பகுதி 70 / 102
மாமழை கண்ட மகிழ்ச்சி!
அச்சுப் பக்கம் 340–342 · ஸ்கேன் 352–354 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 353
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
மாமழை கண்ட மகிழ்ச்சி!
இளைப்பாறச் சிறுநிழலின்றி ஏங்கித்தவித்த தவளையொன்று
எடுப்பாகப் படமெடுத்து வெயில் தாங்காமல் வாலூன்றி -
நின்றிருந்த
பாம்பின் நிழலுக்குக் கீழே; அது தன் பகையின் நிழலென்றே
அறியாமல்;
பதுங்கிக்கொண்டு மூச்சுவிட்ட பயங்கரக் கோடையென;
வடமொழிப்புலவன் காளிதாசன் வர்ணித்தானே - அத்தகு
வறட்சிப்புயலின் கொடுமை வீசிய கோடையது!
இன்நிழல் இல்லாது வருந்திய தன் பெண்மானுக்குத்
தன்நிழலையே தந்து, தான் மட்டும் வெயிலில் நின்றது -
ஆண்மான் என;
கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில் பெருங்கடுங்கோ;
கடும் பாலை வெப்பத்தைப் பாடினானே அந்தக் கோடையது!
ஆடிக்களித்த கண்ணாளனின் பிரிவுத்துயரால்; கண்மணியாள்
வாடி வடித்த கண்ணீரும் வற்றிப்போய் விழியிரண்டும் -
வறண்டதுபோல்;
கூடிக்குவிந்து முகில் கொட்டுகின்ற மழையின்றிக் காய்ந்து;
குன்றம்போல் உயர்ந்த கரைகொண்ட குளங்கள் எல்லாம்
வெறுந்தரையாகும்!
தேடிவந்து இரைதேடி மகிழ்ந்திருந்த பறவையினம்; -
இனிவேறிடத்தை
நாடிச் சிறகடித்துப் பறப்பதுதான் நலமாம் என்று;
திட்டமிட்டுப் புறப்பட்டுத் திசைமாறிச் சுழன்று,
வட்டமிட்டு வளமுள்ள குளமெங்கே என்றலையும்!
நீர்தேங்கிக் கழனிமண்ணும் பண்படாத காரணத்தால்
ஏர்தூங்கும்; உழுவதற்கும் பயிரிடுவதற்கும் பயன்படாமல்!
பார் முழுதும் பஞ்சமோபஞ்சம் என்ற சொல்,
கூர் அம்பாக நெஞ்சில் குத்துகின்ற வேளையிலே;
[Full-page illustration; no printed literary text.]
வானம், திடுமெனக் கறுத்து, வந்தது மழையெனில்;
வந்த மழையும் வானமே கிழிந்தது போல் பொழிந்ததெனில்;
வயல் காய்ந்த காரணத்தால் வாடிய உழவனுக்கும்,
வளம் அழிந்த காரணத்தால் வருந்தியழுத மக்களுக்கும்;
கயல் துள்ளும் இனிமேலே குளங்களிலே என்று
களிப்புற்றுக் குடமெடுத்து நீர் எடுக்கப் போகின்ற மகளிருக்கும்;
எத்துணை மகிழ்ச்சி ஏற்படுமோ என் தலைவி;
அத்துணை மகிழ்ச்சியுனக்கு ஏற்படப் போகுதென்றாள் தோழி!
“ஏனடி?” என்று ஏந்திழை தோழியின் தவடையைத்
தடவினாள்!
“தேனடி நான் சொல்லப்போகும் சேதி உனக்கு;
கேளடி தலைவி; உனை மணக்கத் தலைவன்; ஏறிய
தேரடி அதோ விரைந்து வருகின்ற” தென்றாள்!
“........
நாடு வறம்கூர, நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைதுஅறு காலை
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இவ்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம் வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்றே - சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே!”
மூல மேற்கோள்(அகநானூறு - பாடல் - 42 (களிற்றியானை நிரை)
பாடியவர்: கபிலர்)
பொருள் விளக்கம் :
வறம் = பஞ்சம். நாஞ்சில் = ஏர்கலப்பை.
பைது = பசுமைமிகு வளம். கோட்டம் = குளம்.
சேக்கல் = தங்குதல். வீசி = உதவிபுரிந்து.
வந்தமாறு = மணம்புரிய வருகின்றார்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்