பகுதி 76 / 102
ஓர் உவமை; இரு காட்சி!
அச்சுப் பக்கம் 361–364 · ஸ்கேன் 373–376 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 375
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
ஓர் உவமை; இரு காட்சி!
தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன்,
தலைவணங்கான் பகைவர்க்கு; தலைதருவான் தமிழுக்கு!
வெற்றிபெற்றுப் போரில் வாகைசூடவில்லையெனில்;
கற்றறிவாளர் மாங்குடிமருதன் தலைமையில் சூழ்ந்த;
புலவர் பெருங்கூட்டம் பாடாதொழிக நான் ஆளுகின்ற
நிலவரையென்றே சூளுரைத்த தமிழ்மகன்; வீரத்திருமகன்!
‘மதுரைக் காஞ்சி’யெனும் தமிழர் மாண்புகூறும் நூலொன்றை
மாங்குடி மருதனார் அவனுக்கென யாத்தளித்தார் என்றால்; அஃது -
எட்டுத்திக்கும் அவன் வெற்றிமுரசுகொட்டி - மீனக்கொடி
கட்டிவாழ்ந்தான் என்ற வரலாற்றின் எடுத்துக்காட்டன்றோ?
புறமுதுகிட்டுப் பகைவரை ஓடச்செய்யும்
போர்க்களம் புகுதலே புகழீட்டித் தருகின்ற வழியென்று;
எப்போதும் வாள்தூக்கி எதிரிகளை மோதிக்கொன்று;
தப்பாது வெற்றிமாலை குவித்துக் கொண்டு;
ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனப் பாண்டி மன்னன்
உயர்ந்து நின்றான் எனினும்; புலவர் பிரான் மருதனார்;
மறத்துறையில் வேந்தன் பொழுதெலாம் கழிப்பதையே மாற்றி,
அறத்துறையில் செயல்கள் பல தொய்வின்றி ஆற்றிட
வேண்டுமென்று;
மதுரைக் காஞ்சியினைப் பாடலுற்றார்; அந்தத் தேன்
மதுரக் காஞ்சியிலே ஓர்உவமை இரு காட்சி ஆடவிட்டார்!
மதம் பிடித்த யானையொன்று கட்டுத்தறியொடித்துக் காலால்
வதம் செய்தே பரிக்கோல்காரனைக் கொன்று; பாகனையும்
வீசியெறிந்து;
கம்பத்தை விடுத்துக் கரிய பாறையொன்று, உருண்டு
கண்மண் தெரியாமல் அனைத்தையுமே அழிப்பதுபோல்
செயல்படுமாம்!
மதயானையின் செய்கைக்கு உவமையாகப் பெரும்புலவர்;
மாங்குடி மருதனார் காட்டுகின்ற மற்றுமொரு காட்சியினை
இங்கு காண்போம்!
‘பனை’யெனும் ஒருவகைப் பெரிய மீனினமும்,
பல்வகைச் சங்கினமும் உலவி, மேயும் கடலினிலே;
மரக்கலமொன்றில் கொடிய சூறைக்காற்று -
திடுக்கெனத் தாக்கி வலிய கயிற்றினை அறுத்து;
பாய்மரம் கிழித்து அதனை அடியுடன் முறித்து;
பலமிகு நங்கூரக் கல்லையும் பெயர்த்து வீழ்த்தித்தனது
பயங்கர மூச்சால் படுநாசம் விளைப்பதுபோல்
பதைத்துக் குதிக்குமாம் பாகனை மீறி யானையின் மதமும்!
சங்கின் ஒலிகள் முன்னும் பின்னும் முழங்கிடும்போது,
பொங்கும் மதத்தால் சுழலும் யானையாய்ச் சீறுமாம், சூறையும்!
ஓர் உவமை இரு காட்சி என ஒப்பிட்டுக் கூறுகின்ற
கற்பனையின் அருமை;
ஓங்குபுகழ் மாங்குடி மருதனாரின் தமிழாய்ந்த திறமைக்கோர்
பெருமை!
“பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரை இ
நெஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பஞ் சினஞ் சிறந்து
கோலார்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது
காழ்சாய்த்துக் கந்து நீத் துழிதருங் கடாஅ யானையும்.....”
மூல மேற்கோள்(பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சி)
(375 முதல் 383 முடிய)
(பாடியவர்: மாங்குடி மருதனார்)
[Full-page illustration; no printed body text.]
பொருள் விளக்கம் :
பனைமீன் = ஒரு வகைப் பெரிய மீன். வளை = சங்கு.
வீங்குபிணி = இறுகிய பிணைப்பு. நோன்கயிறு அரீஇ = வலிய
கயிற்றை அறுத்து. கல்பொருது = நங்கூரக்கல்லுடன் மோதி.
நாவாய் = மரக்கலம். பணிலம் = சங்கு.
கோலோர் = பரிக்கோல்காரன். மேலோர் = யானைப்பாகர்.
வன்றொடர் = காலில் கட்டிய சங்கிலி. காழ் = கட்டுத்தறி.
கந்துநீத்து = கம்பத்தை விட்டகன்று.
உழிதரும் கடாஅ யானை = சுழலும் மதங்கொண்ட யானை.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்