பகுதி 83 / 102
பாசியும் பசலையும்!
அச்சுப் பக்கம் 384–386 · ஸ்கேன் 396–398 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 397
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
பாசியும் பசலையும்!
இசைப்பாடல் :
இராகம் : சங்கராபரணம்
தாளம்: திசிரஆதி
(எடுப்பு)
“செந்தமிழே என் செல்வமே உயிரே கேளாய்
சிந்தை கலங்கி விழியினை வீசாதே வாளாய்
இன்று போய் நாளை வருகிறேன் கலங்காதே வீணாய்”
என்று சொன்னவர் ஏன் வரவில்லை இத்தனை நாளாய்?
(செந்தமிழே)
(தொடுப்பு 1)
கண்களில் புத்தொளி பிறக்கும் அவர் வந்திருந்தால்
கவலைகள் நொடியினில் பறக்கும் அதைத் தந்திருந்தால்
எண்ணிலா இன்பங்கள் பூக்களாய் மணக்கும்;
எழுதாக் காவியப் பாக்களாய் முழக்கும்!
(செந்தமிழே)
(முடிப்பு 1)
அன்பே என்பார்; இதயம் குளிரும்!
அள்ளி உண்பார்; உதயம் மலரும்!
ஆவி நிகர்த்தவர் அருகில் இருந்தால் எனக்கு மருந்தாவார்;
தாவி அணைத்திடும்போது அவர்க்கு நான் விருந்தாவேன்!
(செந்தமிழே)
(முடிப்பு 2)
பசலையெனும் பாழும் நோய் படர்ந்தால்
பாவை நான் படும் பாடு; கடும் புயலில்
பஞ்சுதான் படுமோ? எனக்கு
என்றுதான் கவலை விடுமோ?
(செந்தமிழே)
[Full-page illustration; no printed body text.]
(தொகையறா)
தாகமெடுத்துப் பருகிடக் கேணியின் நீரைக் கைகளால்
மொண்டு குடித்திட முனைந்திடும்போது
வேகமாய்ப் பாசி விலகியே செல்லும்; பின்னர்
விரைந்து மீண்டும் கூடியே கொள்ளும்!
அதுபோல் அவர் அருகிருக்கும்போது அகன்றிடும் பசலை!
அவர் சற்றுப் பிரிந்தவுடன் - படர்ந்தே தழுவிடும் உடலை!
(செந்தமிழே)
“ஊர்உண் கேணி உண்டுறைத் தொக்க
பாசி அற்றே பசலை - காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே”
மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் 399
பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :
தொடுவுழித் தொடுவுழி = தீண்டுந்தோறும்
விடுவுழி விடுவுழி = பிரியுந் தோறும்
பாசி அற்று = பாசியைப் போன்றது.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்