பகுதி 67 / 102
தமிழ் நெஞ்சங்கள் போற்றிய தலையாலங்கானத்தான்!
அச்சுப் பக்கம் 326–329 · ஸ்கேன் 338–341 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 339
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
தமிழ் நெஞ்சங்கள் போற்றிய தலையாலங்கானத்தான்!
சேரனும், சோழனும், எழினியும், திதியனும்
இருங்கோ வேண்மான் எனும் ஐவருடன்
பொருநனும், மற்றும் எருமையூரனும் இணைந்த
போர்முனையில் எழுவர்படையை மோதிடவே,
இளங்காளை நெடுஞ்செழியன் புறப்பட்டான்
களங்கண்டான், வென்றிட்டான் என்றும் - பகைவர்
முரசு கவர்ந்து முடித்திட்ட சூளுரையால்
அரசர்க்கரசனாய் ஆனான் என்றும்,
அகமகிழ்ந்து கூறுகின்ற செய்தி ஒன்றை
அகநானூறில் பாடுகின்றார் அரும்புலவர் நக்கீரர்!
“கதிரவனும் நிலவும் சேர்ந்து மண்மீது வீழ்ந்தாற்போல்
களம் பட்டார் சேர சோழ மாமன்னர்” என்று
புலவர் கல்லாடனார், புறப்பாடல் ஒன்றின் மூலம்
பலமிக்க பாண்டிய இளவல்தனைப் போற்றுகின்றார்!
“ஒருவரோடு ஒருவர் போரிடுதலும் - அந்த
இருவரில் ஒருவர் வீழ்தலும் இயற்கை!
எழுவரை ஒருவன் மடக்கி அடக்கிடப்
பழுதறப் போர்புரிந்தான் என்பதும்
எழுவரும் தோற்றார்
இவன் ஒருவனே வென்றான் என்பதும்
இவ்வுலகிலோர் புதுமை என்பேன்” என்று,
இடைக்குன்றூர்க்கிழார் எனும் புலவர்,
எழுத்தில் வடித்தார் பாண்டிய இளவலின் வெற்றியை!
தமிழ் மன்னர்களே தங்களுக்குள் முட்டி மோதியதைத்
தாங்கொணாக் கவலையுடன் குடபுலவியனார் எனும் புலவர்,
“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்” என்றார்!
தடந்தோள் பாண்டியனே இறுதியில் வென்றான் - எனவே
தழுவிடத் துடித்தார் அவனை உடனே!
வேட்டுவர்கள் புலி பிடிக்கும் பொறியைப் போல்
விரிந்து பரந்த செழியனின் வீர மார்பை
விரைந்து சென்று தழுவிட விரும்புகின்றேன் என
[Full-page illustration; no printed literary text.]
வித்தாரத் தமிழ் முழக்கும் அப்புலவர்; அவனது
முத்தார மார்பைத் தழுவிக் கொண்டார்!
தலையாலங்கானத்துப் போர்க்களத்தை - அத்
தமிழ்ப் புலவர் வர்ணிக்கும் விதம் பாரீர்!
கடும்பகை எதிர்த்துக் கணைகள் பறந்திட
திடுமெனச் சாய்ந்தன எதிரியின் யானைகள்!
வீழ்ந்த யானையின் துதிக்கையை அதன் வாயுடன்
வீர மறவர் வாளால் வெட்டிட; அவை துண்டாகிக்
களத்தினில் பரவிக் கிடந்திட்ட காட்சி;
கழனியோரத்துக் கலப்பைகள் போல் விளங்கிற்றாமே!
படைத்தலைவர் பல்லோர் மாண்டு மடிந்திட - அவர்
பக்கத்தே தம்புதல்வர் மரணமெய்திக் கிடந்தது கண்டு,
நெற்றித் தோலும் சுருங்கிய மூதாட்டியர் பலர்
சுற்றி நின்று அழுது புலம்பினர் எனினும்
வெற்றி இதனினும் வேறொன்று உளதோ என
வீர மைந்தரைப் பெற்றதற்குப் பெருமையுமுற்றனர்!
நெடுஞ்செழிய பாண்டியனின் அவைக்களத்துப்
பெரும்புலவர் மாங்குடி மருதனார் என்பவரோ;
கடும் போரிட்டுக் களவாகை சூடி வரும்
காளையாம் பாண்டியனின் திறம் வியந்து
களிப்புற்றார் எனினும் - அவன்
களம் காணும் ஆசையிலே சுழல்வது கண்டு
சலிப்புற்றார்!
மாவீரன் பாண்டியனின்
போர்த்தாகம் குறைக்க
“மதுரைக் காஞ்சி” யெனும் நூல் செய்தார் - அந்த
மாங்குடி மருதனார் பாடிய புறப்பாட்டில்;
“கடலைக் கிழித்துச் செல்லும் மரக்கலம் போல்
களத்தில் ஊடுருவும் யானைப்படையின் பின்னே
வேல்கொண்ட வீரர் அறுத்தெடுத்த
கோல் கொண்ட மன்னர்தம் தலையை அடுப்பாக்கி
குருதிநீர் பொங்குகின்ற உலையில் - போரில்
கொலையுண்டோர் தசையினைக் கொதிக்க வைத்து
தோள்களாம் துடுப்பு கொண்டு துழாவிய உணவால்
வேள்வி நடத்துகின்ற பாண்டியனே!” என்று,
பலபடப் பாராட்டிவிட்டு - அவனது
பகைவரையும் புகழ்கின்றார்!
மாற்றார் எனும் பெயர் பெற்று - உன்னிடம்
தோற்றார் எனினும்,
விழுப்புண் பெற்று வீழ்ந்ததாலே;
வீரர் உலகில் என்றும் அவர் வாழ்கின்றாரே! என
எதிர்த்தோர்க்கும் ஏற்றம் தந்து
உதிர்த்தார் கவி முத்துக்களை!
“வேந்தன் இனிப் போர் விடுத்து
வாள்வீரர் வாழ்த்த வாழ்க!” என்றார்!
“வள்ளலாய் நின்று இல்லாதார்க்கு வாழ்வளித்திடுக!” என்றார்!
“வளையல் அணி மகளிர் தரும் தேறல் உண்டு;
வாழ்வெலாம் இன்பமும் அமைதியும் கொண்டு,
வையம் போற்றிடத் திகழ்க!” என்றார்!
“ஒழுக்கம் காப்பவரே உயர்ந்து வாழ்வோர் என்றும்,
அஃதிலார்;
உலகில் வாழ்வோர் எனப்படார் என்றும்
அறிக!” என்றார்!
தமிழ்ப் புலவர் கூட்டம் புகழ,
தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் போற்ற
தலையாலங்கானத்தான் வாழ்ந்தான்!
மருதனார் இயற்றித் தந்த
“மதுரைக்காஞ்சி” பெற்று - அந்த
மாமன்னன் வாழ்ந்தான்!
“நெடுநல்வாடை”தனை நக்கீரர் பாடி வழங்க
நெடுஞ்செழிய இளவல் நெடிதுநாள் வாழ்ந்து
நீள்புகழைத் தமிழ் நிலத்தில் நட்டானே!
மூலக் குறிப்புகுறிப்பு:
மூலக் குறிப்பு- அகநானூறு பாடல் 36 — நக்கீரர் பாடியது.
- புறநானூறு பாடல் 25 — கல்லாடனார் பாடியது.
- புறநானூறு பாடல் 76 — இடைக்குன்றூர்க் கிழார் பாடியது.
- புறநானூறு பாடல் 19 — குடபுலவியனார் பாடியது.
- புறநானூறு பாடல்கள் 24, 26 — மாங்குடி மருதனார் பாடியது.
மூலக் குறிப்பு(இப்புலவர் பெருமக்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்து இயற்றிய பாடல்களில்
அடங்கியுள்ள கருத்துத் தொகுப்பே இது.)
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்