பகுதி 86 / 102
மணித்தேரில் சென்ற மகன்!
அச்சுப் பக்கம் 394–396 · ஸ்கேன் 406–408 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 407
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
மணித்தேரில் சென்ற மகன்!
இசைப்பாடல்
இராகம் : பீம்ப்ளாஸ்
தாளம் : திஸிர ஆதி
(எடுப்பு)
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை
மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை
அதனால்தான் ஆயிரம் பேர் அவ்வூர் வீரர் வந்த பின்னும்
அவர் இல்லமெல்லாம் ஆரவாரம் எழுந்த பின்னும்
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை.
(தொடுப்பு 1)
விழுப்புண்பட்ட வீரர் பலர் இல்லம் வந்தனர்
வேம்பின் இலை கொண்டு புண்களை ஆற்றிட
வீட்டு முகப்பில் கொப்புகளைக் கொணர்ந்து
வேல்விழித் துணைவியர் செருகி வைத்தனர்.
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை
மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.
(தொடுப்பு 2)
காயமுற்றோர்க்கு ஆறுதலாய்க் காஞ்சிப் பண்பாடினர்
கடுகை நெய்யிட்டுப் புகைத்துக் காற்றிலே கலந்தனர்.
‘கல்’ என்ற ஒலியுடனே மனைகள் தோறும்
களம் சென்று திரும்பியோரின் களைப்பினைப் போக்கினர்.
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை
மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.
(தொடுப்பு 3)
கொடுத்த பணி முடித்திடாமல் வருதல் - அவன்
கொண்ட கொள்கை குன்ற வைக்கும் என்பதால்
கிடைத்தவரை வெற்றியென எண்ணி - அப்
படைத்தலைவன் நிறைவு கொள்ளவில்லை!
[Full-page illustration; no printed body text.]
பாசமிகு அன்னையினைப் பார்ப்பதற்கு
பறந்தோடி வருகின்ற நினைவும் வரவில்லை!
மற்றவர்கள் வந்துவிட்டார் - அவர் மனையில்
உற்றவர்கள் மனமகிழ்வு பெற்று விட்டார்!
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை
மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.
(தொகையறா)
தமிழகத்துத் தாய்க் குலத்து வீர மங்கை
தன் புதல்வன் காலந் தாழ்ந்து வருவதற்குக் கலங்கிடாமல்
தடந்தோளால் பகை சாய்த்த பின்பே - என்
தங்கமகன், தாய் முகத்தைக் காண்பதற்கு வருவான் என்றாள்!
அதனால்தான் ஆயிரம் பேர் அவ்வூர் வீரர் வந்த பின்னும்
அவர் இல்லமெல்லாம் ஆரவாரம் எழுந்த பின்னும்
மணித்தேரில் சென்ற அவள் மகன் இன்னும் திரும்பவில்லை
மாற்றாரை விரட்டாமல் திரும்பி வர அவன் விரும்பவில்லை.
“வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே!”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 296
பாடியவர் : வெள்ளைமாறனார்)
பொருள் விளக்கம் :
வேம்புசினை = வேப்பந்தழையடர்ந்த கிளை. ஐயவி = கடுகு.
வெந்து உடன்று எறிவான் = கொதித்துச் சினந்து பகை
வேந்தரை வீழ்த்துவான். நெடிது = தாமதமாக.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்