பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 85 / 102

நெஞ்சம் இனிக்கிறது; தஞ்சம்புகத் துடிக்கிறது!

அச்சுப் பக்கம் 390–393 · ஸ்கேன் 402405 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 403

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

நெஞ்சம் இனிக்கிறது; தஞ்சம்புகத் துடிக்கிறது!

(இசைப்பாடல்
தாளம் - ஆதி
இராகம் - மிசிரபீலு)

(எடுப்பு)

நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத் துடிக்கிறது!
வெஞ்சமரில் வெல்லும் உன் தடந்தோள் கண்டு
அஞ்சுவர் பகைவர்; எனப் பெரும் புலவர்,
கொஞ்சுதமிழில் உன் கொற்றம் வாழ்த்துதல் கேட்டு
மிஞ்சுது காதல்; அதனால்
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத் துடிக்கிறது!

(தொடுப்பு)

வஞ்சி எனக்கோர் வரம் தரவேண்டுமென
கெஞ்சியுன்னைக் கேட்கின்றேன் - என்பால்
எஞ்சியுள்ளது உயிர் ஒன்றுதான்; எனினும்
வஞ்சமின்றி வழங்கிடுவேன் உனக்காகக் கண்ணா! - உன்
மஞ்சத்து மயிலாக எனை ஆக்கிடுக மணிவண்ணா!
அதை நினைத்தாலே - கனவில் வந்து நீ எனை
அணைத்தாலே;
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத் துடிக்கிறது!

(முடிப்பு)

மலைச்சாரல் காட்டோரம் ஒரு நாள் - மனம்
மயக்குகின்ற மாலை நேரம் சென்றேன்.
குலையாகப் பழம் தொங்குகின்ற மரத்தின்

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

கிளையொன்றில் பெருந் தேன்கூடு கண்டேன்.
கிட்டாதோ தேன் துளிகள் என்று
முற்றாக முடமான ஒருவன்
அடிமரத்தின் வேரின் மேல் அமர்ந்து
அகங்கையில் தேன் சொட்டுமென்று
ஆவலாய் முகம் வைத்துக்கொண்டு
அந்தோ; வெறுங்கையைச் சுவைத்துக் கொண்டிருந்தான்!
அவன் நிலைதான் என் நிலையோ கண்ணா?
‘ஆம்’ என்று நீ சொல்லிவிட்டால் பெண் நான்
அந்த முடவன் போல் செயல்படத்தான் வேண்டும்; உன்
அருகில் வரமுடியாமல் ஏங்கத்தான் வேண்டும்!
எட்டாத பழமெனினும்
எனக்கு நீ கிட்டிடுவாய் என்று - தவம்
கட்டாயம் இருக்கத்தான் வேண்டும்; உன்
கரம்தனில் ஒருநாள் தவழத்தான் வேண்டும்!
அதை நினைத்தாலே - கனவில் வந்து நீ எனை
அணைத்தாலே;
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத் துடிக்கிறது!

செய் தவம் பலிக்கவில்லை யெனில் - என்
சிந்தை கவர்ந்திட்ட சிங்கம் நீ; என்
மெய் தழுவிக் கிடக்கின்ற கற்பனையில்
மிதந்திடுவேன்; அதை எண்ணி மகிழும்போது என்
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால்
தஞ்சம் புகத் துடிக்கிறது!

“குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்,
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழ்இருந்து,
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே!”

மூல மேற்கோள்(குறுந்தொகை - பாடல் : 60
பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

குறுந்தாள் இருக்கை முடவன் = குறுகிய கால்கள் கொண்டு
நடக்கவும் நிற்கவும் முடியாமல் ஓரிடத்திலேயே இருக்கின்ற
முடவன். கூதளி ஆடிய நெடுவரை = கூதளங் கொடி யாடு
கின்ற மலைப்பகுதியில். உட்கைச் சிறுகுடை கோலிக்கீழ்
இருந்து = உள்ளங்கையை உண்கலம் போலக் குவித்துக்கொண்டு.
சுட்டுபு நக்கியாங்கு = (தேனடையைச்) சுட்டிக்காட்டியவாறே
வெறுங்கையைச் சுவைப்பது போல. நல்கார் = விரும்பாதார்.
நயவார் = அன்பு செலுத்திடார். பல்கால் காண்டல் = பல
முறையும் காண்பது.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்