பகுதி 88 / 102
சொல்வேன் கேளடி தோழி!
அச்சுப் பக்கம் 401–404 · ஸ்கேன் 413–416 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 415
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
சொல்வேன் கேளடி தோழி!
(இசைப்பாடல் - சிந்து பைரவி
தாளம் - ஆதி)
(எடுப்பு)
சொல்வேன் கேளடி தோழி - சுவை
வெல்லம் போல் ஒரு சேதி!
அரும்பு மீசை வளர்ந்த காளை - அவன்
குறும்பு செய்வான் பல வேளை!
(சொல்வேன் கேளடி தோழி...)
(தொடுப்பு)
வீதியில் மணல் வீடு அமைப்போம் - அங்கு
விளையாட்டாய்க் காய்கறிகள் சமைப்போம்;
பாதியில் வந்து குலைத்திடுவான் - நாம்
பதறிடுவோம் அவன் சிரித்திடுவான்!
(சொல்வேன் கேளடி தோழி...)
மல்லிகை முல்லை கூந்தலில் வைப்பேன் - அவன்
மாயமாய் வந்து அவைகளைப் பறிப்பான்!
பந்துகள் கொண்டு ஆடி மகிழ்வோம்; - அவன்
வந்தது தெரியாமல் திருடியே மறைவான்!
(சொல்வேன் கேளடி தோழி...)
வாயிற் புறந்தனிலே ஒருநாள் வந்து நின்றான்
வாய் உலர்ந்து போனதென்று “தண்ணீர்” என்றான்.
தாயும் எனை அருகழைத்து “மகளே” என்றாள்!
தங்கக் கலம் எடுத்து தண்ணீர் மொண்டு
தவிக்கின்ற பிள்ளையாண்டான்
தாகவிடாய் தணியென்று ஆணையிட்டாள் தோழி!
(சொல்வேன் கேளடி தோழி...)
விருப்பமிருந்தபடி எனக்கும் - எனிலும்
வெளியிற் காட்டாமல் நீர் கொண்டு சென்றேன்!
வீட்டு முகப்பினிலே நின்றிருந்தான் தோழி! - நான்
நீட்டிய கைத்தனைப் பிடித்து விட்டானடி தோழி!
நடுங்கிப் போய்விட்டேனடி நானும் தோழி;
நாலு பேர் கண்டுவிட்டால் என்னகும் தோழி!
(சொல்வேன் கேளடி தோழி...)
(தொகையறு)
“அம்மா!” என்று ஏன அறியாமல் அலறிவிட்டேன் தோழி!
அவளும் வந்து விட்டாள் அரை நொடியில் தோழி!
அதற்குள்ளே சமாளித்துக் கொண்டேனடி தோழி!
“அவருக்கு விக்கல் வந்ததம்மா” என்றேனடி தோழி!
‘அய்யோ பாவம்’ என அம்மாவும் ஓடிவந்து தோழி;
அவன் முதுகுப்புறம் வழித்துவிடத் தொடங்கிவிட்டாள் தோழி!
(சொல்வேன் கேளடி தோழி...)
(முடிப்பு)
பின்புறமாய்த் தாய் நின்ற காரணத்தால் தோழி;
என்னுள்ளம் கொண்ட காதல் அறிந்து கொண்டான் தோழி!
கண்ணாலே திருமணத்தைப் பேசிவிட்டுத் தோழி;
கள்வன்மகன் நகைக்கூட்டம் செய்திட்டான் தோழி!
அவன் வாழியவே; வாழி!
“சுடர்த் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன்’ என வந்தற்கு, அன்னை
‘அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்’ மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
‘அன்னாய்! இவனொருவன் செய்தது காண்!’ என்றேனு,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனு, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ; மற்று என்னைக்
[Full-page illustration; no printed body text.]
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி,
நகைக்கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!”
மூல மேற்கோள்(கலித்தொகை : பாடல் : 51
பாடியவர் : கபிலர்)
பொருள் விளக்கம் :
சிற்றில் = மணல் வீடு.
அடைச்சிய கோதை = கூந்தலில் வைத்த பூ.
பரிந்து = பறித்து.
சிறுபட்டி = கட்டுக்கடங்காக் காளைப்பருவத்தினன்.
சிரகம் = நீர் அருந்தும் கலம். வாக்கி = வார்த்தல்.
தெருமருந்திட்டு = மிரண்டுபோய். நீவ = வழித்துவிட.
நகைக்கூட்டம் = இன்பப் புன்னகை புரிதல்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்