பகுதி 90 / 102
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ?
அச்சுப் பக்கம் 409–412 · ஸ்கேன் 421–424 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 423
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ?
(இசைப்பாடல்)
இராகம் : சண்முகப்பிரியா
தாளம் : ஆதி
(எடுப்பு)
பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால்
அருளற்றுப் போனாரோ தோழி?
இருள் மூடிப் போகாமல் வாழ்வில்
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?
(தொடுப்பு 1)
கார் காலம் தலைகாட்டத் தொடங்கு முன்னர்
நேரிழையே நான் வருவேன் என்று
நெற்றியிலே முத்தமிட்டு நெருங்கிப் பின்னர்
தேர் ஏறிச் சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை?
(எடுப்பு)
பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால்
அருளற்றுப் போனாரோ தோழி?
இருள் மூடிப் போகாமல் வாழ்வில்
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?
(தொடுப்பு 2)
வளமை கொழிக்க வாழ்வதற்குப் பொருள் தேவையென்று
வாணிபத்தை நடத்துதற்கு ஏனப் பிரிந்து போனவர்க்கு
இளமை துடிக்க இங்கொருத்தி ஏங்குகின்ற நிலைமை - அவர்
இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்தாமை; என்ன புதுமை!
என்ன புதுமை!
(எடுப்பு)
பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால்
அருளற்றுப் போனாரோ தோழி?
இருள் மூடிப் போகாமல் வாழ்வில்
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?
(தொடுப்பு 3)
பசலை நிறம் படர்ந்து விடும் என் உடல் முழுதும் எனச்சொல்லி
பசுஞ் சோலைப் பூமித்தை மீது அவர் கரம் பிடித்து நான்
அழுதும்
பயனில்லை என்பதனை உணரும்போது; தீயிட்ட
பஞ்சாகப் போகுதடி நெஞ்சம்!
பரிவு காட்டும் இயல்பு மட்டும் இருந்தாலே கொஞ்சம்;
பிரிவுத் துயரால் தகித்திடுமோ இந்த மலர் மஞ்சம்?
(எடுப்பு)
பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால்
அருளற்றுப் போனாரோ தோழி?
இருள் மூடிப் போகாமல் வாழ்வில்
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?
(முடிப்பு)
வாடை நோக்கி வளர்கின்ற வரகின் கதிரை - ஆண்
மானின் கூட்டம் மேய்கின்ற அழகைப் பார் தோழி; அருகில்
பூனை சிரிப்பது போல் முல்லை அரும்பின் கூட்டம்
பூவை ஏன மாயக்குழி அவர் வரவில்லையெனும் வாட்டம்!
பூத்திட்ட முல்லையிலே அமர்ந்து தேன் மொண்டு,
சுத்திட்டுக் களிக்குது பார் அழகான வண்டு!
காத்திருப்பாள் மகரந்தப் பூங்கொடி என்று
கவலை தீர்க்க அவர் ஓடி வருவாரோ இன்று?
(எடுப்பு)
பொருள் திரட்டப் பிரிந்தவர்; என்பால்
அருளற்றுப் போனாரோ தோழி?
இருள் மூடிப் போகாமல் வாழ்வில்
இன்ப விளக்கேற்ற எப்போது வருவாரோ தோழி?
“பழமழைக் கவித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகுசிரித் தன்ன, பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
[Full-page illustration; no printed body text.]
வண்டுசூழ் மாலையும் வாரார்;
கண்டிசின் - தோழி! - பொருட்பிரிந் தோரே.”
மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் : 220
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்
(பெண்பாற் புலவர்))
பொருள் விளக்கம் :
பழமழைக் கவித்த = பெய்த மழையினால் தழைத்த.
இரலை = ஆண்மான். இருவி = கதிர் கொய்த வரகின் தாள்.
வெருகு = காட்டுப் பூனை.
பசுவீ மென்பிணிக் குறுமுகை = முல்லைப் பூவின் மெல்லிய
மொட்டுக் கொண்ட சிறிய அரும்பு. புறவு = முல்லை நிலம்.
கண்டிசின் தோழி = தோழியே இதனைக் கருத்தில் பார்ப்பாயாக.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்