பகுதி 82 / 102
பல்லி சொல்லுக்குப் பலன்!
அச்சுப் பக்கம் 381–383 · ஸ்கேன் 393–395 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 394
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
பல்லி சொல்லுக்குப் பலன்!
(ஏற்ற இசையில் பாடுக)
(எடுப்பு)
பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு — இதைப்
பகுத்தறிவாளர் மறுப்பார் எனினும்
பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு!
(தொடுப்பு) (1)
எல்லையற்ற கவலை இனியென் தலைவிக்கு எதற்காக?
தொல்லையை நீக்கிடத் துணைவர் வருவார் விரைவாக! - இந்தத்
தோழியை நினைத்து வாழ்த்திடுவாய் அதற்காக!
ஆழிபோல் இன்பம் காத்திருக்குதுனக்காக!
(பல்லியின் சொல்லுக்கு)
(தொடுப்பு) (2)
பாடுபட்டுப் பொருள் தேடப் பயணம் தொடர்ந்து
காடு; பட்டுப்போன கொடும் பாலையில் நடந்து
கூடுவிட்டுப்போன ஆவிபோல — உன்னை
வாடவிட்டுப் போனவர்; வந்திடுவார் இன்னே!
(பல்லியின் சொல்லுக்கு)
(தொடுப்பு) (3)
மூடநம்பிக்கையில் உனை மூழ்கடிக்க — நான்
நாடகம் ஆடுவதாய் நினைக்காதே! உன்
எழில் நிலா முகத்தை; இமையுடைத்துப்
பொழிகின்ற கண்ணீரால் நனைக்காதே!
(பல்லியின் சொல்லுக்கு)
(தொடுப்பு) (4)
பாலையில் கள்ளிக்காடுகள் பல உண்டாம் — ஆங்கு
பல்லிகள் பல துள்ளி ஓடுதல் உண்டாம் — அதில்
ஆணொன்று பெண்ணைக் கூடிடக் கொண்டதாம் ஆசை!
[Full-page illustration; no printed body text.]
அதற்காகவே அது எழுப்பியதாம் காதல் ஓசை!
(பல்லியின் சொல்லுக்கு)
(தொகையறா)
விரல் நகத்தால் அம்பின் கூர்மையை நெருடி
வேடனொருவன் அதைச் சரிபார்க்கும் வேளை
எழுந்திடும் ‘டிக் டிக்’ ஓசையைப் போலே — காதில்
விழுந்திடும் அந்தப் பல்லியின் ஓசை; அதைக்
கேட்டதும் உன் தலைவர்க்குப் பிறந்திடும் ஆசை; இந்த
வீணையை மீட்டிட வந்தேனென்று முறுக்குவார் இளமீசை!
(பல்லியின் சொல்லுக்கு)
“உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியம் காடு இறந் தோரே”
மூல மேற்கோள்(குறுந்தொகை பாடல் : 16
பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ)
பொருள் விளக்கம் :
உள்ளார் கொல்லோ = நினைக்காதிருப்பாரா?
பொன்புனை = இரும்பாலான. பகழி = அம்பு. செப்பம்
கொண்மார் = சரிசெய்யும் பொருட்டு. உகிர்நுதி = நகத்து நுனி.
பயிர் = ஒலிக்குறிப்பு. காடு இறந்தோர் = காட்டைக் கடந்தோர்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்