பகுதி 69 / 102
புதுப் பாட்டுப் புலவன்!
அச்சுப் பக்கம் 335–339 · ஸ்கேன் 347–351 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 349
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
புதுப் பாட்டுப் புலவன்!
சொத்து சுகம் வாழ்வுச் சுவையனைத்தும் தமக்கென்று
சொல்வார்தமைச் சுயநலத்துப் பெருச்சாளியென்று
கத்து கடல் போல முழங்குகின்ற பாட்டாளி வர்க்கத்தார்;
களம் அமைத்து வளமனைத்தும் பொதுவென நிலைநாட்டக்
கண்களிலே கனல் வழியக் கயமைதனைச் சுட்டெரித்துக்
கரங்களிலே கொடிபிடித்துப் போர்முரசம் கொட்டுகின்றார் - அந்தக்
குமுறும் எரிமலை மனிதரைக் கண்டு குளிருதடா நெஞ்சம்;
குறுநகை உதட்டில் மின்ன திரும்பிப் பார்க்கின்றேன்
கொஞ்சம்!
அடடா!
வியக்கின்றேன்; மெய்சிலிர்க்கின்றேன்,
விழிவிரித்துப் புறநானூற்று இலக்கியத்தைப்
படிக்கின்றேன்; பழைய நாள் தமிழகத்தில் நமைப்போலத்
துடிக்கின்ற உளத்தோடு ஒரு புலவர்;
தனியுடைமையாளர்களின் ஆதிக்கம் தகர்ப்பதற்கும்
இனியொரு வாழ்வு தமக்குண்டோ என்றேங்கி;
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து வீழ்ந்து போகின்ற
தரித்திரர்கள் கூட்டத்தின் கொடும் வறுமைச்
சரித்திரத்தை மாற்றி அமைப்பதற்கும்;
சங்கப் பாடலொன்றைத் தந்துள்ளார்!
பக்குடுக்கை நன்கணியார் என்பது அவர் பெயராம் -
பையொன்றை உடையாகப் பகுத்துடுத்தார் என்பதாலே
பாராட்டிப் போற்றிப் பலரும் தந்த அடைமொழிதான்
“பக்குடுக்கை” யெனப் பகன்றிடுவர் சான்றோர்!
பையாம் அந்த உடுக்கையினையும்; அவர்
பாங்குடனே நன்கு அணியார் என்ற காரணத்தால்,
பக்குடுக்கை நன்கணியார் என்று
பார்த்தவர்கள் பட்டம் சூட்டியிருக்கவும் கூடும்!
எளிய உடை, எளிய தோற்றம், எளிய வாழ்வு:- இவற்றுடனே,
ஏற்றத் தாழ்வற்ற நிலை இந்த மானிட சாதியிலே
என்றைக்கு மலருமென்ற கவலையுடன் - அவர்
அன்றைக்கே பாடிவைத்தார் என்பதுதான் பெருஞ்சிறப்பு!
மணமுழவு ஒலித்தது கேட்டார் ஒரு மனையில்;
மற்றோர் இல்லில் மரணப்பறை ஓசையையும் கேட்டுவிட்டு,
மனமொடிந்தார்!
மண்மீது வாழ்வதும் சாவதும்
மனிதர்க்கு இயல்புதான் எனினும்;
இவர்கண்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும்
இருவேறு காரணங்கள் இருப்பதுணர்ந்தார்!
மணமுரசம் செவிபிளக்க
மா, பலா, வாழையெல்லாம்
மங்கல விழாப் பந்தலிலே நிறைந்திருக்க
மணித்தேரில் மணமக்கள் பவனிவர
மலைபோலப் புலால் உணவும் மதுக்குடமும்
மாடமாளிகையில் விருந்தினர்க்கு எதிர் இருக்க
எலும்பும் தோலுமன்றி எள்ளளவு சதையுமிலா
ஏழையர்கள் கூட்டமொன்று வீதியிலே
எச்சில் இலைகள் எல்லாம் மிச்சம் மீதியுடன்
எப்போது வெளியில் வந்து விழுமென்று
பசிக்களைப்பால் மெய் சோர்ந்து பாதிக் கண்மூடி தவமிருக்கும்
காட்சிதனைப்
பார்க்கின்றார், பக்குடுக்கை நன்கணியார்!
பனித்துளிகள் அவர் விழிப் பூவில் எட்டிப் பார்க்க
பக்கத்தில் மற்றோர் பரிதாபக்கதை நடந்ததையும் கேள்வியுற்று
அங்கு சென்றார்!
பாவையொருத்தி; பொற்சிலைபோல் அழகுடைய பூங்கொடியாள்
சாவை அழைப்பதல்லால் வேறு வழியின்றித் தன் சரித்திரத்தை
முடித்துக் கொண்டாள்!
இளமையிற் கொண்ட காதல் இனிது நிறைவேறாமல் அவளின்
வறுமை நிலை வெறுத்துவிட்டுப் பெண் வேண்டாமென மணமகனைப்
பெற்றவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பதாலே;
குற்றமிலாக் குலவிளக்கு, கொடுஞ்சாவின் மடிதனிலே வீழ்ந்து
விட்டாள்!
பூக்காட்டுப் பைங்கிளியின் வீட்டோரம்; புலவர்பிரான்
சாக்காட்டுப் பறைகேட்டுப் புலம்பிவிட்டார்; அந்தப்
புலம்பல்தான் புரட்சிக் கருத்தாக வெளிப்பட்டு
புறநானூற்றுப் பாடலாக புத்தொளி காட்டுதிங்கே!
[Full-page illustration; no printed literary text.]
மலரணி பூண்டு மகிழ்ந்து புணர்ந்திடும் காதலர் ஒருபுறம்;
மலைவீழ் அருவிக்கண்ணீர் உகுத்து மாண்டு மடிந்திடும் மகளிர்
ஒருபுறம் -
இன்ப வாழ்வனைத்தும் ஒரு சாரார்க்கென்றும்
துன்பம் ஒரு பிரிவினர்க்குத் தொடர் நிழல் என்றும் - மனிதப்
பண்பிலாதவர்கள் படைத்த இலக்கணம்; இந்த
மண்ணுலகில் பெருங் கொடுமையன்றோ?
இதனை மாற்றியமைத்து இவ்வுலகைப் பொதுவாக்கி
எல்லார்க்கும் எல்லாமென்ற குறிக்கோள் எய்திடவே
இனிய பணிகள் இன்றே தொடங்கிட
எழுக நல்லோர்; என்றார் புலவர்!
நாம் நல்லோராயின் நன்கணியார் முன்னே
“ஆம்” என்றுரைத்து அவர் சொல்லைச் செயலாக்கிடுவோம்!
நாடு சிறக்க இந்த நானிலம் சிறக்கத் தனியுடைமையெனும்
கேடு களைவோம்; மேடு பள்ளமில்லா மேதினி சமைப்போம்!
“ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ்வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் 194
பாடியவர் : பக்குடுக்கை நன்கணியார்)
பொருள் விளக்கம் :
பக்கு = பை. நெய்தல் = சாக்காட்டுப்பறை.
கறங்க = ஒலிக்க. ஈர்ந்தண் முழவு = இனிய ஒலியுடைய முரசம்.
பாணி = ஒலி. பைதல் உண்கண் = துன்பத்தை வெளிப்படுத்தும்
மையெழுதிய கண். பனிவார்பு உறைப்ப = நீர் பொழிந்து
விளங்க.
குறிப்பு :
இப்புறநானூறுப் பாடலுக்கு விளக்கவுரை எழுதிய
அறிஞர் பெருமகனார் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் பின்
வருமாறு குறிப்பிடுகிறார்:
“பக்குடுக்கை நன்கணியார் காலத்தே நாட்டில் வாழ்ந்த
வேந்தர்கட்கும் ஏனைச் செல்வர்கட்கும் உலக வாழ்வில் பெரு
விருப்பந் தோன்றி, ‘மெய்வலி யுடையார்க்கே இவ்வுலகம்
உரியது; உலகத்திற் பிறந்தாரனைவர்க்கும் பொதுவென்பது
பொருந்தாது’ என்றும், ‘அவ்வலியைக் கெடாது பேணிக்
கொள்ளற்குச் செல்வம் இன்றியமையாமையின், செல்வந்
தேடுவது வலிவுடையார்க்கேற்ப’ தென்றும் கருதி, அவற்றிற்
கேற்ப நாளும் போரும் பொருளீட்டமுமே நினைந்தொழுகப்
பண்ணிற்று. இதன் விளைவாக நாட்டில் இன்ப வாழ்வுக்
கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை
நன்கணியார். ‘இவ்வுலகம் இனிதன்று; ஒரு மனையில் சாப்
பறை முழங்க, ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது.
ஒருத்தி பூவணியாமற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப்
பிரிந்து கண்கலங்கி நிற்கிறாள். இவ்வாறமையுமாறு இவ்வுல
கினைப் படைத்தவன் பண்பு அறிந்தொழுகும் பாடில்லாத
வனேயாவான். இவ்வுலகின் இத்தன்மையை அறிந்தவன் இத
னிடையே கிடந்து உழல வேண்டுமென்பதன்று. இதனிற்
சிறந்த இன்ப உலகத்து இன்ப வாழ்வு காண்டலை வேண்டி
யவனாவான் என இப்பாட்டால் வற்புறுத்தலானார்.”
❀
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்