பகுதி 66 / 102
உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்திடுக!
அச்சுப் பக்கம் 321–325 · ஸ்கேன் 333–337 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 335
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.
உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்திடுக!
உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு
உமிவேறு அரிசிவேறாய்ப் பிரிவது போல்
உறவுதனை விரும்பாமல் உறுமுகின்ற எதிரிகளின்
உடல்வேறு தலைவேறாய் ஆக்குகின்ற வீரனவன்!
கூரிய வேல்முனையால் வைத்த குறி தவறாமல்
கொடும் பகைவர் குடல்கிழித்துத் தோரணம் கட்டுகின்ற
வீரியம் மிகக் கொண்ட வேந்தர் பெருந்தகையாம்
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழிய பாண்டியனவன்!
செந்தமிழைச் சிந்தையிலே குடிவைத்த காரணத்தால்
சீரிய நற்புலமை பெற்ற செழியர்குல வேந்தனவன்!
ஆராயாது தீர்ப்பளித்த அவசரத்தால்; கண்ணகியவனைத்
“தேரா மன்னா” எனத் தூற்றியதாய்க் கதையும் உண்டு!
நீதி இறந்ததென உணர்ந்தவுடன், தன்னுயிரை - அந்த
நீதிக்கே வழங்கி அதனை நடமாட விட்டானென்று;
இந்த நெடுஞ்செழிய பாண்டியனைத்தான் - சேர
இளங்கோவின் சிலம்பு புகழுமெனச் செப்பிடுவர்!
இம்மன்னன் வாழ்ந்தபோது பாண்டிநாட்டில்
இயற்கைவளம் நிறைவாகக் கொழித்ததங்கே!
செழிப்பு மேலும் நிலையாகக் குலுங்குதற்கு ஏற்றவாறு
செயல்முறைகள், திட்டங்கள் இயற்றி ஆண்டான்!
தென்பாண்டிக் கடல்முத்தும் தேனருவி மலையழகும்,
பொன்மாடக் கூடங்களும், பொலிவு தவழ் சோலைகளும்,
வளைந்தோடும் ஆற்றோரம் அமைந்துள்ள கழனிகளில்
விளைந்து சாய்ந்து காற்றில் சதிராடும் கதிர்களுமே;
நெடுஞ்செழியன் உளத்துக்கு முழுநிறைவைத் தரவில்லை!
நீள்வையம் பெறுகின்ற வளத்திலெலாம் சிறந்த வளம்;
நிற்காமல் ஊற்றெடுக்கும் கல்வி வளம் ஒன்றேதான்
எனக்கண்டு,
கற்காதோர் வாழும் நாட்டில் பிற வளமெல்லாம் பாழே
என்றான்!
பாசி படராமல் இதயத்தைப் பளிங்காக்கும் கல்வியினை
ஆசிரியப் பெருமக்கள் ஊட்டுகின்றார்; அதனாலே
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் - அக்
கற்றறிவாளரைக் காத்திடல் வேண்டுமெனத்
தொடங்குகின்ற புறப்பாடல் ஒன்றைத் தமிழன்னை - கழுத்தில்
தொங்கவிட்டழகு பார்க்க மாலையாகத் தொடுத்திட்டான்!
தோகையாம் கோப்பெருந்தேவியவள்; அவன்
தோள் தழுவிக் கொஞ்சி சில கேள்விகளைக் கேட்டறிந்தாள்!
“உற்றுழி உதவுதல் எனில் என்னவாம்; மன்னவா?” இது
முதல் கேள்வி!
“ஊறுபாடு ஒன்று ஆசிரியர்க்கு நேருமெனில்
உடன் சென்று துணை நிற்க வேண்டு” மென்றான்
நெடுஞ்செழியன்!
“உறுபொருள் கொடுத்தல் எனில் யாது பொருளோ?” எனக்
கேட்டாள்!
“ஊதியம் ஆசிரியர்க்கு மிகுதியாய் அளித்திட வேண்டும்”
என்றான், அந்த நெடுஞ்செழியன்!
“உற்றுழி உதவி, உறுபொருள் கொடுப்பதுடன்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!” என்றான்.
“அதற்கென்ன பொருள்” என்று; அரசியார் பொருள்
அறிந்திருந்தும் அவன் வாயால் கேட்க ஆவலுற்றாள்!
“வண்ணமயிலே! பிற்றை நிலை எனில் பிற்பட்ட நிலையென்றும்
வழிபாட்டு நிலையென்றும் பொருள்கள் உண்டெனினும்;
பெருந்துயரமெனும் பிற்பட்ட நிலை எய்திட்ட போதுகூட
திருமுகம் சிறிதும் சுளிக்காமல் கற்றல் நன்றென்பதாலேதான்
இனிதான அறிவுதனைப் பெற விழைவோர்
முனியாது கற்க வேண்டுமென எழுதியுள்ளேன்” என்றான்.
புன்னகையை நெளியவிட்டு அவன் முகத்தில் முகம் புதைத்து
மின்னொளிக் கன்னமிரண்டும் சிவப்பேறப் பூரித்துப்போய்;
“இன்னுமொரு ஐயப்பாடு மன்னவனே;
அன்னையொருத்திக்குப் பிறந்த பிள்ளைகளில்,
கல்வி கற்ற பிள்ளை - கல்லாப் பிள்ளை இவையிரண்டும்
அவளுக்கு
[Full-page illustration; no printed literary text.]
கண்கள் இரண்டைப்போல்தானே?” எனக் கேட்டாள்!
“பிறந்தார்கள் இருவர், ஒரு தாய் வயிற்றில் என்றாலும்
சிறந்தோனாய்த் தாய் எண்ணிச் சிந்தை குளிர்வதெல்லாம்
அறம், திறம் உணர்த்துக்கின்ற கல்வி நீரோடையிலே
அன்றலர்ந்த மலராக இருக்கின்ற அறிவார்ந்த மகனைத்தான்!”
என்று கூறிக்கொண்டே மன்னன் எழிலரசிமேல் சாய்ந்து
எண்ணத்தை ஓடவிட்டு மேலும் எழுதினான் ஓலையிலே!
“தாய்க்கு மட்டுமல்ல இந்த நிலை
தரணியாளும் அரசுக்கும் பொருந்தும்!
முன்வரிசைக்கு மதிப்பளிக்க வேண்டி,
மூடனாயிருந்தாலும் பரவாயில்லையென்று;
வீட்டுக்கு மூத்தோனை அழைத்து அறிவுரைகள் கேளாமல்;
நாட்டுக்கு நலம் பயக்கும் செயல்கள் குறித்து -
இளையவனாய் இருப்பினும், கல்வி கேள்வியில் யார்க்கும்
இளையாதவனாய்த் திகழ்பவனையே அரசும் அழைத்துப் பேசும்!
நாலுவகை மனிதர்களும் வாழுகின்ற நமது நாட்டில்
மேல்நிலை வாழ்வோரெல்லாம் மேலோர் அல்லர் - அன்றிக்
கீழ்நிலை வாழ்வோர் கீழோருமல்லர்! -
ஒரு
சூழ்நிலையாலே வந்தது இந்தத் தீவினையெனினும்,
கீழிருப்போன் கல்வி கேள்வியிற் சிறந்தோனாயின்
மேலிருப்போன், அவன்கீழ் இருப்பவனே ஆவான்!”
இதை எழுதி அரசியிடம் படித்தான் மன்னன்...... அவளோ;
இதழ்பொருத்தி அவன் இதழை ஈரமாக்கி;
“எழுதுகோல் பிடித்த விரல் எங்கே?” என்று
இழுத்து வைத்துக் கண்களிலே ஒத்திக்கொண்டாள்!
அகத்துறையின் சுகத் தென்றல் மணம் நுகர்ந்து ஆடினான்
மன்னவன்!
புறத்துறைக்குப் புதையல் போல கல்வியின் பெருமைதனைப்
பாடினான் அந்தத் தென்னவன்!
“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”
மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 183
பாடியவர் : ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன்)
பொருள் விளக்கம் :
உற்றுழி = துன்பம் நேர்ந்தபோது.
உறுபொருள் = மிகுதியான பொருள்.
பிற்றைநிலை = பிற்பட்ட நிலை அல்லது வழிபாட்டு நிலை.
முனியாது = வெறுப்புக் கொள்ளாமல்.
திரியும் = வேறுபடும்.
அவன்கட்படுமே = அவனுக்கு அடங்கியிருக்க நேரிடும்.
கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்