பகுதி 89 / 102
இருவிழி மழையும் இதய மகிழ்வும்!
அச்சுப் பக்கம் 405–408 · ஸ்கேன் 417–420 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 419
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
இருவிழி மழையும் இதய மகிழ்வும்!
(இசைப்பாடல்)
இராகம் : சிந்து பைரவி
தாளம் : ஆதி
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
போர்வாளேந்தி என் மகன் பொன்முடி;
புல்லரை வீழ்த்தி உயிர் துறந்தான்;
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
(தொடுப்பு 1)
மார்பில் விழுப்புண் பெற்ற மகன் - இந்த
மண்ணை மீட்டதால் வாழ்த்துகிறேன்; அவன் என்
மடியில் தவழ்ந்து வளர்ந்ததை எண்ணி
மனம் வாடுகிறேன்! மனம் வாடுகிறேன்!
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
(தொகையறு)
துள்ளிவரும் பகையின் - தலைகளைக்
கிள்ளிவரும் வீரன்தான்
பிள்ளையாய்ப் பெற்றிருந்தேன்;
பெருமகிழ்ச்சி கொண்டிருந்தேன்!
‘களம் சென்று வருகின்றேன் அம்மா’ என்று;
கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் அன்று!
கட்டித்தழுவி என் வீரக்கருஞ்சியத்தை
தட்டிக் கொடுத்து ‘வென்று வா மகனே’ என்றேன்
வெட்டி வருவான் பகையை என வழிபார்த்து நின்றிருந்தேன்
கொட்டிக் கிழங்குகளே மிதிப்பது போல் கொடும் பகைவர்
உடல் மிதித்த மகன்;
குன்றுமொன்று சாய்ந்ததுபோல் சாய்ந்துவிட்டான்;
குன்றுப்புகழ் கொண்டு இந்தக் குல வரலாற்றில்
குடியேறிவிட்டான்
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
(தொடுப்பு 2)
மானம்; என் மகன் கேட்ட தாலாட்டு;
மரணம் அவன் ஆடிய விளையாட்டு!
பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதே
வேல் பிடிக்கும் வித்தையினைக் கற்றுத் தந்தேன்
ஆல் விட்ட விழுது போல் தந்தைக்கு மகனை - ஆட்டு
வால் போலக் குட்டை மனம் கொண்ட பகை; நம்
கோல் பறிக்கக் கூடாதென்று கொந்தளித்து; அவர்,
தோல் உரித்துத் தூத்துவிட்டுப் போரில் மாளுகிறான்; பெரும்
புகழை ஆளுகிறான்!
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
(தொகையறு)
கொக்கின் சிறகாய் நரைத்துவிட்ட என் கூந்தல் தடவி; உன்
போக்கை வாய் திறந்து வாழ்த்தம்மா எனக் கேட்ட வடிவழகன்;
பொருதடக்கை வாளிங்கே; போருக்கு வந்த பகை எங்கே?
எனப்
பொங்கும் கடலாய் ஆர்ப்பரித்தான்!
‘போய் வா மகனே’ என்றுரைத்தேன்;
‘போனான், வரவில்லை - என் செய்வேன்?
புதுமழையின் உச்சியிலே கொடி போட்டான் என்று
புன்னகையோ மின்னவிடும் என் முகத்தில்!
விழிகளில் ஒளிவீசும் மகிழ்ச்சியுடன்
பொங்குகின்ற கண்ணீரோ;
ஓங்கி வளர்ந்துயர்ந்த
மூங்கில் மரங்களிலே
தேங்கி வழிகின்ற மழைத்துளியை வென்றிடுமாம்!
[Full-page illustration; no printed body text.]
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
(முடிப்பு)
காதலுக்குத் தடை சொல்லக் கூடாதென்று - ஒரு
கட்டழகுப் பெட்டகத்தைத் துணை சேர்க்க; அவன்
கருத்துக்கு ஏற்பதொரு கன்னியின்மான
தனம் கொண்டு திருமணிப்புடன் மனமுடிக்கக் காத்திருந்தேன்;
அவனே
களிறுகளைப் பந்தாடிப் புரவிகளைப் பஞ்சாக்கிக்
கயவர்களின் வாள்முனையை நெஞ்சில் தாங்கிக்
காதலியைத் தவிக்கவிட்டு
காலத்தை நகர்த்துகின்ற இந்தக் கிழவியையும்
கண்ணீரில் மிதக்க விட்டு
கடமையினை முடித்து விட்டான்!
களிப்பொரு பக்கம் - கண்ணில் நீர் ஒரு பக்கம்
காட்டும் பெற்ற மகனை வாழ்த்துகின்றேன்!
கருவில் சுமந்த தாயல்லவோ; அதனால் வாழ்கின்றேன்!
(எடுப்பு)
என் இருவிழி மழைதனைக் காணுதீர்;
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!
“மீனுண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 277
பாடியவர் : பூங்கண் உத்திரையார்)
பொருள் விளக்கம் :
வால்நரை = வெண்மையாக நரைத்த.
நோன்கழை = வலிய மூங்கில்.
துயல் = அசைவும். வெதிரம் = மூங்கில் மரம் நிறைந்த ஒரு மலை.
தூங்கிய சிதர் = தேங்கிய மழைத்துளி.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்