பொருளடக்கம்

சங்கத் தமிழ்

பகுதி 65 / 102

வீரனைப் பாடிய சேரன்!

அச்சுப் பக்கம் 316–320 · ஸ்கேன் 328332 · முழுப்பக்க ஓவியம்: ஸ்கேன் 329

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக; ஒவ்வொரு அச்சு வரியும் தனி வரியாக.

வீரனைப் பாடிய

சேரன்!

தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஆண்ட
திருமுடிக்காரியெனும் திருக்கோவலூர் மலையமானை
தன்னாட்சியின்கீழ் அகப்படுத்தத் திட்டமிட்டு
தகடூரான் அதியமான் அதில் வென்றும் விட்டான்.
தப்பிச்சென்ற திருமுடிக்காரி மன்னன்;
தஞ்சமெனக் கருவூர்ச் சேரனைச் சேர்ந்தான்!
காரிக்குக் கைகொடுக்கச் சேரனும் முன்வந்தான்!
களத்தினிலே அதியமான் நெடுமானுக்குத் துணையாக;
பாண்டிய சோழர்கள் அனுப்பி வைத்த நால்வகைப்
படைகள் பாய்ந்தோடி வந்தும் பயனேதுமில்லை!
தகடூர்த் தலைநகரைக் காக்க முடியாமற் போனாலும் போகட்டும்;
தன்மானம் காத்தத் தமிழனாவேன் என்று அதியமான் களத்தில்
உயிர்விட்டான்!

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை யெனத்
தமிழர் வரலாற்றில் கருவூர்ச் சேரன் இடம் பெற்றான்!
தடந்தோள் கொண்டு எதிரிகளைத் தகர்ப்பதன்றித்
தமிழ்த்தோள் கொடுத்து சங்க இலக்கியத்தைத் தூக்கியும்
உயர்த்தினான்!

வாளேந்திப் போரிட்ட நேரம் போக மீதி நேரம் - எழுதும்
கோலேந்தி அவன் வடித்த கவிதைகளோ ஏராளம்!
முத்துமணிக் கவிதைகள் முப்பதுக்கு மேல் - அவன்
கரம்பட்டுக் கலித்தொகையில் ஒளி உமிழும்!
“பாலைக்கலி” பாடியதால் அப்பெருஞ்சேரல் இரும்பொறையை
“பாலை பாடிய பெருங் கடுங்கோ” எனவும் பாராட்டி
அழைத்திடுவர்!
பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்துத் தலைவனாகப்
பாவாணர் அரிசில்கிழார் அவனை வைத்தார்!
நாமணக்க அவன் பாடிய கவிதைகள்
நற்றிணையில் நல்ல குறுந்தொகையில் - காதல்
பூமணக்கும் அகநானூறில் நிறைய உண்டு!
புகழ்மணக்கும் சேரமன்னன்; அருமைத்
தமிழ்நிலத்தை மட்டுமல்ல; அழியாத்
தமிழ்வளமும் சேர்த்து ஆண்டான்!

முழுப்பக்க ஓவியம் — அச்சிட்ட உரை இல்லை

[Full-page illustration; no printed literary text.]

அரிசில்கிழார், மோசுகீரனார்,
இளவெயினி, பொன்முடியார் என
அவனைப் பாடியோர் பட்டியல் நீளும் எனினும்
அவனே ஓர் இலக்கியப் புலவனாய் எழுந்து நின்றான்!

கடத்தற்கரிய காவல் அரண் பல கடந்தும்
களிற்றுயானைப் படைகளை அழித்தும்
வேற்படை, விற்படை, தேர்ப்படை எதுவாயினும் - அவன்முன்
தோற்பது உறுதியென வீரம் விளைத்தும்,
வெற்றிக் கொடியினைக் கருவூர்க் கோட்டையின்
நெற்றி முகப்பில் பறக்கவிட்டவன் - தன்
ஒருவன் திறத்தால் கிடைத்த புகழ் இதுவெனக்
கருவம் கொள்ளும் பழக்கமற்றவன்!

ஒருமுறை,
படையெடுப்பொன்றில் பல வீரரை இழந்து
தடையுடைத்துத் தனது கொடியினை எடுத்து
பகைவர் அரண்மனை வாயிலில் ஏற்றி
பட்டத்து யானையில் கருவூர் திரும்பினான்!
வழியிலோர் கிழவர், விழிதனை விரித்து
அழிவில் பகையைத் தள்ளித் திரும்பும்
முடியுடை மன்னன் சேரனை வாழ்த்தி
இடிமுரசறைவோர் பக்கம் நடந்து,
“இறந்தோர் போக எஞ்சியிருப்போரில்
என் மகனும் உளனோ?” என்றே கேட்டார்!

பாலைபாடிய பெருங்கடுங்கோ என்றும் - வெற்றி
வேலை ஏந்திய பெருஞ்சேரல் இரும்பொறை என்றும்
இலக்கியத்தில் இடம் பெற்ற இனமான வேந்தன் - யானை விட்டு
இறங்கி வந்து கிழவரின் இருகரம் பற்றிக் கொண்டான்!
“இனியவரே! முதியவரே! இளம்பிறை போல் உடல்
வளைந்தவரே!
என்ன வேண்டும் உமக்”கென்று வினவிடவே; அக்கிழவர்,
“பொங்குற்ற கடல்போலப் போருக்கு வந்த மகன்
எங்குற்றான் என அறியலாமோ?” எனக் கேட்டார்!

“பூமிதனில் குறைவாழ்வு வாழ்வதற்கு விரும்பிடாமல் -
நான் எழுதிய
புறப்பாட்டுக்குள் நிறைவாழ்வு வாழ்வதற்குப் புகுந்துவிட்டான்”
என்று,
இருவிழியும் ஊற்றெடுக்கச் சேர மன்னன் சேதி சொல்லி
நரைமுதிர்ப் பெரியவரின் முகம்பார்க்க நடுங்கி நின்றான்!

“நான் பெற்ற பயனையடைந்தேன் வேந்தே; நன்று! நன்று!
தேன் சொட்டும் தமிழில் என் மகனைக் குளிப்பாட்டி - இந்த
வையம் இருக்கு மட்டும் அவன் புகழ் விளங்க - நீர்
வடித்தெடுத்த புறப்பாடல் கேட்பின்; அவனை
வளர்த்த கைகளுக்குப் பொன் கடகம் பூட்டினாற்போல் - இன்னும்
வாழுகின்ற நான், உம்மை வாழ்த்திடுவேன்” என்றார்.

“எஃகு உளம் கொண்ட எனது வீரன்
எதிர் வரும் படையை வெற்றிகொள்ள
இன்னுயிர் தரவும் சிறு தயக்கமின்றி
ஈட்டிகள் வேல் வாள் அனைத்தையும் தாங்கி
இரு கூறாய் நெஞ்சம் பிளந்திட
எண்ணற்ற கணைகள் மொய்த்த உடலுடன் வீழ்ந்தபிறகும்
முன்னும் பின்னும் சூழ்ந்த பகைவர் - என்
கன்னல் நிகர்த்தானின் உயிரைப் போக்கினர்!
படைக்கலன் தடுக்கும் அவன் கேடயம்தனையும்
உடைத்த பகைவர்; பஞ்சு பஞ்சாய் - அவன்
தசைகளைச் சிதைத்துப் போர்க்களத்
திசையெலாம் பரப்பினர்!
எங்குளான் அவன் எனக் கேட்டீர் ஐயா!
இங்கவன் விளைத்த வீரச்செயலால் - இந்தப்
புவிதனில் வாழ்வதை விடுத்துப்
புலவர்தம் நாவினில் வாழ்ந்திடச் சென்றுளான்
அறிக” என்றான்.

புகழ்வானில் சிறகடித்துப் பறக்கின்றான் மகன் என்று
புவியாளும் வேந்தன் புறப்பாடல் முழக்கக் கேட்டு
புன்னகை மின்னிட நன்றி சொன்னார்; கிழவர்
புதுநடை, புலிநடை போட்டு நடந்தார்!

“எஃகு உளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளளை,
யாண்டுள னோ? வென, வினவுதி ஆயின்,
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றோ உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது, களத்துஒழி யாதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.”

மூல மேற்கோள்(புறநானூறு : பாடல் : 282
பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ)

பொருள் விளக்கம் :

அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளன் = அரிய கடமையினை
ஆற்றிய செயல்மறவன்.
கிளர்தார் அகலம் = கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பு.
அருங்கடன் இறுமார் வயவர் = தம் அரிய கடனாற்ற வந்த
பகைவர். மலையுநர் = போரிடுவோர். மடங்கி = திரும்பத் தாக்கி.
அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகை = காக்கும் நிலை
தவறிச் சிதைந்து தூளாகிய கேடயம். சேண் = நெடுங்காலம்.

கலைஞர் மு. கருணாநிதி · சங்கத் தமிழ். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்