பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 73 / 102

பரிசப்பணம் வேண்டாம்... பரிசுப்பொருள் இதோ!

அச்சுப் பக்கம் 352–354 · ஸ்கேன் 364366 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 365

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பரிசப்பணம் வேண்டாம்... பரிசுப்பொருள் இதோ!

“முலை விலை” என்று சொன்னால் சற்று முகம் சுளீப்பீர்!
முத்தமிழ் அகராதியில் அதற்குப் “பரிசப்பணம்” என்று

பொருள்!

முல்லை மலர்ப்பெண்ணை மருமகளாய்க் கொள்வதற்கு;
மூத்த தமிழ்க்குடிமக்கள் தருகின்ற தொகையைத்தான் -

பரிசப்பணம் என்பர்!

அக்கால வழக்கில் அதனை “முலைவிலை” எனப் புகன்றார்

எனில்;

இக்காலத் தமிழர்க்கு அது விரசமாய்த் தோன்றுந்தான்!
மணப்பெண் இவள்தான் இவனுக்கென்று உறுதியாகத்

தேர்ந்தவுடன்,

பணமுடிப்புடன் பரிசம் போட்டு மணமகள் வீட்டாரிடம் -

பரிவுடன் வழங்கவேண்டும்!

கலித்தொகையில் முல்லைக்கலியில் ஒரு தகப்பன்; தன்
கட்டழகுப் பூங்கொடியைப் பரிசப் பணமின்றித் தருவதற்குத்
தயார் என்று தோள்தட்டி அறிவிக்கின்றானாம்; அதனைத்
தமிழ்ப்புலவர் சோழன் நல்லுருத்திரனார் என்பார்;
சுவைபடச் சொல்லுவதைப் படிக்கும்போழ்து - பலாச்
சுளையினை வெல்லுகின்ற தித்திப்பை உணர்வோம் நாம்!

குத்திக் குடல் கிழித்துக் கொலை புரியும் கொடிய
கொம்புடைய காளைதனை அடக்குதற்குக் காளையவன்;
எத்தகைய உணர்வோடு ஈடுபட வேண்டுமென
முத்தனைய பெண்ணைப்பெற்ற அத்தந்தை கூறுகின்றான் கேளீர்!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

“கொஞ்சி மகிழும் குமரியின் கொங்கையினை அவள்

காதலன்;

வஞ்சியே என வாரித் தழுவுதல்போல் - சிறிதும்
அஞ்சிடாமல் காளையின் கொம்பிடையே

தாவிடுவானேல்;

அட்டியில்லை அவனுக்கு என்பெண்ணைத் தருவதற்கு!
பரிசப்பணமென்று ஒரு காசு, தூசும் தேவையில்லை;
பரிசாக என்மகளை அடைவதற்கு அவனேதான்

தகுதியாவான்!”

கொம்பிரண்டைக் கண்டு குன்றாமல் குமையாமல்; - காதலியின் இரு
கொங்கையிடைப் பாய்கின்ற இன்ப உணர்வுடனே -
விளைப்பதுதான் வீரமென்பதற்குக்
கல்லின்மேல் செதுக்கியுள்ள சான்றாக இன்றைக்கும்
கலித்தொகையின் முல்லைக்கலிப் பாடல்;
திகழ்கின்ற காட்சியினைக் காணுகின்றோம்! ஒரு தமிழனின்
திண்தோள் பகைவர்முன் சற்றுச் சாய்ந்திடிலோ
மிகமிக
நாணுகின்றோம்!

“விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்........”

மூல மேற்கோள்(கலித்தொகை - (முல்லைக்கலி) பாடல்: 3
பாடியவர்: சோழன் நல்லுருத்திரனார்)

பொருள் விளக்கம் :

கொலையேறு = கொலைவெறிகொண்ட காளைமாடு.
கோடு = கொம்பு.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்