பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 68 / 102

சென்று வா மகனே; செருமுனை நோக்கி!

அச்சுப் பக்கம் 330–334 · ஸ்கேன் 342346 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 343

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

சென்று வா மகனே; செருமுனை நோக்கி!

காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில்
களம் அமைத்துச் சேர சோழ பாண்டி மன்னர்
கோபுரத்துக் கலசத்தில்
யார் கொடிதான் பறப்பதென்று,
போர்தொடுத்துக் கொண்டிருந்த காலமது!

அந்நாளில் ஓர் களத்தில்,
தாய்நாடு காக்கத் தாவிப் பாய்ந்து செத்தார்
தந்தை என்ற சேதிகேட்டுத்
தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்துக் கிளியொருத்தி!
அனல் போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த
அவள் கணவனும் வந்திட்டான்!
புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்!

“தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய்” என்றான்.
“இல்லை அன்பே!
முல்லைசூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால்,
நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனித்
தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்;
அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததத்தான்” என்றாள்.

அவன்,
குகைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென,
பகைவிட்டுக் கிளம்பும் எரிமலையென,
பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்;
சூளுரைத்தான்; சுடர்முகம் தூக்கினான்;
“சுக்குநூறுதான் சூழ்ந்துவரும், பகை!” என்றான்,
“நாடு மீட்காமல், வீடு திரும்பேன்” என்றான்!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

நங்கையோ,
நகைமுழக்கம் செய்து “நடந்திடுக கண்ணே” என்றாள்!
“திரும்பி வருவேனோ இல்லையோ
எதற்கும் இப்போது ஒரு முத்தம்
இந்தா - திரும்பு” என்றான்!
கொடுத்தான் - பின் தொடுத்தான்
பகைவர் மீது பாணம்!
போர்! போர்! போர்! என
முழங்கிற்று முரச ஒலி!

பார்! பார்! பார்; அந்தப் பைங்கிளியின்
உரிமையாளன் - பகைவர் மீது பாய்ந்து
கொல்லும் வீரம் பார்! என்று
பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக்
கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள்,
களத்தினிலே அத்தானுக்கு
அடுக்கடுக்காய்க் குவிந்து வரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு!

கோட்டைகள் விடுபட்டன! எதிரியின் குதிரைக்கால்கள் உடைபட்டன!
வேழப்படை முறிபட்டது! வேல்கள் பொடிபட்டன!
எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை
கோடையிடியெனக் கேட்குது! கேட்குது! எனக்
குதித்திட்டாள் - புதுப்பண் அமைத்திட்டாள்!

வீரர்கள் வந்தனர் - வெற்றி உன் கணவனுக்கே என்றனர்!
வேந்தனின் தூதுவர் வந்தனர்! வாழ்த்துக்கள் வழங்கினார்!
வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர் - வெற்றி
நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி,
ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள் - அப்போது,
ஏனந்த மனிதன் வந்தானோ?
இழவுச் சேதி சொல்வதற்கு! -
“என்னருமைப் பெண்பாவாய்!
கண்ணல்ல - கலங்காதே!
களச்சேதி, கடைசிச் சேதி கேள்” என்றான் -
அந்தோ!
மாவிலைத் தோரணங்கட்டி, மணவிழா மேடைதன்னில்
வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்
மார்பிலே வேல்தாங்கி நல்ல

சாவிலே வீழ்ந்துவிட்டான் -
ஆவிதான் போனபின்னும் உயிர்வாழும் ஆரணங்கு
அச்சடித்த தமிழ்ப்பதுமை -
கூவி அழுதாள் - கொத்தான மலர்
இந்தக் குடும்பம்!
அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட
கொடும்சாவைப் பழித்தாள் - இழித்துரைத்தாள்!
இனி என்ன மிச்சம்! என்றும்,
கனி அழுகிப் போனதென்றும்
கதறி அழுதாள்!

பனிவெல்லும் விழிகாட்டி,
பனைவெல்ல மொழி உரைத்து,
பள்ளியறைக் கவிபாடும் நாளெல்லாம்
மண்தானோ? இனிஇது தூங்காத
கண்தானோ? என அழுதாள்! அத்தான் பிணம்
கிடக்கும் களம்நோக்கித் தொழுதாள்!

சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள்காதில், வெற்றி
வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம்
பட்டதுதான் தாமதம்!
“கெட்டதுதான் கெட்டது என்குடி - முழுவதுமே
பட்டொழிந்து போகட்டும்” என எழுந்தாள்!
“மட்டில்லாப் புகழ்கொண்ட நாட்டுக்கே அன்றி
வீட்டுக்கோ வாழ்வேன்” என்றாள்
வட்டிலினால் நாழி பார்க்கும் விதங்கண்ட தமிழ்நாட்டு மாதரசு,
தொட்டிலிலே இட்டுத் தான் வளர்த்த தூயசெல்வன்
அட்டியின்றிக் கல்விகற்க, ஆலமரத்தடி
ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்!

அங்கு சென்றாள். “அம்மா” எனப் பாய்ந்தான்,
அழகுமிழும் மழலைமொழி அன்புத் தங்கம்!
“அப்பா, தாத்தா, ஊர் திரும்பினாரோ?” என்றான்
“திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார்
கரும்பே - நீயும் வா” என்றழைத்தாள்.
“என்ன வாங்கி வந்தார்?” என்றான்!
“மானம்! மானம்! அழியாத மானம்” என்றாள் -
“மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக!” என்றாள்
வந்துவிட்டான் - குலக்கொழுந்து!
குடும்ப விளக்கு எரிந்து கொண்டே, கூறுகின்றாள்

“எதிரிகளின் படையெடுப்பால் - நம் குடும்பம் தழை
உதிர்த்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ!
கவலையில்லை -
களம் சென்றார்; மாண்டார்!
ஆனாலும் இந்த,
நிலம் உள்ளவரையில் ‘மானங்காத்தார்’ என்ற பெயர்பூண்டார்!
என் மகனே! நீயும் தோளில்
பலம் உள்ளவரையில் பகையைச் சாடு!
பரணி பாடு! இது உன்
தாய்த் திருநாடு! - உடனே ஓடு!” எனத்,
தாவி அணைத்துத் தளிர்மகன் தன்னைச்
சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக்
காவிபடிந்த வாள்கொடுத்துச்
“சென்று வா மகனே, செருமுனை நோக்கி!”
என வாழ்த்திவிட்ட திருவிடத்துக்
காட்சிதனைப் - போற்றிப் பாடாதார் உண்டோ!
திருமகளே! இந்தப் பூவுலகில்? ......

“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
முதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்ஐ
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்தும் வெளிதுவிரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 279
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்)

பொருள் விளக்கம் :

தன்ஐ = தந்தை. நெல் உற்ற செரு = நேற்று நடந்த போர்.
வெளிதுவிரித்து = வெள்ளாடை அணிவித்து.
பாறுமயிர் = பரட்டை முடி.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்