பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 74 / 102

உறவுடன் இணைந்து உயர்ந்து வாழ்க!

அச்சுப் பக்கம் 355–357 · ஸ்கேன் 367369 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 368

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

உறவுடன் இணைந்து உயர்ந்து வாழ்க!

இயற்பெயர் தெரியாப்புலவர் எண்ணற்றோர் - சங்க
இலக்கியத்தில் செய்யுள் வடிவத்தில் வாழுகின்றார்!
இவர்களில் ஒருவர்க்கு “ஓரேர் உழவர்” எனப்பெயருண்டு!
இனிய காதலியை அடைவதற்குத் தவித்தோடும் தலைவனது;
இதயத்துடிப்பைக் குறுந்தொகைப் பாட்டொன்றில்
இவர் உவமை காட்டிக் கூறும் விதம் மிக அருமை!

நன்செய் புன்செய் நிலம் நல்ல மழைபெய்து நிறைந்த சமயம்
நாலைந்து ஏர்கொண்டு உழுது பயிர்நடுதற்கு இயலாமல்
ஒரேர் மட்டுமே உடையதோர் உழவன், கைப்பிசைந்து
உளம் துடித்துத் துவளுதல்போல்;
சீரார் காதலியை உடன் காண முடியாமல்
சிந்தை கலங்கி நின்றானாம் அத்தலைவன்!
ஒரேர் உழவனை உவமைப்பொருளாக ஆக்கியதால்,
“ஓரேருழவர்” என்றே இப்புலவர் பெயர் பெற்றார்!

உற்றார் உறவினர் பெற்றோர் எனத் தூயதமிழ்
கற்ற புலவருக்குச் சொந்தம் மிகவுண்டு!
நெடுநாளாய் இதயத்தில் ஒரு சுமை; அவரைக்
கடுமையாய் அழுத்தியதால் கவலை கொண்டார்!

“இன்பதுன்பம் மாறி மாறி வருகின்ற

இவ்வாழ்க்கையிலே

என்ன கண்டோம்? எதற்காக இந்த வாழ்வு?
அதோ! தோலையுரித்து மேல் கீழாய்ப் போட்டதுபோல்
அணுவளவு மாற்றமின்றிக் காட்சிதரும் களர்நிலத்தில்
வேடன் கை அம்புக்குச் சிக்காமல் விரைந்தோடி

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed body text.]

வேகமாய் மறைந்து தப்பிவிட்ட தனியொரு
மானைப்பார்த்தால்
நானும் அதுபோலத் தனித்து வாழ்ந்து; வாழ்வின்
நலிவு பொலிவு என இரண்டும் மோதி நசுங்காமல்
தனிமரமாய்ச் சொந்தபந்தமின்றி
விடுவித்துக்கொண்டால்
இனிமையெனும் அமைதி சூழும்! இதயக்கனம் நீங்கும்!”

இவ்வாறு சிந்தித்து முடிவுக்கு வருவதற்குள் - புலவர்
இமையிரண்டும் நீர்துளிர்க்க எண்ணிப்பார்த்தார்;
“எனைநம்பி இருக்கின்றார் சுற்றத்தார் இல்லத்தார் அவரைத்
தனிவிடுத்து நான் மட்டும் தப்பிவிடல் நியாயமல்ல!
காலைப்பிணைத்து நிற்கும் உறவுடைய இக்கூட்டத்தை
நூலைக் கத்தரித்தல் போல் அறுத்துவிடல்
இயலாதென்று
கூடிவாழ்வதே ஏற்புடைய கொள்கை” யெனத் தமிழில்
பாடி மகிழ்ந்தார்; அதனைத் தேடியெடுத்துத்
தொகுத்தோர் வாழ்க; வாழ்கவே!

“அதள் எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 193
பாடியவர் : ஓரேருழவர்)

பொருள் விளக்கம் :

அதள் = தோல். எறிந்தன்ன = மேல் கீழாய்ப் புரட்டி வைத்தது
போல. நெடுவெண் களர் = நெடிய வெளிய களர் நிலம்.
ஆட்டும் புல்வாய் = துரத்தப்படும் கலைமான்.
ஒக்கல் வாழ்க்கை = சுற்றத்தோடு கூடி வாழுதல்.
தட்கும் = பிணைத்துத் தடுக்கும்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்