பகுதி 80 / 102
நிறைவுக்கிடையே ஒரு குறையும் உளதே!
அச்சுப் பக்கம் 375–377 · ஸ்கேன் 387–389 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 388
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
நிறைவுக்கிடையே ஒரு குறையும் உளதே!
இசைப்பாடல்
இராகம் : கரகரப்பிரியா
தாளம் : திசிரஆதி
(எடுப்பு)
மாடங்கள் கூடங்கள் இருந்தும் - அதில்
மந்தமாருதம் மணம் வீசித் தவழ்ந்தும்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
(மனதுக்கோர்)
(தொகுப்பு-1)
மாஞ்சோலை பூஞ்சோலை இருந்தும் - அங்கே
மானினம் மயிலினம் மேய்ந்து திரிந்தும்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
(தொகுப்பு-2)
மாணிக்கம் முத்து பவளங்கள் இருந்தும்
மரகதம் பச்சை மணியெல்லாம் குவிந்தும்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
(தொகுப்பு-3)
மஞ்சத்தில் மல்லிகை பரப்பி இருந்தும்
மருக்கொழுந்து புனுகு சந்தனம் மணந்தும்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
(தொகுப்பு - 4)
மலைபோல செல்வம் வளர்ந்திருந்தும் - எங்கள்
மாளிகைத் தாழ்வாரம் விருந்தால் நிறைந்தும்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
[Full-page illustration; no printed body text.]
(முடிப்பு)
குறுகுறுவென நடந்து வந்தும்
குறும்புகள் செய்து கொஞ்சி மகிழ்ந்தும்
இருகை நீட்டி இட்டும் தொட்டும்
கிறுகிறுவென சுற்றியும் பற்றியும்
இதழால் கவ்வியும் இழுத்தும் கடித்தும்
இளம் விரல்களால் துழாவியும் பிடித்தும்
நெய்யுடைச் சோற்றை நெடுக இறைத்தும்
கையது கொட்டி களுக்கெனச் சிரித்தும்
மடிதனில் ஆடி முடிதனை அவிழ்த்தும்
மாதுளைக் கனியில் முகத்தினைப் புதைத்தும்
மங்கையென்னைத் தாயென்று அழைத்திட
மகவொன்று கருவில் அரும்பிடும் வரையில்
மனதுக்கோர் நிம்மதியில்லை;
மகிழ்ந்து கூத்தாட வழியும் இல்லை!
“படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே”
மூல மேற்கோள்(புறநானூறு பாடல் : 188
பாடியவர் : பாண்டியன் அறிவுடை நம்பி)
பொருள் விளக்கம் :
படைப்பு = செல்வம். படைத்து = உருவாக்கி.
உடைபெரும் செல்வர் = உடைமைமிக்க செல்வத்தையுடையவர்.
இடைப்பட = அதற்கிடையே. துழந்தும் = துழாவியும்.
அடிசில் = சோறு. விதிர்த்தல் = இறைத்தல்.
பயக்குறை = இன்பமெனும் இன்றியமையாப் பொருள்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்