பகுதி 87 / 102
ஆயமகன் குழலூதினான்!
அச்சுப் பக்கம் 397–400 · ஸ்கேன் 409–412 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 411
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஆயமகன் குழலூதினான்!
இசைப்பாடல்
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : திசிர ஆதி
(எடுப்பு)
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
ஏறுதழுவி வெற்றி கொண்டால் - அவனை
ஏற்றுக்கொள்வேன் என்றுரைத்தாள்!
வீறுகொண்டே காளைமீது பாய்ந்துவிட்டான் - பெரு
வெற்றி கண்டே அவள்மீது சாய்ந்துவிட்டான்!
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
(தொடுப்பு)
முட்ட வரும் காளையின் கொம்பு கண்டு அஞ்சுவோனை
மொட்டழகு முல்லைநில மங்கையவள்
இப்பிறப்பில் மட்டுமல்ல; பின்னுமோர்
பிறப்பு உண்டென்று சொன்னால்
அப்பிறப்பிலும் அண்டவிடேன் என்றுரைப்பாள்!
அவள் வழி வந்தவளாம் அழகு நிறை பொற்சிலையாம்!
புலியெனத் தாவிய காளையை அடக்கி - அதனை
எலியென விரட்டியே எழுந்தவனை - என்
சிங்கமே! என்றோடித் தழுவிக் கொண்டாள் - என்
தங்கமே என அவளை வாரியெடுத்து......
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
(முடிப்பு)
சீறிவந்த காளையின் கொம்பிரண்டால்
கீறிய காயங்களில் மருந்திடவே - தன்னை
மீறிய காதலினால் இதழ் குவித்தாள்; ஆகா
ஆறியதே காயம் ஒரு நொடியில் எனக்கண்டு,
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
வெட்டுண்ட புண்களிலே மேலுடல் அழுந்த
வேது கொண்டு ஒற்றினாள் - அன்பில்
கட்டுண்டு வலி மறந்து; நான் எங்கும்
காணாத சுகம் இதுவென்று வாழ்த்தியே...
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
(தொகையறா)
“காற்றாகப் பறந்துவிடும் உயிரை
காளையின் கொம்புக்கு அஞ்சி
காப்பதற்கு ஓடுகின்ற மனிதர்,
மாலையிடும் அளவுக்கு
மலிவாகப் போனதுவோ
ஆயமகள் தோள்கள்?” என்று
அறைகூவல் விடுக்கின்ற பெண்கள்;
அந்தநாள் தமிழகத்தின் கண்கள்!
அவர் வழிவந்தவளாம் அழகு தவழ் ஓவியமாம்;
யானைக்கும் பணியாத காளையொன்றை
பூனையென ஆக்கிய வீரனையே
அணைக்கத் துடிக்குது கைகள் என்றாள்; அவளை
அணைத்துக் குலவி மகிழ்ந்தவாறு...
ஆயமகன் குழலூதினான்; அந்த
ஆயமகள் குழைந்தாடினாள்!
(106)
“கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின், படாஅகை
ஈன்றன ஆயமகள் தோள்......”
(103)
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆயமகள்......”
“வளியா அறியா உயிர் காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ ஆயமகள் தோள்?......”
(106)
“முலைவேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம்
கொலைஏறு சாடிய புண்ணை......”
[Full-page illustration; no printed body text.]
மூல மேற்கோள்(கலித்தொகை : முல்லைக்கலி)
(101, 103, 106 ஆகிய பாடல்களிலிருந்து)
பாடியவர் : நல்லுத்திரனார்)
பொருள் விளக்கம் :
கடாஅக் களிறு = வெறிகொண்ட ஆண் யானை.
கண்ணஞ்சா = பயந்து நடுங்காத. படாஅகை = வெற்றிக்கொடி.
கொல்லேற்றுக் கோடு = கொல்லவரும் காளையின் கொம்பு.
வளி = காற்று. நளிவாய் மருப்பு = நெருங்கி அமைந்த கொம்பு.
தோய்தல் = அணைதல்.
முயங்கிப் பொதிவேம் = கட்டித் தழுவுவோம்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்