பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 102 / 102

ஒருதலைக் காதல் — 11

அச்சுப் பக்கம் 479–484 · ஸ்கேன் 491496 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 493

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஒருதலைக் காதல்

11

நீலமயிலொன்று தோகை விரித்ததுபோல் அமைந்த
கோலமிகு கட்டிலிலே கோதை ஐயை நல்லாள்
அனிச்சமலர் தேகத்தை அரவுரியன்ன ஆடையால் மூடி;
அண்ணன் வரும் தகவல் ஒன்றும் அறியாமல்,
ஆழ்ந்ததோர் உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்!
காவற்பெண்டின் முன்னே கட்டியும் பாணனும் ஐயையின்
கட்டழகைக் கற்பனையாய்ப் புகழ்ந்ததொன்றும் மிகையே இல்லை!

பரணர், ஒரு பாவை குறித்து அவள் ஆடையுரித்துப்
பாட்டெழுதினாரே; அதற்குச் சரியான எடுத்துக்காட்டாய்ச்
சோழமகள், சொர்ணத்தின் வார்ப்படமாய், காளைகளைச்
சொக்கவைக்கும் பாற்குடங்கள் படைத்தவளாய்க் காட்சி தந்தாள்!

தென்றல் வந்து பலகணி வழியே நுழைந்து
திருட்டுத்தனமாய் அவள் மேலாடை நகர்த்தியதால் வானத்
திசைமுழுதும் பரவி நின்ற விண்மீன்கள்;
திடுக்கிட்டுத் திகைத்துக் கண்சிமிட்டிப் பார்த்து,
மலையிரண்டுக்கிடையே வெண்ணிலவு தோன்றி - அதுவும்,
மாளிகைக்குள் மஞ்சத்தில் குளிர்பொழிவதெவ்வாறு என்ற;
மருமத்தை அறிவதற்கு ஆவல் மிகக்கொண்டு,
மந்திராலோசனைக் கூட்டமே நடத்துகின்ற விந்தை என்னே!

அந்த இரவில்;
காற்றசைத்துக் கொஞ்சுகின்ற திரையினூடே
கரும்போர்வை போர்த்திய உருவமொன்று
கையிலொரு கட்டாரி பிடித்தவாறு - ஐயையின்
கட்டிலுக்கருகே வந்து நின்று,
சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே - அந்தப்
பத்தரை மாற்றுப் பாவையினை உற்று நோக்க;
அப்போது உடன்பிறப்பைக் காப்பாற்ற உடைவாளுடனே
அண்ணன் கிள்ளியும் அங்கே வந்துவிட்டான்!

ஆலயத்துச் சிலைபோல அவளை அபகரித்து ஓடிவிட,
ஐயை என்ன ஊமையா? செவிடா? உயிரற்ற பதுமையா?
அதனால் நச்சு மூலிகையொன்றைக் கொண்டு
அவளை மயக்கமுறச் செய்த பின்தான்
சிலையாக்கிச் சிறையெடுக்க முடியுமென
சிந்தித்து முடிவெடுத்ததுபோல்;
கரும்போர்வை உருவம், கையிலுள்ள
கட்டாரியினைக் கீழே வைத்துவிட்டு
மூலிகை முடிச்சொன்றை - ஐயையின்
மூக்கருகே கொண்டு செல்ல முயன்றபோது;

“மூடனே! மூர்க்கனே! நில்லடா;” என்று
வேடனொருவன் விலங்கின்மேல் பாய்வதுபோல்
வீரவேங்கை நற்கிள்ளி தோன்றி - உடைவாளை,
வீசுதற்குக் குறிபார்த்து ஓங்கிவிட்டான்!
இனியும் தாமதித்தால், எதிர்பார்த்தவாறு
இலட்சியம் நிறைவேறாதென்று; அந்த இருட்டுருவம்,
எடுத்தது கையில் கட்டாரியை! அப்போது
தடுத்தது ஐயையின் கை எனினும் - அவளை
நெட்டித் தள்ளிப் படுக்கையில் கிடத்தி
நெஞ்சுக்கு நேரே கட்டாரியை உயர்த்திப்பிடித்த
கரும்போர்வை உருவத்தை நோக்கி,
இரும்பு நெஞ்சன் நற்கிள்ளி உடைவாளை எறிந்தவுடன்;
கட்டிலருகே இருந்த தீபம் கீழே விழுந்து,
காரிருள் எங்கும் கப்பிக்கொண்டதய்யோ!

“ஆ!” என்று வீறிட்டு அடங்கிய அவலக்குரல் ஓர்
ஆரணங்கின் குரலாய் இருப்பதை உணர்ந்து
“ஐயை! ஐயை! அன்புத் தங்கையே! - உன்
ஆவிபோக்கிடும் எமனாக நானே வந்துவிட்டேனா?” என்றலறி,
விளக்கொன்றை விரைவாக ஏற்றிக்கொண்டு
விழியிரண்டில் மழைபொழிய அருகிலோடித் துடித்தான் கிள்ளி!

அங்கு கண்ட காட்சி என்னே?
ஐயைக்கோர் ஆபத்துமில்லை!
ஆனால் நற்கண்ணை தான்
உறையூர் இளவல் வீசிய
உடைவாளை நெஞ்சில் தாங்கி
உயிருக்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தாள் - அவள்,
உருவத்தை மறைத்திருந்த கரும்போர்வை
ஒரு மூலையிலே ஒதுங்கிக் கிடந்ததுவே!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

ஐயை, அவளைத் தூக்கி அணைத்துக்கொண்டு
“அண்ணா! இஃதென்ன அநியாயம்?” என்றாள்!

“இளவரசி! அவரை ஒன்றும் சொல்லாதே!
இது நானாகத் தேடிக்கொண்ட இனிய முடிவு!
உன் எதிரில்தானே சூளுரைத்தேன்; நினைவில்லையா? - அதனை
உன் முன்னிலையில் நிறைவேற்றிக் காட்டிவிட்டேன்!
வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன் - அன்றி
வீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!
என்று நான் சொன்னபோது;
இரண்டுமே நடக்காதென்று,
எடுத்தெறிந்து பேசினாரே, நற்கிள்ளி!
இதோபார்; யார் வாளால் வீழ்ந்துள்ளேன் பார்!
இளவரசியுன்னை சிறையெடுத்துப் போவதாக
எழுத்தைமாற்றி நான் எழுதி வீசிய ஓலையால்
ஏமாந்துபோனார் உன் அண்ணன்!
எதிரியெனக் கருதிக்கொண்டு
எப்படியோ என் சபதத்தை
அவரையறியாமல் நிறைவேற்றி வைத்துவிட்டார்!
அதற்குநான் உனக்குத்தான் நன்றிபல கூறவேண்டும்!
உனைக் கொல்வதுபோல் நான் பாசாங்கு செய்ததால்தான்
உன் அண்ணனது உடைவாளை முத்தமிடும் பேறு என்
உடலுக்குக் கிடைத்தது!

என் மனத்தில் நான்
எழுப்பிய கோட்டையினைக்
கட்டி முடிக்காவிடினும்,
எண்ணியவாறு என்னுயிரினைத்
திண்ணியராம் தித்தன் மகனுக்கே
அளிப்பதென்ற உறுதியிலே
அணுவளவும் தவறாமல்
அற்புத வெற்றியினைக் கண்டுவிட்டேன்!”

வேதனையின் சாயல்கூட முகத்தில் படராமல் - களத்திலோர்
வீரன் மரணத்தை ஏற்பதுபோல், நற்கண்ணை பேசப்பேச,
“மன்னித்துவிடு நற்கண்ணை” என்று கதறி
மண்டியிட்டு அவள் தலையைத் தன் மடிமீது வைத்துக்கொண்டான்!
கண்ணீர் வழிந்திட்ட கிள்ளியின் கன்னத்தை, தன்
காந்தள் விரல்களாலே துடைத்திட்டாள் நற்கண்ணை!

“போர்வாளைத்தான் காதலிப்பார் உன் அண்ணன்!
பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல!”
கூர்கொண்ட உடைவாளுக்கு உயிரைத் தந்துகொண்டே
நேர்கொண்ட பார்வையுடன் நேரிழையாள் இதைச்சொல்ல;
வேர் அற்ற மரம்போல நிலையற்றுத் தள்ளாடி, நற்கிள்ளி;

“விடிந்தபின் தாயுடன் ஓடிவந்து உறையூர் அரண்மனையின்
விளக்காக உனை ஏற்றுக்கொள்ளக் காத்திருந்தேன் - அதற்குள்,
முடிந்ததே உந்தன் வாழ்வு என் அறியாமை இருட்டாலே!”
என்றழுதான்!

“அன்னை காவற்பெண்டு வந்துவிட்டாரா?” என்று
அகமகிழக் கேட்டவாறு தலையைச் சாய்த்தாள்!
குபுகுபுவெனக் கொட்டுகின்ற குருதி நீர்வீழ்ச்சியிலே
குளித்துக்கொண்டே கவியரசி, ஒன்று சொன்னாள்!

“இனியவரே! இன்றென்காதல் கைகூடியது! எனை,
ஈன்றெடுத்த தாய் எனக்கு எவ்வாறு காவலிருந்தாள் தெரியுமா?”

1. தாமரையின் காம்புகள் விரிந்து மலர்ந்த பூவிதழ்கள்
உதிரும்படி
தரணிவாழ் மக்களுக்கெலாம் வாழ்வளிக்க
காரிருளிலும் மழை பொழியும்! அப்போது
காற்றால் தூக்கி வீசப்படும் அலைகளின் துளிகளைத்
தடுக்கமுடியாமல்
புறத்தே விடுக்கின்ற சிறிய கரைகளையுடைய
பொற்றாமரைக் குளத்தைக் காத்திடும் காவலன்போல,
எனைப் பெற்றெடுத்த தாயார் கண்மூடாமல்
எனைக்காத்திட்டாள்!
உனை அடைய நானோ; அவளையும் மீறி,
தடாகத்துச் சிறுகரையில் மோதிவெளியேறும்
தண்ணீர்த்துளிபோல ஓடிவந்தேன்!

இப்போது
கண்ணீர்த்துளி சிந்துகின்றீர்; இதுவே நமது காதல்
மணவிழாவின்
பன்னீர்த்துளி எனக்கருதி மகிழ்கின்றேன்!
போர்வாளை மட்டுமே காதலிக்கும் என் கண்ணாளா! இந்தப்
பூவிதழுக்கும் ஒருமுறை அருள்பாலிக்க உமது திருவுளச்
சம்மதமோ?” என்றாள்!

அரும்புமீசை அவள் இதழில் பொருந்த
கரும்பாய் முத்தம் நூறு கொடுத்தான்!

ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டு அப்போதே அவள்
உயிர் பறந்து விட்டதாலே; உறையூரான் மயங்கி வீழ்ந்தான்!

(முற்றும்)

1. “...... ஈங்கைத்
துய் அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே!”

மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் : 252
பாடியவர் : நக்கண்ணையார்)

பொருள் விளக்கம் :

ஈங்கை = தாமரை. துய் = காம்பு. தொழில்மழை = உலகில்
தொழில்களுக்கு முதன்மையான மழை.
பானாட் கங்குல் = நள்ளிரவின் இருட்டு.
எறிதிரைத்திவலை = வீசுகின்ற அலையின் துளி.
சிறுகோட்டு = சிறிய கரையினையுடைய.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்