பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 79 / 102

தினைக் கதிரும் துதிக்கையும்!

அச்சுப் பக்கம் 372–374 · ஸ்கேன் 384386 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 385

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

தினைக் கதிரும் துதிக்கையும்!

பட்டால் நெய்திட்ட எழில் மேனிப் பாவை
எட்டாத உயரப் பரண் ஏறிச் சென்று
தினைப்புனம் காக்கும் செய்தியை அறிந்து
பனைமரத்தோளான் பறந்தானங்கு!

தொட்டால் சுவைக்கும் தும்பைப்பூ மங்கை - இரு
மொட்டால் அவனை உலுக்கியே நின்றாள்!
கவண் எறிந்து அவள் பறவைகள் துரத்திடும் அழகை
கண்கொட்டாது பார்த்தவன் அயர்ந்து நின்றான்!

கயல்விழி அவனைக் கண்டுகொள்ளாமல் - தினைக்
கதிர்களைக் காப்பதில் கருத்தாயிருந்தாள்!
எத்தனையோ எண்ணிவந்தான் தலைவன்
முத்தனையாள் முகம்கொடுத்துப் பேசவில்லை - கரும்புச்
சத்தனைய இதழ் மட்டும் சுவைத்துப் போக
பக்தனைப் போல் வந்து நின்றான்; பயனே இல்லை!

பறவையோட்டும் பெண்ணின் தோழியும் ஆங்கே,
பக்கத்தில் வந்துநின்று பக்குவமாய் அவனிடம்
“உறவை வளர்க்க விரும்பி வருகின்ற தலைவா! ஞாயிறு
மறைவுக்குப்பின் வந்தால் அவளை சந்திக்கலாம்” என்றாள்.
எண்ணியவுடனே அவள் தளிருடல் தழுவிட இயலாமல்
திண்ணியனாம் தலைவன்; தினைக்கதிர் போல் தலைசாய்ந்தான்!

குறிஞ்சிப்பாட்டெழுதிய கபிலர் எனும் கவிஞர்பிரான்
குனிந்திருக்கும் தினைக்கதிருக்கும் ஓர் உவமை சொல்வார்!
நெல்கொள் நெடிய மூங்கில் உச்சிதனை வளைத்து;
நெரித்து அதனைத் தின்பதற்கு முயன்று முடியாத யானை;

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

மேல்நோக்கிய துதிக்கையினை இறக்கித் தனது
பால்போலும் முத்துப்போலும் வெளுத்த தந்தத்தின்மேல்;
தொங்கவிட்டுக் கொண்டிருந்ததுபோல்
தோன்றிற்றாம் சாய்ந்து முற்றிய தினைக்கதிர்! அந்தக்
காட்சியினை நினைவூட்டுவதைப் போலத்தான்
காதல்கொண்ட தலைவன் காதலியைக் கண்டவுடன்;
கட்டித் தழுவிக் கணக்கின்றி முத்தம் கொடுத்தும் பறித்தும்
களிப்பில் மிதக்கவந்து; அது நடவாத கவலையினால் - தினைக்
கதிர்போலத் தலைசாய்ந்தான் என்றும் - அக்கதிரோ;
களிறின் துதிக்கைபோல வளைந்து சாய்ந்ததென்றும்,
கபிலர்பிரான் செய்துள்ள கற்பனையில்தான் என்ன இன்பம்!
காலத்தை வெல்லுகின்ற தமிழுக்கே உரித்தான தனி இன்பம்!

“நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை
முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள் ஒப்பி
ஏற்பட வருதியர் ............”

மூல மேற்கோள்(பத்துப்பாட்டு
(குறிஞ்சிப்பாட்டில் 35 வது வரி முதல் 39 வது முடிய)
பாடியவர் : கபிலர்)

பொருள் விளக்கம் :

நெற்கொள் = நெல்லைத் தன்னிடம் கொண்ட.
நெடுவெதிர் = நீண்டுயர்ந்த மூங்கில். அணந்த = மேல்நோக்கி.
மருப்பு = தந்தம். இறங்கு கை கடுப்ப = இறக்கிப்போட்டு
வளைந்த துதிக்கை. துய் = மென்மை. புனிறுதீர் = பிஞ்சுத்
தன்மை நீங்கிய. குரல் = கதிர். படு = மிகுந்த. புள் = பறவை.
ஒப்பி = ஓட்டி. எல் = ஞாயிறு. பட = மறைய.
வருதியர் = வரக்கூறுதல்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்