பகுதி 78 / 102
பாறையில் உருகுது பசு வெண்ணெய்!
அச்சுப் பக்கம் 368–371 · ஸ்கேன் 380–383 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 381
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
பாறையில் உருகுது பசு வெண்ணெய்!
“அன்புள்ளம் கொண்டவனே! அருமை மிகு நண்பனே!
என்புருக வாடுகின்றேன் நான்” என்று
புன்முறுவல் பூத்தபடி நீ என்னைத்
துன்புறுத்தும் நோய்தன்னை அறியாமல்
இடித்துரைத்து ஏகடியம் புரிகின்றாய்!
வெடித்து மணம் கமழுகின்ற முல்லைப் பூ
அடுக்கி வைத்த பல்வரிசைப் பைந்தொடியால்
துடித்துப் போய்த் துவளுகின்றேன் தோழா”; என்று
தோள் மீது கை போட்டுக் கேலி செய்த
‘தூயன்’ எனும் நண்பனிடம் தொகுத்துரைத்தான்
வாள் கொண்டு வையத்தைக் கலக்குகின்ற
“வணங்காமுடி” யென்ற பெருவீரன்!
“வண்டு முத்தமிடுகின்ற மலர்க்காட்டில்;
வன விலங்கு கூடியாடும் மலைமுகட்டில் -
நண்டுகளும் பிணைந்திருக்கும் கடற்கரையில்
நாலு கை நாலு கால் இடம் மாற்றி நல்லிதழ்த்தேன்
மொண்டு குடிக்கின்ற காதலர்கள் இன்பமாய்க்
கூடுவதும் ஊடுவதும் பின்னர் பிரிவுத் துன்பத்தால்
வாடுவதும் இயற்கை தானே! பிரிந்தபின் கூடி
ஆடுவதும் பாடுவதும் உண்டு தானே! இதற்கேன்
இரும்படிக்கும் உலையருகில் தவிக்கின்ற
எறும்பு போல் இதயத்தை நடுங்க விடுகின்றாய்?
அமைதி பெறு!” என்றுரைத்த நண்பனது கரம்பிடித்து
அருவியினைக் கண்ணில் பொழிந்தவாறு; அவனுரைத்தான்!
“ஆருயிர்த் தோழா கேள்! அவளும் நானும்
அமுதும் தேனும் என்றுரைக்க மாட்டேன்;
அளவுமீறின் அதுவும் தெவிட்டிவிடும் என்பதாலே!
அந்தத் தெவிட்டாத இன்பத்திற்கோர் உவமை
எந்த மொழியில் தேடினும் கிடைக்கா தென்பேன்!...
மரத்திலேறிச் சிறுவன் ஒருவன் கிளையில் தாவி
மாங்கனியைப் பறித்தான் பார்த்தேன்; என்
கரத்தில் தந்த மாங்கனியை; தந்த மரமே
திரும்ப எடுத்துச் சென்றது ஏனோ? ஏங்குகின்றேன்!
[Full-page illustration; no printed body text.]
மானைப் போல் ஒரு சிறுமி குளத்தில் - கெண்டை
மீனைப் பிடித்து ஓடினாள் வீட்டுக்கு; உற்று நோக்கி நின்றேன்
என்னிதழில் சிக்கிய சேல் கெண்டை யிரண்டும்
எனை விடுத்துத் தாமரைக் குளத்தில் பாய்ந்தது ஏனோ?
பதைக்கின்றேன்!”
வருந்தி யழும் வணங்காமுடி வீரனது மனம்
திருந்துவது கடின மென்று உணர்ந்தாலும்
தூயன்; தொடர்ந்துரைத்தான் அறிவுரைகள்!
“மாய மகள் அல்ல அவள் மறைந்துவிட!
மறந்திடாதே; மாயமென ஒன்றுமில்லை!
மனிதகுல மணிவிளக்கு; உன்னை நாடி வரப்போகும்
மனை விளக்கு! மங்கையர் தம் குலவிளக்கு!
உறவினர் தம் ஊருக்குச் சென்றுள்ள செய்தி
உனக்கு அவள் சொல்லி அனுப்பியிருந்தும்
கடலாழத்தில் வீழ்ந்து விட்ட காசு போல்
காணாமற் போயிற்றென்று கதறுவானேன்?
வெட்டுக்கிளிக் கூட்டம் போல் பறந்து வரும்
வேல்களையும் கணைகளையும் களத்தினிலே - கைகளாலே
தட்டிவிடும் வீரமிகு தளபதி நீ இவ்வாறு
பட்டுப்போன மரம் போலப் பயனற்று நிற்பதுவோ?
நன்றல்ல இஃது! கவலை விடுக! புயலினூடே,
நடுக் கடல் படகாக ஆடவிடாதே நெஞ்சத்தை!”
வாஞ்சை மிகு தோழனது ஆறுதல் வார்த்தை மழை;
வண்ண மயிலைப் பிரிந்திருக்கும் வணங்காமுடியின்
காதல் அக்கினி மலையை ஈரமாக்கி அணைக்கவில்லை!
காதல் நெருப்பில் மெழுகாகி உருகலானான்!
குமுறும் அவன் காதல் உள்ளம் படும்பாட்டைக்
குறுந்தொகையில் வெள்ளிவீதியார் எனும் பெண்புலவர்
உவமை யொன்றால் விளக்குகின்றார் - தமிழின்
பெருமை கருதி வியக்கின்றோம் நாம்!
இன்று பிரிந்தவள் நாளை வருவாள் என்று
இடித்துரைத்துத் தேற்றிய நண்பனிடம்
குன்றத் தோளுடையான் கூறிய உவமையை
வென்றிட வேறோர் உவமையும் உளதோ?
“அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனே!
அவ்வுரை என்னுடலை உருகாமல்
தடுத்திடும் தன்மை கொண்டதாயின்
தயங்காமல் ஏற்றிடுவேன்!
அவ்வாறு எனைக் காத்திடும் வலிமை
அவ்வுரைக்கு உளதாயின் நன்றென்பேன்!
கதிரோனின் வெப்பம் தகிக்கும்
கடும்பாறை யொன்றில்
கையில்லாத முடவனும் - பேச
வாயில்லாத ஊமையுமான ஒருவன்
உருகிக் கொண்டிருக்கும் பசு வெண்ணெய்தனைக்
காப்பாற்ற முடியாத நிலையில்
பாறையில் பாழாகும் வெண்ணெயினைப்
பாதுகாக்க வாரீர் எனக் கூவவும் முடியாமல்
பாய்ந்து சென்று எடுத்தேகிப்
பத்திரப்படுத்தவும் இயலாமல்
கண்கொண்டு பார்க்கும் காவலனாக மட்டும்
நின்று கொண்டிருக்கும் பரிதாபத்தைப் போல்
நீயும்; காதல் பிரிவால் உருகிக் கொண்டிருக்கும்
- எனக்கு
நீண்ட அறிவுரைகளை நீட்டி முழக்குகின்றாய்!”
வில்லேருழவன் - வீரர் திலகம் - வணங்காமுடியோன்
விரகதாபத்தால் வெந்திடும் இதயத்தில் இனியும்
வேல் எறிதல் போல் அறிவுரை கூடாதென்றுணர்ந்து
விடை பெற்றுப் போய்விட்டான் தூயன் எனும் தோழன்!
“இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற் றில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே”
மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் : 58
பாடியவர் : வெள்ளிவீதியார்)
பொருள் விளக்கம் :
நுங்குறை = உமது அறிவுரை. ஆகம் = உடல்.
நிறுக்கல் = நிறுத்துதல். வெவ்வறை மருங்கு = வெப்பம் நிறைந்த
பாறை. கையில் ஊமன் = கையில்லாத ஒரு ஊமையன்.
உணங்கல் = உருகியழிதல். நோன்றுகொளல் = பொறுத்துக்
கொள்ளுதல்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்