக் கழிக்கின்றான் எனத் தெரிந்துகொண்டு - தேரில்
முட்டிக் கொண்டழுதவாறு நற்கண்ணை;
“தலைவனே! உமக்காகத் தவமிருக்கும் என்னுள்ளத்தில்
அலைபாய்ந்து ஒலிக்கின்ற பாட்டைக் கேள்” என்றாள்; - பாடினாள்!

* “இறாமீனின் உடல்போன்றுச் சொரசொரப்புக் கொண்ட
சுறாமீனின் முகத்தில் நீண்ட கொம்புகள் போல்
முட்கள் குத்தும் இலைகள் நிறை தாழை மரங்கள்
முதுயானைத் தந்தம்போல் அரும்பு முதிர்ந்து
மான்களிலே பெண்ணினம்போல் தலைசாய்த்து
மணங்கமழச் செய்கின்ற மகிழ்ச்சி குலுங்கும்
விழாக்களங்கள் அமைந்துள்ள கடற்பரப்பிலும்,
வெற்றிக்கொடி நாட்டுகின்ற வீரர்குலத்தலைவா!
மணிகள் அசைந்தாடும் உன் நெடுந்தேரை; உன்பால்
பணிபுரியும் தேர்ப்பாகன் விரைந்து செலுத்திட; நீயோ
ஒருசில நாள் கழித்து வருவேனென்று
ஓதுகிறாய் எனக்கு!
உனைப்பிரிந்து ஒருநாளும் இனி
உயிர்வாழமாட்டாள் இவள் என உணர்க!”

நற்கண்ணையின் சோக இசையினூடே; வீட்டோரம்,
நகர்ந்து கொண்டிருந்த அந்தத்தேர்;
நற்கிள்ளி ஆணை கேட்டு நாலுகால் பாய்ச்சலில்
நடுவீதியிற் பறந்து மறைந்தது ஓர் நொடியில்!
புரவிகள் எழுப்பிய புழுதித்துகளைப்
பொருட்படுத்தாது பின்தொடர்ந்தவளைப்
பொற்கொடி வந்து தடுத்தும் பயனிலை! அவளோ
புலம்பிடும் சிலம்புடன் ஓடுகின்றாள்!

* “இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்பு முதிர்பு
நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப!
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறிஆயின்; இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!”

மூல மேற்கோள்(நற்றிணை : பாடல் : 19
பாடியவர் : நற்கண்ணையார்)

பொருள் விளக்கம் :

இறவு = இறாமீன். சுறவு = சுறாமீன். பிணர் = சொரசொரப்பு.
மருப்பு = யானைத்தந்தம். நன்மான்உழை = நல்ல பெண்மான்.
உரவுநீர் = கடல். செலீஇய சேறிஆயின் = செலுத்திடச்
செல்வாயானால்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்