பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 75 / 102

கண்கண்ட சாட்சி உண்டோ?

அச்சுப் பக்கம் 358–360 · ஸ்கேன் 370372 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 371

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

கண்கண்ட சாட்சி உண்டோ?

“மணக்க மணக்க மலருது முல்லை - என்னை
மணந்ததாகச் சொன்னவர் இன்னும் வரவில்லை!
மணற்பரப்பில் செடிகொடி மறைவில் அவரென்மடியில்;
கணப்பொழுதும் அகலாதிரு கண்ணா என; நானவர் பிடியில்!
அணைத்து மகிழ்ந்து அளவிலா அன்பினைப் பொழிந்து; ஈருடல்
இணைத்துக் கிடந்து; இமையென அவரும் விழியென நானும்;
விளக்கிட முடியா இன்ப விருந்தினை அருந்தி;
விந்தைகள் ஆயிரம் புரிந்ததை மறந்து -
வேதனைத் தீயில் எனைக் கருக்கிடும் தலைவன் - இனியும்
சோதனை செய்தல் ஆகுமோ தோழி!

ஓருயிராய் நாங்களாகி உலகத்தை மறந்ததும் பொய்யா?
ஆருயிரே; உனைமணந்தேன் என அவர் உறுதியளித்ததும்
பொய்யா?

“உறுதி வழங்கியமைக்கு உண்டோ சாட்சியம்?
உரைத்திடுக!” என நீ வினவுகின்றாய் தோழி - அங்கே
எனை அணைத்திருந்த அவரேதான் சாட்சி; அவர்
பனை வைரத்தோளில் நான் முகம் பதித்திருந்தபோது;
தினைத்தாள்போல் கால் கொண்ட நாரையொன்று -
தீனியாகக் கிடைக்காதோ ஆரைமீன் என்று;
ஓடுகின்ற நீரை உற்றுப்பார்த்தபடி நின்றதடி!
ஒருக்கால் அது எம்மைப் பார்த்திருந்தால் தவிர;
களவு மணம்புரிந்த மாட்சிக்கு, இல்லையடி;
கண்கண்ட மற்றோர் சாட்சி!”

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

என அழுதாள் தலைவி; தோழியின் கரம்பிடித்து
“என்னுயிரை விரைவில் அழைத்துவா!” எனத்தொழுதாள்.

“யாருமில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.”

மூல மேற்கோள்(குறுந்தொகை : பாடல் : 25
பாடியவர் : கபிலர்)

பொருள் விளக்கம் :

ஒழுகுநீர் = ஓடும்நீர். ஆரல் = ஒருவகை மீன்.
தினைத்தாளன்ன சிறுபசுங் கால = தினையின் அடித் தண்டு
போன்ற சிறிய பசுமையான கால் கொண்ட. குருகு = நாரை.
மணந்த ஞான்றே = களவு மணம் புரிந்தபோது.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்