பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 81 / 102

ஆடலேறு; மடலேறி வாவா?

அச்சுப் பக்கம் 378–380 · ஸ்கேன் 390392 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 391

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

ஆடலேறு; மடலேறி வாவா?

இசைப்பாடல் :
இராகம் : கல்யாணி
தாளம் : ஆதி.

(எடுப்பு)

மணப்பதற்கு மறுப்பெதற்குச் சொன்னாள்?
மடலேறி வந்து மாமன்றத்தில் கேட்கவா? எனை;
மணப்பதற்கு மறுப்பெதற்குச் சொன்னாள்? நான்;
மடலேறி வந்து மாமன்றத்தில் கேட்கவா?

(மணப்பதற்கு)

(தொடுப்பு - 1)

நெஞ்சார்ந்த காதலுடன் நெடுந்தொலைவு தேடி,
நீர்சூழ்ந்த பள்ளங்களில் விழுந்தெழுந்து ஓடி,
பஞ்சாய்க் கோரைகளைப் பறித்தெடுத்து வந்தேன்!
பாவையொன்று அவளைப்போல் நான் செய்து தந்தேன்!

(மணப்பதற்கு)

(தொடுப்பு - 2)

மூங்கிலனைய தோளும் முழுநிலவு முகமும்
முல்லையினால் பல்லும் முத்துதிர்க்கும் சொல்லும்
பாங்கியுந்தன் தலைவியாம் எந்தன் காதலியைப் போல்
பாவையினைப் படைத்த விதம் சொல்லுகிறேன் கேள்!

(மணப்பதற்கு)

(தொடுப்பு - 3)

பருவமயில் அருகமர்ந்து அவள் மேனியெழில் படித்தேன்
உருவமொன்று அவளைப்போல் செய்துடனே முடித்தேன்
பாவையவள் பெயரையே நாளெல்லாம் துதித்தேன்
படமாக உள்ளத்தில் அவளைத்தான் பதித்தேன்.

(மணப்பதற்கு)

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

(தொடுப்பு - 4)

மங்கையவள் மடிமீது சாய்ந்ததுதான் பொய்யா?
மலரணையில் இன்பத்தில் தோய்ந்ததுதான் பொய்யா? — அவள்;
மார்பகத்தில் நான் தொய்யில் எழுதியதுதான் பொய்யா?
மற்றவர்க்குத் தெரியாமல் நடந்ததெல்லாம் பொய்யா?

(மணப்பதற்கு)

(முடிப்பு)

அடலேறு நான் மடலேறி வருவேன் அவள்
உடலோடு உறவாடியது அனைத்தையும் சொல்வேன்
உலகத்தை ஈடாகத் தருகின்றார் எனினும்
உளத்தினிலே இருப்பவளை இழப்பதற்குத் துணியேன்!
செங்கோன்மை நியாயத்தைக் கூறட்டும் — அந்தச்
செந்தமிழாள் எனக்கென்றே ஆகட்டும்!

(மணப்பதற்கு)

“பணைத்தோட் குறுமகள் பாவை தை இயும்
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள்
உருத்து எழு வனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான்தற் கடவின் யாங்குஆ வதுகொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே — இவ் அழுங்கல் ஊரே!”

மூல மேற்கோள்(குறுந்தொகை பாடல் : 276
பாடியவர் : கோழிக்கொற்றன்)

பொருள் விளக்கம் :

மடலேறுதல் = காதல். தலைவியை அடைதல் வேண்டிப் பனை
மடலினால் ஆன குதிரையில் காதல் தலைவன் ஏறி ஊர்தல்.
பஞ்சாய்க் கோரை = ஒரு வகையான கோரைப்புல்.
தொய்யில் = மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதுகிற
கோலம். பணை = மூங்கில். தை இயும் = செய்து தந்தும்.
யான்தற் கடவின் = நான் அவளைக் கேட்டால்.
பாவை = பதுமை, பெண்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்