பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 71 / 102

பொய்யாகிப் போகாதோ?

அச்சுப் பக்கம் 343–345 · ஸ்கேன் 355357 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 356

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

பொய்யாகிப் போகாதோ?

வெற்றிகளை விளைத்திட்ட வேளிர் குலத் தலைவனவன்
பற்றுக்கொண்ட பாவலர்க்குப் பரிசில்களை வழங்கிடுவோன்
“எவ்வி” யெனும் பெயர்படைத்து எத்திக்கும்
ஏற்றிப் போற்றுகின்ற புகழ் பெற்றான்!

கவ்வி உலகுதனைக் கறுப்பாக்கும் இரவின்
கடுமை குறைந்து காலையிளம் பொழுது தொடங்குகின்ற
வேளையிலே ஒருசெய்தி விடுபட்ட கணைபோல வந்து
“வெள்ளெருக்கிலையார்” எனும் வித்தகப்புலவர் செவிதனில்

புகுந்ததம்மா!

என்ன செய்தியது? என்ன செய்தியது? நீடூர் ஆண்ட
மன்னவனாம் “எவ்வி” மாண்டனன் போர்முனையில் என்ற,
பொல்லாச் செய்தியது! பொல்லாச் செய்தியது! “அது
பொய்யாகிப் போதல் கூடாதோ” எனப் புலம்புகின்ற
புலவர் பிரான்; அந்தப் பொய்யும் எப்படிப்
பொய்யாகப் போகவேண்டுமென்கின்றார்; புரிகிறதா?

களிறுகளைக் கவிஞர்கட்குப் பரிசாகத் தருகின்ற
களமஞ்சா மாவீரன் “அகுதி” யென ஒருவனிருந்தான்.
ஒருவருமே அவனை வெல்ல உலகில் பிறக்கவில்லையென்றும் -

போர்க்

கருவியொன்று அவன் வசத்தே உண்டென்றும் - அதனைப்
“பொன்புனைதிகிரி” யெனப் புகல்வர் என்றும்;
பொருதிட வருவோர் எவரும் அதன்முன் புறமுதுகிடுவர்
என்றும்;
எங்கணும் ஒரு பேச்சு இருந்திட்ட காரணத்தால்
சிங்கமும்; சுண்டெலிபோல் அடங்கிற்றாம் அவன் பேர் கேட்டு!

அவனைப் பகைப்பதற்குத் தயங்கிக்கொண்டு அயலார்
அஞ்சி நடுங்கியிருந்த காலமும் மாறி; “அமர்க்களத்தில்,

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

அரிமாவாம் அகுதியெனும் படைத்தலைவன் போரிட்டு
அழிந்துபட்டான்” என்ற உண்மை தெரிந்தவுடன்;
“பொற்றிகிரி”யென்ற பொன்னாலான சக்கரப்படைக்கருவி

பற்றி

புனைந்திட்ட கருத்தெல்லாம் பொய்யாகப் போயிற்றென்பார்!
அப்பொய்போல ஆகிவிடக் கூடாதோ - “எமது
அன்புக்குரியோன் எவ்வி; புண்பட்டுப் போரில் மாண்டான்”
என்ற செய்தி எனப் புலம்பிக்கேட்டு புலவர் ஏறு;
கன்றொன்று பசுவிழந்த நிலைபெற்றுக் கலங்கி நின்றார்!

“பொய்யாகியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதை கண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யாகியரோ!
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர் அடுதானை, எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என
வைகுறு விடியல், இயம்பிய குரலே.”

மூல மேற்கோள்(புறநானூறு பாடல் - 233
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்)

பொருள் விளக்கம் :

இரும்பாண் ஒக்கல் தலைவன் = பெரும்பாணர்கள் சுற்றத்திற்குத்
தலைவன். எஃகுறு = வேல் தைத்த. வைகுறு = விடியற்காலை.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்