பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 72 / 102

சான்று கூறும் சரித்திர வரிகள்!

அச்சுப் பக்கம் 348–351 visible; scans 358–359 unnumbered · ஸ்கேன் 358363

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

சான்று கூறும் சரித்திர வரிகள்!

ஈராயிரம் ஆண்டின் முன்னே
ஊரார் எல்லாம் ஒன்று கூடி
வழிகாட்டும் குழுக்கள் ஐந்தை
வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்.
முடியாட்சிக் கொடிகட்டிப் பறந்தபோதும்
குடியாட்சி; சிற்றூர் பேரூர்களில்

குடவோலை முறையினாலே - நன்கு
நடைபெற்று, நற்பணி ஆற்றிற்றென்று,
மக்களாட்சி மாண்புதனை - புலவர்
மருதன் இளநாகனார் விரித்துரைக்கும்
அழகுதனைச் சுவைத்திடலாம்;
அகத்துறைப் பாடலிலே!

பிரிவுத் துயர்
பேதையின் புலம்பல்
அலர் தூற்றல்
மடல் ஊர்தல்
பசலை படர்தல்

பரத்தையின் வீடு சென்ற தலைவன்;
பாணனைக் கெஞ்சிக் கேட்டு - தன்
பத்தினியின் சினம் தணிக்கத் தூது விடல்
பாங்கனிடம், காதல் துயர் உரைத்தல்
பாசமிகு தோழியிடம், கண்ட கனா
பாதியிலே கலைந்த கதை கூறிக்
கண்ணீரைக் காதலியர் கடலாய்ப் பெருக்கல்
உண்ணாமல் உறங்காமல் கிடந்துழல்தல்
இரவுக் குறியிடத்து ஏங்கித் தவித்து
இன்னும் வரக்காணேனே என

இடையொடியச் சேவல் வரவுக்காக - அழகுப்
பெடையொன்று தவமிருத்தல்
இவையும் இன்னபிற இன்பத்துப்பால்
வகையும் இணைந்திருக்கும் அகத்துறையில்
இடையிடையே புறக்காட்சியாம் போர்க்காட்சி,
படைவீரர்தம் மனைமாட்சி, பகைவீழ்ச்சி
தலைதூக்கிப் பழந்தமிழர் வரலாற்றுத்
தன்மான முரசொலிக்கும்; தமிழர்
பண்பாட்டைத் தொகுத்தளிக்கும்!

இல்லக்கிளிதனைப் பிரிந்து செல்ல
மெல்ல இதழ் திறந்து விடை கேட்ட ஆளனிடம்
“செல்லாமை உண்டென்றால் எனக்குச் சொல்
அல்லால் நீ சென்றுதான் வருவாய் என்றால்
அப்போது நீ வரும் வேளை யாரிங்கே - உடலில்
ஆவி தாங்கியிருப்பாரோ அவரிடம் சொல்லிச் செல்” என்று
அழுதழுது வீங்கிவிட்ட அவள் இமை இரண்டைத்
தடையரணாய்க் கருதித் தத்தளித்துத் தயங்கிச் சோர்ந்து
தையல்தனைப் பிரிந்து பொருளீட்டச் செல்லாமல் நின்றுவிட்ட
தனவணிகர் குடும்பத்துச் செல்வனொருவன்;
தான் கடந்து செலஇருந்த தடங் குறித்துத்
தனக்குள்ளே எண்ணிப் பார்த்த காட்சிதனைத்
தமிழாளும் புலவர்ஏறு மருதன் இளநாகனார்;
தாயகத்துப் பழைய வரலாற்றுப் பொன்னேடாய்த்
தருகின்றார்!

பாவைதனைப் பிரிந்து பொருளீட்ட - அவன்
பயணம் நடத்திட வேண்டிய வழியோ பெரும் பாலையாம்!
இடியுமிழ்ந்து வானம் ஆங்கே - ஒரு
துளி மழையும் வழங்காததாலே
குடி பெயர்ந்து மக்கள், கும்பியை நிரப்புதற்கு
கும்பல் கும்பலாய் ஓடிவிட;
கொதிக்கின்ற சுடுநிலத்தில் - வீரம்
கொப்பளிக்கும் படுகளத்தில்
பகைநாட்டுப் படையிரண்டு மோதிக்கொண்டு
தொகை தொகையாய் வீரர் பிணம் சிதறிக் கிடக்கும்.
அவர்தம் கச்சையினை விலக்கிக் கழுகும் பருந்தும்
அவற்றின் இச்சையெலாம் தீர வயிறுகளைக் கொத்தி
குடலை உருவியெடுத்துத் தம் குடலுக்கு இரையாக்கிக்
கொள்கின்ற கொடுமையினைப் பார்க்கும்போழ்து
உருவி எடுக்கின்ற வீரர் குடலுக்கு உவமையாக

ஊராட்சிக் குழு தேர்வுதனைப் புலவர்பிரான்
ஒப்பிட்டு உரைப்பதுதான் என்னே பொருத்தம்!
உலகிற்குத் தமிழர் நாட்டுப் பழஞ்சேதியொன்றை - இந்த
உவமையினால் விளக்கும் நேர்த்தி அருமையினும்
அருமையன்றோ!

ஊர்மக்கள் பொது மன்றில் ஒரு சேரக் கூடி நின்று
யார் யார் குழுவுக்கு உறுப்பினராய் வேண்டுமென்று
கயிறு கட்டிய குடமொன்றில் - தத்தம்
கருத்துக்களை ஓலைகளில் எழுதி வாக்களித்து,
முத்திரையிட்ட குடங்களையே, நடுவர் - மிகப்
பத்திரமாக வைத்திடுவர்; பின்னர்
ஆவணக் களரியர் எனும் அலுவலர் வந்து
அகற்றிடுவர் முத்திரையை - அதன்பின்
ஒவ்வோர் ஓலையாய்க் குடமிருந்து இழுத்து;
உறுப்பினர் தேர்வில் வென்றோர் யாரென
ஊரார் மத்தியில் எண்ணி அறிவிப்பர் - அக்குழு
ஊர்நலம் பேணிடப் பல உரிமைகள் கொண்டதுவாம்!

மருதன் இளநாகனார் இந்த மாண்புறு மரபினைத்தான்
மன்பதையின் எதிர்காலத் தலைமுறையார் உணர்வதற்கு,
சான்று கூறும் சரித்திர வரிகளாகத்
தோன்றுமாறு படைத்திட்டார்; சங்க இலக்கியத்தில்!

கழுகும் பருந்தும் களத்தில் மாண்ட
காளையின் உடலில் குடலை உருவுதல்;
கடமையாற்றும் ஊர்நலக் குழுவுக்குக்
குடத்தில் இட்ட வாக்குச்சீட்டாம் பனை ஓலைகளை,
கையை நுழைத்து உருவி எடுப்பது போல்
கண்முன் தெரிவதாய்க் கவிஞர் உரைக்கின்றார்!

அகப்பாட்டு ஒன்றுதான் எனினும் - இதில்
அகப்பட்ட செய்திதான், எத்தனை! எத்தனை!
கயல்விழியாள் கண்ணீரை நினைத்துப் பார்த்துக் கணவன்,
அயலூர் செல்வதையே நிறுத்திவிட்ட காதல் செய்தி!
விரோதிகளை வீழ்த்துகின்ற சேரமானின் தளபதியாம்
விரும்பிக் கள் பருகும் வீரனாம் “பிட்டன்” என்பானின்
வேல்முனைபோல் என் விலா நோகச் செய்யும் - இவள்
விழிநீர் என்று வேதனையைக் கொட்டுகின்ற
வணிக இளைஞன் வாய்மொழி கொண்டே
அணிகலன் தமிழர்க்கு வீரமே என விளக்கும் அடுத்தொரு
செய்தி!

குறிஞ்சி முல்லையெனும் நிலங்களின் பகுதியே
திரிந்து பாலையாகும் மழையின்றி எனப் பிறிதோர் செய்தி!
பறவைகட்கு இரையாக உடல் அளித்துச் சாக நேரினும்;
பகை எதிர்க்கும் மானமொன்றே மறக்குல மகிமை எனப்
பறைசாற்றும் மற்றோர் செய்தி!

மன்னர்களின் ஆட்சியிலும் சிற்றூர் பேரூர் எலாம்
மக்களாட்சித் தத்துவத்தின் தொட்டிலாகத் திகழ்ந்ததென்று
மாத்தமிழர் பழங்காலப் பெருமை கூறி - நம்
மரபுவழிச் சிறப்புதனைச் சொல்லுவதோ; அனைத்தையும்
வெல்லுகின்ற அதி அற்புதச் செய்தி!

இத்தனைச் செய்தியுடன் இப்பாடல் தரும்
புத்தொளியால் பொங்குகின்ற பூரிப்புக்கோர் அளவுமுண்டோ?
நம்
இலக்கியச் செல்வத்துக்கோர் நிகராக நிற்பதற்கு
இவ்வுலகில் இனியுமோர் மொழிக்கு ஆற்றல்தான்
வாய்ப்பதுண்டோ?

“..........................
..........................
இடிஉமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவணமாக்களின்
உயிர் திறம் பெயர, நல்அமர்க் கடந்த,
தறுக ணாளர் குடந்தரீஇத் தெறுவரச்
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல்அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு நீழல்
எல்வளி அலைக்கும் இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக்கை
ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போன
அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே!”

மூல மேற்கோள்(அகநானூறு : பாடல் 77
பாடியவர் : மருதன் இளநாகனார்)

பொருள் விளக்கம் :

சுட்டுடை முதுபாழ் = சுட்டிக்காட்டக்கூடிய பழைய
பாழ்நிலமான பாலை நிலம். கயிறு பிணிக் குழிசி = கயிற்றால்
பிணிக்கப்பட்ட குடம். பொறி = முத்திரை.
ஆவணமாக்கள் = ஆவணக் களரியர் எனும் அலுவலர்.
செஞ்செவி எருவை = சிறந்த செவிகளையுடைய கழுகு.
குடந்தரீஇ இகுக்கும் = குடலை உருவி இழுக்கும்.
கல் அதர் கவலை = கற்கள் நிறைந்த வழிப்பாதை.
இத்திப் புகர்படு நீழல் = இத்தி மரத்தின் புள்ளிகள் பொருந்திய
நிழல். வானவன் மறவன் = சேர மன்னன் தளபதி.
ஆனா நறவு = கெடாதகள். எஃகம் = வேல்.
பனிவார்கண் = நீர் பொழியும் விழி.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்