பகுதி 84 / 102
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
அச்சுப் பக்கம் 387–389 · ஸ்கேன் 399–401 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 400
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
இசைப்பாடல்
இராகம் : அரி காம்போதி
தாளம் : திசிரம் ஆதி
(எடுப்பு)
ஊர் உறங்கும் வேளையிலே - நான்
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
உண்ணக் கொடுத்த பழச்சுளைகள்
உதட்டைத் தாண்டி இறங்கவில்லை!
(தொடுப்பு -1)
கதிர் உறங்கும்! கருமுகில் மெத்தையிலே
கண்ணயர்ந்து நிலவுகூட சற்றுறங்கும்!
காசினியில் உயிரினங்கள் அனைத்தும் உறங்கும்,
மாசில் வீணையும் என்விரல் படாது வீட்டில் உறங்கும்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான்
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
(தொடுப்பு -2)
அன்றில் பறவையினம் புன்னை மரத்தில் உறங்கும்
அலைமோதிச் சிதறி அரும்பிய நீர்ப்பரப்பும்
ஆழ்கடலோரம் உறங்கும்!
சென்றான் எனைப் பிரிந்தென்று சிந்தை மிக நோகும்
செந்தாமரை இமைகள் மூடமுடியாமல் போகும்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான்
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
(முடிப்பு)
வரம்பொன்று வேண்டுமடி காதலுக்கென்றார்
வராமலா போய்விடுவான் உன் தலைவனென்றார்.
‘சுள்’ என்று என்மீது சுற்றத்தார் காய்ந்து விழுந்தார்.
நள்ளிரவில் அவர்கள்கூட நன்றாகத்தான் உறங்குகின்றார்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான்
ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
[Full-page illustration; no printed body text.]
உண்ணக் கொடுத்த பழச்சுளைகள்
உதட்டைத் தாண்டி இறங்கவில்லை!
குறுந்தொகைப் பாடல்கள்
“அதுகொல், தோழி! காமநோயே
வதி குருகு உறங்கும் இன்நிழற்புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல் இதழ் உண்கண் பாடுஒல் லாவே?”
மூல மேற்கோள்(பாடியவர் : நரிவெரூஉத் தலையார்
பாடல் : 5)
“நள்ளென் றற்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே, மாக்கள், முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் துஞ்சா தேனே”
மூல மேற்கோள்(பாடியவர் : பதுமனார்
பாடல் : 6)
பொருள் விளக்கம் :
வதி = தங்கியுள்ள. குருகு = அன்றில் பறவை.
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர் = அலைகளால் உடைந்து,
சிதறிய நீர்த்துளிகளால் அரும்பிய இனிய நீர்ப்பரப்பு.
மெல்லம் புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்.
பாடுஒல்லா = தூக்கமில்லாமையாயின.
நள்ளென் றற்றே யாமம் = ‘நள்’ எனும் ஓசையுடைய நடு இரவு.
சொல் அவிந்து இனிது அடங்கினர் மாக்கள் = புறங்கூறிச்
சுற்றியிருந்த மனிதர்களும் இனிதாக உறங்கினர்.
முனிவின்று = வெறுப்புச் சொற்களை விடுத்து.
ஓர்யான் மன்ற = நான் ஒருத்தி மட்டுமே.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்