பகுதி 77 / 102
உச்சிக்குச் சென்ற நொச்சி!
அச்சுப் பக்கம் 365–367 · ஸ்கேன் 377–379 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 378
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
உச்சிக்குச் சென்ற நொச்சி!
உற்றார் உறவினர் பெற்றோர் அறியாமல்
விற்புருவ மங்கையாள் வேல்பிடித்த வீரனுடன்;
பொற்றாமரைக் குளத்தருகே எழிற்பொழிலிடையே;
கற்பாள் களவு இன்பம் களிப்போடு - பின்னர்;
களம் காணச் சென்ற அந்த வீரன் இன்னும் - அக்
காதலியைக் காணத் திரும்பி வரவில்லை என்பதாலே,
கனவு பல கண்டு கண்ணீர் மிகப் பெருக்கிக்கொண்டு
நினைவு சிதறி நிற்கும் நிலைபார்த்து நெஞ்சு நெகிழ்ந்து;
வீணைமொழியாளை வெறிபிடித்து வாட்டுதென்று
வெறியாட்டு நடத்திவைத்து முருகக் கடவுளையே வழிபடுவர்!
அறியாப்பெண் அவள் என்று பெற்றோர்கள்; அவள்மனம்
அறியாத காரணத்தால் வெறியாட்டு நடத்துவதை;
கவிச்சரமாய்த் தொகுத்தளித்த கவிப்பெருமாட்டி
காமக்காணியாரை வெறிபாடிய காமக்காணியார் என
அழைப்பர்!
களம்பட்ட காளையொருவனைப் புகழ்ந்தேத்தி அந்தக்
காமக்காணியார் பாடிய புறப்பாடல் ஒன்றுண்டு!
போருக்குச் சென்ற புலிப்போத்து நிகர் வீரன் - தன்
மாருக்குள் புகுந்த ஈட்டியுடன் மாண்டு கிடந்தான்.
கச்சணிந்து, கவசம்பூண்டு, கட்கமேந்திச் சென்றபோது
நொச்சிமாலைச் சின்னத்தையும் அணிந்து சென்றிருந்தான்.
அமர்க்களத்தில் அடுக்கடுக்காய் வீழ்ந்துள்ள பிணங்கள் தின்ன,
அகன்ற வாய்ப் பருந்துகளும் வட்டமிட்டுச் சூழ்ந்தபோது;
அவன் அணிந்திருந்த நொச்சிமாலை, குருதியில் நனைந்ததாலே;
அதனையும் குடல் என்று கருதிப் பருந்து தூக்கிக்கொண்டு;
ஆகாயத்தில் பறந்திட்ட காட்சியினைக் கண்டபோது;
அஞ்சாநெஞ்சுடை வீரன் அணிந்திட்ட காரணத்தால் அன்றோ
[Full-page illustration; no printed body text.]
துச்சமென உயிரைக் கருதிப் போரில் வீழ்ந்தவனின்
நொச்சி மாலைக்கும் இத்துணை உயர்வு கிடைத்ததென்று;
மெச்சிப் புகழ்ந்து பாடி - அதைப்படிக்கும் நமக்கெல்லாம்;
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வீர உணர்வை
ஊட்டுகின்றார் கவிஞர்! இதனை;
உள்ளத்தில் பதிய வைப்போம்!
உலகறியப் போற்றி நிற்போம்!
“........................................
............................ இனியே
வெருவரு குருதியோடு மயங்கி, உருவு கரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே;”
மூல மேற்கோள்(புறநானூறு - பாடல் - 271
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்)
பொருள் விளக்கம் :
இனியே = இப்பொழுதோ. உருவுகரந்து = உருமாறி.
ஒறு = சிதைந்த. தெரியல் = நொச்சிமாலை.
ஊன்செத்து = ஊனென்று நினைத்து.
உகப்ப = உயரக் கொண்டுபோக.
மலைந்தமாறு = அணிந்திருந்ததால்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்